ஆளுநரின் கொட்டத்தை அடக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
பாணன்
மக்கள் நலம் சார்ந்த மசோதா ஒப்புதல் கொடுங்க.
ஆளுநர்: பார்க்கலாம்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக செய்து வந்த அழிச்சாட்டியத்திற்கு அடி கொடுக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த வழக்கை உறுதியான சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாடு முதலமைச்சர் வென்றிருக்கிறார். வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்நாட்டையும் கடந்து இந்தியா முழுமைக்கும் ஆளுநர்களின் அராஜகத்திற்கு கடிவாளம் போட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை போராடி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் இந்தியா முழுக்க முக்கிய செய்தியாளர்.
ஏற்கெனவே மும்மொழிக் கொள்கை வேண்டாம், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் அடித்தாடும் ஆட்டம் தான் இந்தியா முழுமைக்கும் பேசு பொருளாகி யிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பற்றி தெரியாத இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளைப் பார்த்து யார்ரா இவரு.. பாஜக வை இந்த அடி அடிக்கிறாருனு பேசிக் கொள்கிறார்கள்.
தேசிய ஊடகங்களும் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்பதைத்தான் நாள்தோறும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என முழுவெற்றியை பாஜகவிற்கு எதிராக தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு அடியும் ஜனநாயக ரீதியில் எடுத்துவைத்து பாஜகவின் கொட்டத்தை அடக்கி வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்தி அதன் மூலம் நாடு முழுவதும் மாநிலங்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக் கூடியவராக முதலமைச்சர் மாறியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டை போலவே கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களை இயங்காமல் செய்துக் கொண்டிருந்த ஆளுநர்களின் அராஜகமும் முடிவுக்கு வரப் போகிறது.
இதனால் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தீர்ப்பை வரவேற்று ட்வீட் போட்டார்.
• • • • •
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு
சட்டமன்ற அதிகாரங்களை கைப்பற்றும் ஆளுநரின் போக்குக்கு எதிரான எச்சரிக்கை!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
தமிழ்நாடு ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநர் ரவியின் நடவடிக்கை தவறானது மற்றும் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரள மாநில மேனாள் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிக் காலத்தில், மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்து இதேபோன்ற நிலையை கேரளாவும் எதிர் கொண்டது.
நீங்க கொடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம்.
ஆளுநர்: நோ பிராப்ளம்.
எச்சரிக்கை!
இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூட்டாட்சி முறையையும் சட்டப் பேரவையின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துவதாகக் கூறினார்.
“ஆளுநர்கள் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட கடமைப்பட்டுள்ளனர் என்பதை உச்ச நீதிமன்றம் கடந்த காலத்தில் பல முறை தெளிவுபடுத்தி யுள்ளது. 8.4.2025 அன்றைய தீர்ப்பில், மசோதாக்களை உறுதிப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது. இந்த தீர்ப்பு, சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் கைப்பற்றும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகும். இது ஜனநாயகத்தின் வெற்றி” என்று பினராயி விஜயன் கூறினார்.
“கேரளாவிலும் இதேபோன்ற நிலை உள்ளது, அங்கு 23 மாதங்கள் வரை கூட மசோதாக்களுக்கான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மாநிலம் இதற்கு எதிராக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த தீர்ப்பு கேரள மாநில உரிமைப் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.
• • • • •
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டார். இதனால் தமிழ்நாடு அரசு, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பிய ஆளுநர் முடிவை ரத்து செய்து, மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு எதிரானது மட்டும் அல்ல; ஆளுநர்களை திரைமறைவில் இயக்கி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான ஒன்றியத்தில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் எச்சரிக்கைதான். இதுநாள் வரை, ஆளுநர்கள் விவகாரத்தில் இருந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைத்துவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள்: உங்கள் கோரிக்கை நியாயமானது. நாங்கள் ஒப்புதல் தருகிறோம். இதோ உங்கள் மசோதாக்கள்.
காலக்கெடு
மாநில அரசுகள் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடுவும் நிர்ணயித்துவிட்டது. இதுவும் இனி எந்த குழப்பங்களும் ஏற்படாமல் இருக்க உதவும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்ய பாஜக முயற்சித்து வருகிறது. இது ஜனநாயக விரோதம். கருநாடகா ஆளுநரும் மாநில அரசின் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார்; குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும், கருநாடகா மாநில அரசு, பொறுமையைக் கையாண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நல்ல வழிகாட்டுதலை வழங்கும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.