சென்னை, ஏப்.10 உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்:- தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப் பேற்ற நாளி லிருந்தே தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருவதையும், அரசியல் சாசனத்தின் மாண்புகளை மீறி தன்னிச்சையாக செயல்படுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் கண்ணியத்தை குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதோடு, தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு ஒப்புதல் அளிக்காமலும் காலம் தாழ்த்தி வந்தார்.
தற்போது உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அரசையும் பாராட்டுகிறோம்.
மேலும் அரசியல் சாசனத்திற்கும், தமிழ்நாட்டின் நலன்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும்.
இந்திய கம்யூ னிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:- தமிழ்நாடு ஆளுநர் ரவி அதிகார அத்து மீறலில் ஈடுபட்டு, தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்ப தாக ஆணவக்கொடி பிடித்து ஆடி வந்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புகளையும், மரபு களையும் உடைத்து அவமதித்து வந்தார் சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் உரிமையை நிராகரித்து, தமிழ்நாடு எதிர்த்து வரும் புதிய கல்விக்கொள்கையை குறுக்கு வழியில் திணித்து, செயல்படுத்தும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
உச்சநீதிமன்றம் ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு சம் மட்டி அடி கொடுத்துள்ளது. இப்படி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநில உரிமைகளை பாது காத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் பல வகைகளில் அரண் அமைத்துக் கொடுத்துள்ளது. அதிகார அத்துமீறல் குற்றம் புரிந்துள்ள, அரசமைப்பு கடமை பொறுப்புகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்திய ஆளுநர் ரவியை தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:- தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங் களும் உள்ளது என்றும், நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறி வந்ததை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அரசமைப்பை நீர்த்துப்போகச் செய்யும் பா.ஜனதா வின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு. தீர்ப்பு மூலம் அரசமைப்பு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை வரவேற்கிறோம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலு வையில் வைத் துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் கவர்னர் தாமதம் செய்கிறார். மசோதாக்கள், அரசாணைக ளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப் படி தவறு. ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் எதிரி போல் செயல்படுகிறார்.
இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்சநீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்.
அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் காதர் மொய்தீன். மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, அகில இந்திய காமராஜ் காங்கிரஸ் கட்சியின் மணி அரசன் ஆகியோர் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.