ஓ.பி.சி. பிரிவினர் ரூ.55,000, எஸ்.சி. பிரிவினர் ரூ.27,500 கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
ஒன்றிய கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் புதுடில்லியில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் குறித்த விவரத்தை அக்கல்லூரி வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ. 55,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பட்டியலின (எஸ்சி/எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள பிரிவினர்களுக்கு, ரூ.27,500 வசூலிக்கப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, உயர்ஜாதி ‘அரியவகை ஏழைகள்” (EWS) பார்ப்பன மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சமூக ரீதியாக, கல்வி ரீதியாக வரலாற்றில் அநீதி இழைக்கப்பட்ட ஓபிசி, எஸ்.சி. எஸ்டி பிரிவினர்களுக்கு எந்தவித சலுகையும் இல்லை; ஆனால், ஆயிரம் ஆண்டுகளாக மனு சாஸ்திரத்தின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனர்களுக்கு, ‘ஏழைகள்’ என்ற போர்வையில், கட்டணம் ரத்து என்பது எந்த
வகையில் நியாயம்?
தேசிய தரவரிசை குறித்து NIRF வெளியிட்ட அறிக்கையில், 445 உயர்கல்வி நிறுவனங்களில் உயர் ஜாதிகளைச் சேர்ந்த அரிய வகை ஏழைகள் (EWS) மாணவர்கள் 28 விழுக்காடு உள்ளனர் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன; கிட்டத்தட்ட 50 விழுக்காடு NIRF தரவரிசையில் உள்ள கல்வி நிறுவனங்களில், அவர்களின் பிரதிநிதித்துவ பங்கு 20 விழுக்காடுக்கும் அதிகமாக உள்ளது. ஏற்ெகனவே 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக பங்கீட்டை பெறும் ஒரு கூட்டத்திற்கு மேலும் கட்டணம் ரத்து என்பது அநீதி மட்டுமல்ல; ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மோடி அரசு இழைக்கும் துரோகம் என்பது வெளிப்படை.
இது குறித்து நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்ப வேண்டும். ஓபிசி, எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் முற்றிலும் ரத்து செய்திட கோரிக்கை எழுப்ப வேண்டும்.
பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு வந்தாலும் வந்தது; அது முதல் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டுவதில் மண் வெட்டியைத் தூக்கிய வண்ணமாகவே உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்ட போதே இடஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கே என்று வரையறை செய்யப்பட்டது. பொருளாதார அளவுகோல் நிராகரிக்கப்பட்டது. நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்ற சியாம பிரசாத் முகர்ஜி (ஜனசங்கம்) இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஆவார். வாக்கெடுப்பில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.
உண்மை இவ்வாறு இருக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் பொருளாதார அளவுகோலைத் திணித்ததே சட்டப்படி தவறானதாகும்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்ததுபோல, இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதறடித்து பொருளாதாரத்தில் உயர்ஜாதி அரிிய வகை ஏழைகள் (EWS) என்ற ஒன்றை சட்ட விரோதமாகத் திணித்து, மீண்டும் உயர்ஜாதி ஆதிக்கத்திற்கு வகை செய்யப்பட்டு விட்டது.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த எழுச்சியே இதற்கொரு முடிவை ஏற்படுத்த முடியும்! அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை யிலேயே சமூகநீதிதான் முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.