டாக்டர் கரீனா கார்லண்ட் எம்.பி., டாக்டர் மிஷெல் ஆனந்தராஜா எம்.பி., தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் ஜான் முலாலே எம்.பி. ஆகியோர்.
மெல்போர்ன், மார்ச் 24 ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் 22.3.2025 அன்று மாலை ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சிறப்பான ஏற்பாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர்
அ. அருள்மொழி அவர்களும் பங்கேற்ற உலக மகளிர் நாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
ஆசிரியர் அவர்கள் அரங்கில் நுழையும்போதே தமிழர் தலைவர் வாழ்க!! என்று தோழர்கள் தாயுமானவன் பாஸ்கரனார் தலைமையில முழக்கம் எழுப்பினார்கள். இவ்விழாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, டாக்டர் கரீனா கார்லண்ட், ஜான் முலே ஆகியோர் கலந்து கொண்டு ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி உரையாற்றினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அறிமுகத்தை தோழர் மிதுன் ஆங்கிலத்தில் வழங்கினார்.
அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி “தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் பெரியார்” என்ற புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்பாட்டாளர் அரங்க. மூர்த்தி அவர்கள் வரவேற்று உரை ஆற்றினார்.
அதையடுத்து, பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தினுடைய தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் தலைமை உரையில் ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார். குறிப்பாக
“ஜாதிப்பாகுபாடு” பின்பற்றப்படுவதை நிறவெறிக்கு இணையான செயலாக ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் முதல்முறையாக அறிவித்திருப் பதையும், அதேபோல், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிறப்பு மதக் கல்வி என்கிற பெயரில் அரசுப் பள்ளிகளில் ஸநாதன கல்வி பயிற்றுவிப்பதை எதிர்த்து பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் என்னென்ன செயல்களை முன்னெடுக்கின்றது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் மெல்போர்னைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரம்யா மனோகரன், நாடகத்துறை செயற்பாட்டாளர் ரேணு கிருஷ்ணபாபு, இலக்கியச் சொற்பொழிவாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள்.
எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினார். தொடர்ந்து கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உரையாற்றினார்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறப்புரை ஆற்றினார். அவருடைய உரையில் தமிழ்நாட்டில் இருந்து கல்வியால் உயர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு வந்து வாழும் தமிழர்களின் சிறப்பான வாழ்வைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் திராவிட இயக்கத்தின் உழைப்பால் பலன்பெற்று அதற்கான நன்றி உணர்வுடன் கூடியிருப்பதற்காக அவர்களைப் பாராட்டினார். பெண்களுக்கு பிறக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டதையும் பெண்களின் வாழ்வுரிமைகளுக்காக தந்தை பெரியார் இயற்றிய தீர்மானங்களையும் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட உரிமைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தன் பதவியைத் துறந்தது குறித்தும் குறிப்பிட்டு விளக்கினார். ஆசிரியருடைய உரையினை ஆழ்ந்த கவனத்துடன் கூட்டத்தினர் கேட்டனர்.
இறுதியாக பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இதுவரை ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் மகுடம் வைத்தது போல் மெல்போர்ன் நிகழ்ச்சி அமைந்தது.
இந்த நிகழ்ச்சிகளை பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் ராதிகா தொகுத்து வழங்கினார்.