அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றிய அராஜக பிஜேபி ஆட்சி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

viduthalai
2 Min Read

புதுடெல்லி, மார்ச் 24- டில்லியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர், மற்றும் பகத்சிங் படங்களை அகற்றினர் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இந்தியா

பகத்சிங் நினைவு நாள்

விடுதலை போராட்ட வீரர்களான பகத்சிங்,ராஜ் குரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாள் நேற்று (23.3.2025) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேனாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஒன்றிய – மாநில பா.ஜனதா அரசுகளை கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

அம்பேத்கர் படம் அகற்றம்

பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் நமது முன் மாதிரிகள். ஆங்கிலேயர்களை அகற்றினால் மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் நம்மவர்கள் ஆங்கிலேயரை விட மோசமாக இருப்பார்கள் என்றும் பகத்சிங் அடிக்கடி கூறுவார்.
அவரது கணிப்பு மிகச் சரியாக நடந்துள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம். டில்லியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை அகற்றி இருக்கிறார்கள். பகத்சிங்கை விட இந்தநாட்டுக்காக அதிக தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்களா?

அதிகாரத்துக்காக வரவில்லை

அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் கனவுகளை நனவாகவே ஆம் ஆத்மி அரசியலுக்கு வந்து இருக்கிறது. அதிகாரத்துக்காக வரவில்லை.
டில்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தில் மாநில அரசு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. அலைபேசி செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே இலவச பயணச் சீட்டுகளை பெண்களுக்கு வழங்குகிறார்கள். பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே இருப்பதையே திரும்பப் பெற்று வருகின்றனர். மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், பா.ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இரு மடங்கு பலம்

கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் பேசும்போது, ‘டில்லியில் பா.ஜனதாவின் தந்திரத்தால் நமது தோல்வி நிகழ்ந்தது. ஆனால் நமது பலமே அர்ப்பணிப்பு மிகுந்த தொண்டர்கள்தான். நமது கதை முடிந்து விட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாடு முழுவதும் இரட்டை பலத்துடன் நாம் திரும்ப வருவோம்’ என சூளு ரைத்தார்.

நிகழ்ச்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட டில்லி மாநில ஆம் ஆத்மி தலைவர் சவுராப் பரத்வாஜ், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *