அரக்கோணம், மார்ச் 23-, அரக்கோணம் அருகே அடுத்தடுத்த இரு கோயில்களில்ப பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்னல் கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இதனருகே ஆனந்தவல்லி சமேத ஆனத்தீசுவரர் கோயிலும் உள்ளது. இக்கோயில்கள் வழியாக கடந்த 21.3.2025 அன்று காலை சென்ற அப்பகுதி மக்கள், இரு கோயில்களின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருப்பதை பார்த்தனர். இது குறித்து கோயில் நிர்வாகிகளுக்கும் மற்றும் அரக்கோணம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாரையால் கோயில் கதவின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அதில் உள்ள பணம், நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கோயில்களில் உள்ள கண்காணிப்பு கேமரா ஷார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து அரக்கோணம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 குழந்தை திருமணங்கள்
புவனேஸ்வரி, மார்ச் 23 இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 18 வயதுக்கு உட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண் திருமணம் செய்து கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனால் இந்த சட்டத்தை மீறி ஒடிசா மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தை திருமணங்களாவது நடந்து வருவது தெரியவந்துள்ளது.
விழிப்புணர்வின்மை
அங்கு கடந்த பிப்ரவரி வரையிலான முந்தைய 6 ஆண்டுகளில் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 1,347 திருமணங்கள் நபராங்கபூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன. மாநிலத்தில் குழந்தை திருமணம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக, குழந்தை திருமணத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் நம்ரதா சதா கூறியுள்ளார்.
பழங்குடியினர்
அதாவது, பழங்குடியினர் குறிப்பாக மிகவும் பின்தங்கிய பழங்குடியின குழுக்களில் குழந்தை திருமணம் ஒரு பாரம்பரிய நடைமுறையாக உள்ளது. இதைப்போல வாழ்வாதாரத்துக்காக அடிக்கடி இடம்பெயரும் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்காக அவர்கள் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்குள்ளேயே திருமணத்தை முடித்துவிட்டு இடம்பெயர்கிறார்கள்.
மேலும் தங்கள் பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி வேறு யாருடனும் சென்றுவிட்டால், தங்கள் குடும்பத்துக்கு அவமானம் எனக்கருதி குறைந்த வயதிலேயே திருமணத்தை முடித்து விடுகின்றனர். இதைத்தவிர வரதட்சணை போன்ற கூறுகளும் இந்த குழந்தை திருமணத்துக்கு காரணமாகி விடுவதாக நம்ரதா கூறியுள்ளார்.
தீவிர நடவடிக்கை
இதற்கிடையே குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த மாநில அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பஞ்சாயத்து, ஒன்றியம் மற்றும் அங்கன்வாடி மட்டத்திலேயே 3 மாதங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த துறைக்காக பல்வேறு அதிகாரிகளை நியமித்து மாவட்டம், மாநில அளவில் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.