இரவில் மதுக்கூடம் – பகலில் பள்ளிக்கூடமா?
மது போதையில் பள்ளியில் நுழைந்து
மாணவ, மாணவிகளை அடித்துவிரட்டும் அவலம்!
லக்னோ, மார்ச் 17 உத்தரப்பிரதேசத்தில் பள்ளி வகுப்பறைகள் இரவு நேரங்களில் மதுபானக் கூடங்களாக மாறி வருகின்றன.
உ.பி. மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு பள்ளி யில் நடந்த அசிங்கம் காட்சிப் பதிவாக பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
பள்ளிக்கூடமா?
பன்றிகள் படுத்துப் புரண்ட சகதியா?
காலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால், பள்ளிக்கூடமா? பன்றிகள் படுத்துப் புரண்ட சகதியா? என்று நினைக்கும் அளவுக்கு வகுப்பறைகள் அலங்கோலமாகக் காணப்படுகின்றன.
இது தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (15.3.2025) இதேபோல் போதை நபர்கள் வகுப்பறைகளில் குழந்தைகள் அமரும் மேஜைகளில் அமர்ந்துகொண்டு, ஆசிரி யர்களை மோசமான வார்த்தைகளால் அவ மானப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர் ஒருவர் இதனை தனது அலைபேசியில் படம் பிடித்தார். அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் பள்ளி மேஜையில் உறங்கிக்கொண்டு இருந்த போதை நபர்கள், ஆசிரியர்கள் வந்த பிறகு ஒருவர் பின் ஒருவராக வெளியேறுகின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு ஊரில் செல்வந்தர் ஒருவரின் மகனான விஜயகுமார் என்பவர் மதுபாட்டிலை இடுப்பில் சொருகியபடி, மேலாடை இல்லாமல் வகுப்பறையில் நுழைந்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை மிரட்டினார்.
‘‘நீங்கள் ஏன் பள்ளிக்கு வருகிறீர்கள்? ஊரில் வயல் வேலை மாடுகளை கவனிக்க ஆட்கள் இல்லை’’
சட்டையைக் கழற்றி, பள்ளியில் இருந்த மேசை மீது அமர்ந்து, மாணவ, மாணவி களைப் பார்த்து, ‘‘நீங்கள் ஏன் பள்ளிக்கு வருகிறீர்கள்? ஊரில் வயல் வேலை, மாடு களை கவனிக்க ஆட்கள் இல்லை’’ என்று கூறி, மாணவ, மாணவிகளைத் திட்டியபடி வகுப்பறையிலிருந்து அவர்களைக் கட்டா யப்படுத்தி வெளியேற்றினார். தடுத்த சில ஆசிரியைகள் மீது தாக்குதல் நடத்தினார். விஜயகுமாரின் செயல்களால், பள்ளியில் இருந்த குழந்தைகள், ஆசிரியைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உதவிக்காக கூச்சலிட ஆரம்பித்தனர்.
போதை நபர் ஊரின் முக்கிய பிரமுகரின் மகனாகையால், ஊர்த் தலைவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவனது செயல்களால் அதிர்ச்சியடைந்த உதவி ஆசிரியை, துணிச்ச லுடன் முழு நிகழ்வையும் தனது அலைபேசி கேமராவில் பதிவு செய்தார். அந்தக் காட்சிப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், அவன் மிரட்டல்களை விடுத்து, அநாகரிகமாக நடந்து கொள்வது தெரிகிறது. மேலும் யோகியிடம் கூட(உபி சாமியார் முதலமைச்சர்) போய்ச் சொல்லுங்கள் என்று பேசி மேஜையில் படுத்து விடுகிறார்.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்
தமிழ்நாடு ஏதோ டாஸ்மாக்கால் அழிந்து வருகிறது; எங்கு பார்த்தாலும் சாராயம் வழிந்தோடுகிறது என்று ஓலமிடும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றன?