புதுடில்லி, மார்ச் 15 100 நாட்கள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் ஊதியத்தை சீராக உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கிராம மேம் பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஒரே ஊதிய முறை
வாழ்க்கைத் தரத்துக்கான செலவு அதிகரித்துள்ளதையடுத்து, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான ஊதிய முறை தேவை, ஊதியத்தை உயர்த்தும்போதும் ஒரே சீராக உயர்த்துதல் தேவை என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தற்போது நாகாலாந்து, அருணாச்சல்பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.234 தரப்படுகிறது, அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.374 தரப்படுகிறது. இந்த ஊதியம் இப்போதுள்ள விலைவாசி ஏற்றத்துக்கும், வாழ்க்கை நடை முறைக்கும் போதாது என்பதால் இதை உயர்த்த வேண்டும், சீரான அளவில் கூலி உயர வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சப்தரிகிரி சங்கர் தலைமை யிலான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையில் “வேளாண் தொழிலாளர்களுக்கு தற்போது நுகர்வோர் விலை பணவீக்கத்தின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இந்த விலைவாசி உயர்வு துல்லியமாக பணவீக்கத்தை மதிப்பிடாது, முழுமையாக பணவீக்கத்தின் தாக்கத்தை எடுத்துரைக்காது.
கூலி உயர்வு
ஆதலால், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கூலி உயர்வு உண்மையான பொருளாதார சூழலுக்கு ஏற்பட, வாழ்த்தைத் தரத்துக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் 100நாட்கள் வேலைத் திட்டத்தில் கூலி சீராக இல்லை, இதை ஒரேசீராக்கி, கூலி உயர்த்துவதையும் சீரான விகிதத்தில் உயர்த்த வேண்டும்.
விடுவிக்க வேண்டும்
ஒன்றிய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் ஊதிய வழங்குதலில் நியாயத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவும். அதே சமயம், 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் இன்னும் தொழிலா ளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிலுவை இருக்கிறது, ரூ12,219 கோடி ஊதிய நிலுவையும், தள வாடங்கள் வகையில் ரூ11,227 கோடியும் என மொத்தம் ரூ.23,446 கோடி நிலுவை இருக்கிறது. இதை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு அடுத்த நிதி யாண்டுக்கு ஒதுக்கிய 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கான நிதி ரூ.86 ஆயிரம் கோடியில் ஒரு பங்கு கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை வழங்கவே போது மானதாக இருக்கும். அப்படி யிருக்கும் போது உண்மையான நிதி என்பது இந்தத் திட்டத்துக்கு ரூ.65,553 கோடிதான்.
இவ்வாறு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.