பெங்களூரு, மார்ச் 15- கருநாடகாவில் கதக் அருகே ஹோலி கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது ஒரு கும்பல் ரசாயனம் கலந்த வண்ணப்பொடியை வீசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வண்ணப்பொடி வீச்சு
கருநாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று (14.3.2025) ஹோலி பண்டிகையின்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர் கும்பல் அந்த மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசினர்.
இதனால் 7 பேருக்கும் மூச்சு திணறல், இருமல், நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளை கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ரசாயன நீரில் மாட்டு சாணம், முட்டை, பினாயில் கலந்து மாணவிகள் மீது வீசியது தெரியவந்துள்ளது. இந்த ரசாயன நீர் மாணவிகளின் வாய், மற்றும் மூக்கின் வழியே உள்ளே சென்றதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின்
தொழில் முனைவோர் மேம்பாடு
வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி முகாம்
சென்னை, மார்ச் 15- தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 4 நாட்கள் பயிற்சி வரும் 19.03.2025 முதல் 22.03.2025 தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: மாவட்டத் தொழில் மய்யம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். விருதுநகர் மாவட்டம்.
பயிற்சி
இப்பயிற்சியில் ஏற்றுமதி பன்னாட்டு வர்த்தகத்தின் அடிப்படைகள், சந்தையின் தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், வெளிநாட்டு செலாவணியின் மாற்று விகிதங்கள். உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் பற்றியும் விளக்கப்படும். அத்துடன் நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று பார்வையிடுதல் மற்றும் வேர் ஹவுஸ் பேக்கிங் ஷிப்பிங் நடைமுறைகள் நேரடியாக பயிற்சி வழங்கப்படும்
ஏற்றுமதி தொழில்
ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் 9566849767/ 90806 09808. கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்தவுடன் அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.
அரசுப் பணியாளர்கள் விபத்தில் இறந்தால் ஒரு கோடி ரூபாய் நிதி
தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, மார்ச் 15- அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடியும், இயற்கை மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வங்கிகள் வழங்கிடும்.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் வழங்கிடும். அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வங்கிகள் வழங்கிடும்.