சில நாட்களுக்கு முன்பு சிம்பொனி இளையராஜா ஊடகவியலாளர்களுக்குக் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைதளத்தில் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகுதான் அவ்வளவு சிறந்த பாடலில் மண்ணின் மைந்தர்களின் இசை இருக்கிறது என்பதற்காக இனிமையான பாடல் அடங்கிய அந்த படப் பாடல்களை அகில இந்திய வானொலியில் இசைக்கவில்லை என்ற உண்மை தெரியவந்தது.
அது “கேட்டேளா இங்கே அதைப் பார்த்தேளா அங்கே” என்ற பாடல்.
பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பறைஇசைக்கு ஆடுவது போன்ற அந்த பாடல் 1970 காலகட்டத்தில் ஒரு புரட்சிதான்.
இதுபோன்றுதான் டி.எம். சவுந்தரராஜனும் பல்வேறு பகுத்தறிவுப் புரட்சி மிகுந்த பாடல்களைப் பாடியுள்ளார்.
ஆனால், பார்ப்பனியத்தின் பிடியில் இருந்த ஊடகங்களும் இதர மக்கள் தொடர்பு சாதனங்களும் அந்த பகுத்தறிவுப் புரட்சிப் பாடல்களை மக்களிடையே கொண்டு செல்லாமல் மறைத்துவிட்டன.
டி.எம்.எஸ். மிகவும் புரட்சிகரமான பாடல்களைப் பாடியுள்ளார்.அநேகமாக கருப்பு வெள்ளையில் நாட்டுப்புற மக்களின் வலியைப் பாடலாக பாடிய முதல் பாடல்.
‘நத்தையில் முத்து’ என்ற திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தொடர்பான கதை, இந்த படத்தின் வசனங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளது. இதில் வரும் ‘நில்லப்பா…’ என்ற பாடல் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை நாட்டுப்புறப் பாணியில் அப்படியே பாடிக் காண்பித்திருப்பார்.
ஆண் : பள்ளுப்பறை என்று சொல்லக் கூடாதென்று சட்டங்கள் போட்டாங்க ஏட்டிலே – பல சலுகைகள் தந்தாங்க நாட்டிலே ஆனால் எல்லார்க்கும் வழிவிட்டு ஏறாமல்தான் மட்டும் இருக்கின்ற ஏணிப் போல் – தேனப்பா இந்த இனம் மட்டும் இருப்பது ஏனப்பா……
ஆண்: அரசியல் சாசனம் ஆக்கி அளித்த நம் அம்பேத்கர் ஜாதியில் ஹரிசனம் அவர் அறிவுக் களஞ்சியம் அறியணும்.
ஆண்: இன்னும் அறியாரும் புரியாரும், சிறியாரும் பெரியாரும் கரடியாய் கத்தியும் என்னப்பா அதை கருத்தினில் சொல்லாட்டி வீணப்பா….
இப்பாடலில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் கருத்துக்களையும் அரசு ஏற்படுத்திய சட்டங்களைக் குறித்தும் தன்னுடைய வளமான குரலில் பாடியிருப்பார்கள்.
இதுமட்டுமல்ல மனிதனும் இங்கே மிருகமும் இங்கே கொஞ்சக் காலம் – நீ பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் கொஞ்சக் காலம் – பொல்லாத உலகில் பொருள் சேர்த்தாலும், பூமியை படைத்தது சாமியா, அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு போன்ற பாடல்களோடு அவர் பாடிய பாடல்களில் 40க்கும் மேல் மிகவும் புகழ்பெற்ற பகுத்தறிவுப் பாடல்கள் – முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வந்த போதும் அப்பாடலில் பகுத்தறிவு கனல் இருக்கிறது என்பதற்காகவே அன்றைய தூர்தர்ஷன் மற்றும் ஆகாசவாணி சென்னை வானொலி போன்றவை முழுமையாக மறைத்துவிட்டன.
சமூகவலைதளங்கள் வந்த பிறகு தற்போது அப்பாடல்கள் மீண்டும் உயிர்பெற்று இளம் தலைமுறைகளிடையே போய் சேர்ந்துகொண்டு இருக்கிறது.
டி.எம்.எஸ். என்றாலே நெற்றி நிறைய பட்டைபோட்டு ஆன்மீக பாடலின் உருவமாக இதுவரை நமக்கு காட்டிவந்த பிம்பத்தின் பின்னால் அவர் ஒரு பகுத்தறிவுப் பாடல் நாயகர் ஆகும். சிம்மக்குரலோன் டி.எம்.சவுந்தரராஜனுக்கு, அவரது சொந்த ஊரான மதுரையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ் திரையுலகத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடல்கள் பாடிய கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரரான டி.எம்.சவுந்தரராஜன், கடந்த 1923ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். கடந்த 1950ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தனது குரல் வளத்தால் தமிழ் இசையுலகில் கொடிக்கட்டிப் பறந்தார்.
அவரது 102ஆவது பிறந்த நாள் இந்த மாதம் வரவிருப்பதை அவரது ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாட இருப்பது சிறப்பான ஒன்று.
தந்தை பெரியாரிடம்
பாராட்டு பெற்றவர் டி.எம்.எஸ்.
தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றிற்காகவும் ஏராளமான பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனங்களை கவர்ந்தார். மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இவரை தமிழ்நாட்டு மக்கள் ‘சிம்மக்குரலோன்’ என அழைக்கின்றனர்.
இசை அமைப்பாளர்களிடம் பகுத்தறிவுச் சொற்களை நீக்காமல் அதனை மெருகேற்றிப் பாடுவதற்கு சண்டை போட்டவர் டி.எம்.சவுந்தரராஜன். அன்றைய திரைப்படங்களின் காமிரா திரையை அகற்றுவதற்கே சகுனம், நல்லநேரம், பூஜை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் நாத்திகப் பாடல்களை சிறிதும் மனம் கோணாமல் பாடி திராவிட இயக்கத்திற்கு முரசாக ஒலித்தவர். அதற்காக சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டவர். இவரது வாழ்க்கை வரலாற்றை அவர்களோடு இருந்த ஜெயராஜ் அவர்கள் படமாக்கி, இயக்கி தயாரித்துக் கொண்டுள்ளார். விரைவில் அது வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.