புதுடில்லி, மார்ச் 14- தொகுதி மறுசீரமைப்பின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக வலி யுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மக்களவையில் 12.3.2025 அன்று கேள்விநேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில்வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் முன்வைத்த கோரிக்கை வருமாறு:
தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது
தொகுதி மறுவரையறை பணி யின்போது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத் தொகுதிகள் பலவற்றை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.அதேவேளையில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தாத உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இது ஜனநாயகத்தின் கூட்டாட்சி உணா்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கவலையை அளிப்பதாக உள்ளது. வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களைத் தண்டிப்பதாக உள்ளது.
அதேவேளையில், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங் களுக்கு வெகுமதி அளிப்பதாக உள்ளது.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிய அரசின் அணுகுமுறை தெளிவாக இல்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதிலும், பொருளாதார வளா்ச்சியிலும், சமமான வளா்ச்சியிலும் தமிழ்நாட்டின் நீடித்த முயற்சிகளையும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது.
நடப்பு மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வது, தமிழ்நாட்டில் தொகுதிகள் இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியளிப்பதில் எந்த தெளிவும் இல்லை. ஆகவே, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் அனைத்து மாநிலங்களின் சமமான பிரதிநிதித்துவத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.