சென்னை, மார்ச் 14 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
2025–2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று (14.3.2025) காலை 9.30 மணியளவில் கூடியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்த பின்னர், காலை சரியாக 9.30 மணிக்கு அவை நிகழ்வு தொடங்கியவுடன், பேரவைத் தலைவர் மு.அப்பாவு எழுந்து, 2025–2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பேரவைக்கு அளிப்பார் என அறிவித்தார். அதையொட்டி, நிதியமைச்சர் எழுந்து, 181 பக்கங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்தார்.
அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, பேசத் தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஒரு பிரச்சினை குறித்து பேச முற்பட்டனர். அதற்குப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்; நாளை வேளாண் துறை அறிக்கை தாக்கல் முடிந்தவுடன், உங்களுக்குப் பேச அனுமதிக்கிறேன் என்றார். அதற்கு சம்மதிக்காமல், அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.