மதுரை, மார்ச் 12- மதுரை சிந்தனை மேடையின் சார்பாக சிறப்புக் கூட்டம் 23-2-2025 அன்று மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாணவர் கழக அமைப்பாளர் சீ.தேவராஜ பாண்டியன் உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, மனநல ஆலோசகரும், மதுரை சிந்தனை மேடையின் தலைவரு மான ஜெ.வெண்ணிலா தலைமையுரை யாற்றினார். அவர் “இந்தக் கூட்டத் திற்கு கவிஞர் கலி.பூங்குன்றன் வந்திருப் பது மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மின்சாரம், மயிலாடன் என்ற பெயர்களில் அவர் எழுதும் கட்டுரைகளை ‘விடுதலை’யில் நாம் தொடர்ந்து வாசிக்கிறோம். மிகப்பெரிய தகவல் களஞ்சியங்கள் அவை, உணர்ச்சி யளிப்பவை அவை. அவரை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியரோடு அவர் பணியாற்றிய அனுபவங்களை அவர் சொல்ல இருக்கின்றார் கேட்டு மகிழ் வோம்” என குறிப்பிட்டு உரையாற்றினார்.
தமிழர் தலைவரோடு
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம், ‘தமிழர் தலைவரோடு’ என்கின்ற தலைப்பு உருவான விதம் குறித்தும், அதற்கு கவிஞர் சொல்லிய பதில் குறித்தும் எடுத்துக் கூறினார். கவிஞரது பல்வேறு பணிகளை எடுத்துக்கூறினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா, மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ், மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை ஏற்றார்கள். தொடக்கவுரை ஆற்றிய அ. வேங்கைமாறன் தன்னுடைய உரையில், கவிஞருக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இருக்கும் பிணைப்பையும் அன்பையும் எடுத்துச் சொல்லி கவிஞரின் இடையறாத பல்வேறு பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.
நோக்கவுரையாற்றிய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு தனது உரையில் கவிஞர் தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கை இணை ஏற்பு ஏற்றுக் கொண்டவர் .அண்ணன் செல்வம் அவர்கள் பேசும்போது கவிஞருடைய பல்வேறு பணிகளை பற்றிக் குறிப்பிட்டார் அன்னை மணியம்மையார் ஆகியோரோடு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு மிக நெருக்கமாக அவர்கள் இட்ட கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றியவராக கவிஞர் இருக்கின்றார். விடுதலையின் பொறுப்பு ஆசிரியராக ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய வெற்றிக்கு மிகப்பெரிய பலம், அவருடைய இணையர் அம்மா வெற்றிச்செல்வி ஆவார். “பென்சன் இல்லை, ஆனால் நான் இயக்க வேலைக்குச் செல்கிறேன்” என்று தன்னுடைய அரசுப் பணியை கைவிட்டவர் கவிஞர். அவருடைய முடிவை ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய அளவிற்கு இயக்கத்திற்கும், கவிஞருக்கும் ஒத்துழைப்புக் கொடுத்தவர் அம்மா வெற்றிச்செல்வி அவர்கள். ஏனென்றால் அவருடைய தந்தையார் நம்முடைய இயக்கத்தைச் சார்ந்தவர். நாகூரில் தந்தை பெரியாரை அழைத்து பல்வேறு கூட்டங்கள் நடத்தியவர் எனவே இயக்கத்தையும் புரிந்து கொண்டு கவிஞஞரையும் புரிந்து கொண்டு அவர்களுடைய குழந்தைகள் மிக நன்றாக இன்றைக்கு வருவதற்கு காரணமாக அம்மா வெற்றிச்செல்வி திகழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வா.நேரு குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், வழக்குரைஞர் அணித் துணைத்தலைவர் நா. கணேசன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராம வைரமுத்து ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் ‘தமிழர் தலைவரோடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவருடைய உரையில் தான் இயக்கத்திற்கு எப்போது வந்தேன் என்பதையும், தனக்கு கிடைத்த அரசு பதவி என்பது எப்படி அந்த சுற்று வட்டார பகுதிகளில் இயக்கத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்பதையும், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பே அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து ஆண்டு தோறும் கூட்டம் நடத்தியதையும், பின்பு தந்தை பெரியார் பிறந்த நாள் ஆண்டு மலரைக் கொண்டு வருவதற்கு சென்னைக்கு ஆசிரியர் கி.வீரமணி அழைத்ததையும் அதன் பின்பு அந்த வேலையைத் தொடர்ச்சியாக செய்வதையும், நெருக்கடி நிலைக் காலத்தில் ஆசிரியர் வீரமணி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இயக்கத்திற்கு ஏற்பட்ட சோதனைகளையும் அதனை எப்படி ஒரு நெஞ்சுரத்தோடு அம்மா மணியம்மையார் எதிர்கொண்டார்கள் என்பதையும், அம்மாவின் துணிவினை இராமலீலா நிகழ்ச்சியின் போது நேரில் கண்ட்தையும், ஆசிரியர் தலைமை யில் இயக்கம் இன்று வளர்ந்து இருக் கக்கூடிய நிலைமையும், ஆசிரியர் அவர்கள் வருமானவரித்துறை மூலம் ஏற்பட்ட அந்தத் துன்பங்களை எப்படி எதிர் கொண்டு வெற்றி பெற்றார் என்பதையும், இன்று இயக்கம் பெற்றிருக்கக்கூடிய வளர்ச்சியையும் வலிமையையும் குறிப்பிட்டு பல தகவல்களைத் தோழர்களோடு பகிர்ந்து கொண்டார். கவிஞர் கலி.பூங்குன்றன் பல செய்திகளை தோழர்களோடு நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
பங்கேற்றவர்கள்
மாவட்ட ப.க. தலைவர் ச.பால்ராஜ், ப.க. மாநில அமைப்பாளர் பேரா.சி.மகேந்திரன் கழக மாவட்டத் துணைத் தலைவர் இரா திருப்பதி, நா. முருகேசன் ,பொதுக்குழு உறுப்பினர் ராக்கு தங்கம், மாவட்டத்தலைவர் அ.முருகானந்தம்,தனம் முருகானந்தம், சுசிலா வேல்முருகன், வழக்குரைஞர் கனிமொழி வேல்முருகன், செல்லதுரை, நாகராணி, ஜே.எஸ்.மோதிலால், ரமேஷ், மன்னர் கல்லூரி திருப்பதி, முரளி, மாவட்ட இளைஞரணி செயலாளர் காசி.தலைவர் ஆ ராஜா, அமைப்பாளர் ச.வேல்துரை, க.அழகர், வழக்குரைஞர் பொன்னையா பெத்தானியபுரம் பாண்டி, நா.மணிகண்டன், செல்லூர் எபினேசர் சண்முகம், ஆட்டோ செல்வம், பெரி.காளியப்பன், கோரா பேக்கரி கண்ணன், ஒத்தக்கடை பெரியசாமி, பாக்யலட்சுமி மற்றும் ஏராளமான தோழர்களுடன் தலைமைக் கழகத்திலிருந்து வருகை தந்த க.கலைமணியும் கலந்து கொண்டார். கவிஞர் அவர்களின் உரை உருக்கமாகவும்,தோழர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைந்தது.