தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டுவதா?
தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்பதா?
தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டுவதா? தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்துவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒன்றிய பா.ஜ.க. கல்வி அமைச்சர் தர்விமேந்திர பிரதானுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள
அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டு கல்வித் துறைக்குத் தர வேண்டிய நிதியைத் தராமல் ஆணவத்துடன் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘‘நாகரிகமற்றவர்கள் (uncivilized)’’ என்று தெரிவித்திருப்பது அரசியல் பண்பற்றதும், கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.
தமிழர்களின் சுயமரியாதையைச்
சீண்டிப் பார்ப்பதாகும்!
ஆதாரப்பூர்வமாகம் கடிதப் போக்குவரத்துகளை எடுத்துக்காட்டி தமிழ்நாடு அரசு மறுத்த பின்னும், பி.எம்.சிறீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையொப்பமிட விரும்பியது என்று தொடர்ந்து ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்திலும் அதனையே மீண்டும் மொழிந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களையும், அரசையும், நாடாளுமன்ற உறுப்பி னர்களை அவமதிக்கும் விதமாக, கடுமையான கோபத்துடன் உதிர்த்த சொற்கள் தமிழர்களின் சுயமரி யாதையைச் சீண்டிப் பார்ப்பதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை அவையிலேயே பதிவு செய்ததையடுத்து, தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுவே அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. பேசுவதைப் பேசிவிட்டுப் பிறகு மன்னிப்பு என்ற பதுங்கு குழிக்குள் படுத்துக் கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற மரபு என்று ஒன்று உண்டு. அவை யெல்லாம் பாஜக அமைச்சர்களுக்கு எட்டிக்காய் போலும்.
தமிழர்களின் பிரதிநிதிகளாக, தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதும், அவர்களின் சார்பில் கேள்வி எழுப்புவதும், உரிமைக்குரல் எழுப்புவதும், தமிழ்நாட்டின் உரிமை நசுக்கப்படும்போது அதை எதிர்ப்பதும் தான் நாகரிகமற்ற செயல்கள் என்கிறாரா ஒன்றிய அமைச்சர்?
அன்றைக்கு அமித்ஷா –
இன்றைக்குத் தர்மேந்திர பிரதான்!
இதே நாடாளுமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடித்துத் தந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரை அவமதித்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஒடிசாவில் தேர்தல் நடை பெறும்போது, தமிழர்களை இழிவுபடுத்திப் பேசியதும் அவர்தான். இப்போது
தர்மேந்திர பிரதான்!
தேசியக் கல்விக் கொள்கையைத் திணித்து, மூன்றாவது மொழி என்ற பெயரில் ஹிந்தி – சமஸ்கிரு தத்தைத் திணித்துவிட வேண்டும் என்று துடிக்கும் ஒன்றிய அரசுக்குத் திடீரென தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை வந்துவிட்டதைப் போல நடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதாக தி.மு.க. மீதும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜனநாயகத்தைப் பற்றிப் பேச
பா.ஜ.க.வுக்குத் தகுதி உண்டா?
அரசியல் செய்வது யார்? ஜனநாயகமற்ற வகையில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது மொழித் திணிப்பைச் செய்யவும், சமூகநீதியைப் பறிக்கவும் துடிப்பவர்கள் யார்? பாசிசப் போக்குடன் நாடாளுமன்றத்திலேயே நடந்துகொள்வோர் யார்? ஜனநாயகத்தைப் பற்றிப் பேச பா.ஜ.க.வுக்குத்
தகுதி உண்டா?
ஒன்றிய அமைச்சரின் ஆணவப் போக்குக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்.
‘‘தன்னை மன்னரென்று எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சருக்கு நாவடக்கம் தேவை’’ என்று நமது முதலமைச்சர் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
பா.ஜ.க.வின் ஆணவப் போக்குக்கு உரிய பதிலைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தருவார்கள்!
தமிழ்நாட்டு எம்.பி.க்களை இழிவுபடுத்துவது, தமிழ்நாட்டு மக்களையும் மாணவர்களையும், அரசை யும் இழிவுபடுத்துவது என்று தொடர்ந்துவரும் பா.ஜ.க.வின் ஆணவப் போக்குக்கு உரிய பதிலைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தருவார்கள்.
இது சுயமரியாதை மண்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
10.3.2025