👉 வெல்லுவோம்! வெல்லுவோம்!! – தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
👉 ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆர்.எஸ்.எஸ். குரல்!
👉 ஒன்றிய பி.ஜே.பி. அரசோ நமது உரிமைகளைத் தொடர்ந்து பறித்துக்கொண்டே இருக்கிறது!
தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார் ஆளுநர்
ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசோ பொருளாதார வழியாகவும், கலாச்சாரப்படை எடுப்பு என்ற வகையிலும் தொடர் தடைகளை அளித்து வருகிறது. காலத்தாற் மேற்கொள்ளப்படும் நமது முதலமைச்சரின் போராட்டக் களத்திற்கு உணர்வுடன் துணை நிற்போம் – நிற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, ‘வம்புமிகு‘ ஆளுநராகவே, நம் மக்களின் வரிப் பணத்தை ஊதியமாக வாங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்பட்டமான ஒரு கொள்கைப் பிரச்சாரகராகவே – அன்றாடப் பணி செய்து, அரசமைப்புச் சட்டப்படி, தான் பதவியேற்கும்போது எடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் எதிரான போக்கையே நடைமுறையாக்கிக் கொண்டு வருகிறார்!
தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் ‘‘போட்டி அரசாங்கம்!’’
அந்தப் பணி செய்யவே ஒரு ‘‘போட்டி அரசாங்கத்தை’’ – தி.மு.க. ஆட்சி, அதன் கொள்கை முடிவுகள், நடவடிக்கை களுக்கு எதிராக – தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பொல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறார்!
எங்கும் கண்டனங்கள் – உச்சநீதிமன்றம் தொடங்கி ஊர் மக்கள் வரை எதிர்ப்புகள் எழுந்தன. அதுபற்றியே எண்ணாமல், மக்கள் விரோத நடவடிக்கையில் கூச்சநாச்சமின்றி நடந்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
சில ஊடகங்களின் விளம்பர வெளிச்சம்; அதுபோல, தன்னை விற்றுப் பிழைக்கும் சில குத்தகை அறிவு ஜீவிகள் இதற்குத் துணைபோக, ‘என்றும் சிரஞ்சீவி விபீஷணன்’ என்ற தத்துவத்திற்குச் சான்றாகவும் வாழுவது அதைவிட மகாவெட்கக் கேடு.
ஆரியர் – திராவிடர் போராட்டம்!
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சிந்துவெளி நாகரிகம், சரஸ்வதி கலாச்சாரமாம்! (திராவிட நாகரிகமே என்ற சர். ஜான் மார்ஷலின் கருத்தியலை மறுத்து அல்லது மறைத்து) இப்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் வரலாற்றுப் புரட்டு – ஆரிய – திராவிடம் என்பது பெரியார் கூறியது; வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை என்று வாய்க்கால் புளுகுண்ணிகளின் பிரச்சாரம்!
மனுதர்மம் கூறுவது என்ன?
அவர்களது மனுதர்மத்திலேயே பத்தாவது அத்தி யாயம் 43, 44 ஆகிய விதிகளில் உள்ள சுலோகங்கள் என்ன சொல்லுகின்றன?
43 ஆவது சுலோகம்:
‘‘பிராமணர்களை வழிபடாததினாலும், உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து கொள்ளாததினாலும் சத்திரிய ஜாதிகள் சூத்திரத்தன்மையை அடைந்தார்கள்.’’
44 ஆவது சுலோகம்:
‘‘பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போஜம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்த தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய் விட்டார்கள்.’’
அதுமட்டுமா?
அதைவிட முக்கியமானது, இன்று உலக மக்கள் பலராலும் ‘‘செத்த மொழி’’ என்று அழைக்கப்படும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தேவபாஷையாகி, கோலோச்சுகிற சமஸ்கிருதம்பற்றி,
45 ஆவது சுலோகத்தில், மனுஸ்மிருதி கூறுவது, சமஸ்கிருதம் மானுட குலத்தில் பேதத்தை நிலைநாட்டி, மற்ற மொழி பேசுகிறவர்களை மிகவும் இழிநிலைக்குத் தள்ளுவது என்பதை நிலை நிறுத்தும் சுலோகம் இதோ:
‘‘உலகத்தில் நான்கு வர்ணத்தாருக்கும் சங்கர ஜாதிகளில் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாயும், சிலர் சமஸ்கிருதம் போன்ற உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக் கிறார்கள். ஆகினும் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படு கிறார்கள்.’’
(தஸ்யூக்கள் என்பது திருடர்கள்! என்ற குறிப்பு அதிலே)
பார்த்தீர்களா? தமிழ்ப் பெருமக்களே!
சமஸ்கிருதம் உயர்ந்த பாஷையாம்! தேவ பாஷையாம்!
அப்படி அவர்கள் பேசினாலும், ‘‘தஸ்யூக்கள்’’ (திருடர்கள்)தான் என்று விளக்கம் கூறுவது ஏற்புடையதா?
மானக்கேடு அல்லவா!
ஆர்.எஸ்.எஸின் கொள்கை!
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசின் ஒரே கொள்கை – ஆர்.எஸ்.எஸ். கொள்கை;
ஒரே மதம் – ஆரிய மதம், ஹிந்து மதம்
ஒரே கலாச்சாரம் – சமஸ்கிருத கலாச்சாரம்!
செம்மொழியானாலும், தமிழ் பேசினால் ‘அவாளுக்கு’ ‘தீட்டுப்பட்டுவிடும்!’ தமிழில் கோவிலில் பூசை செய்தால், அது கடவுளுக்கு ஏற்காது. காரணம், அது ‘நீஷபாைஷ‘ (பேசுபவர்கள் எல்லாம் ‘தஸ்யூக்கள் (திருடர்கள்))
மனுஸ்மிருதி கூறுகிறது!
அந்த கலாச்சாரத்தினைத்தான் தேசியக் கல்விக் கொள்கை என்கிறார்கள். மேலும், நமது வரிப் பணத்தில் பல கோடி ரூபாயினை மக்களால் பேசப்படாத ஒரு மொழியை, ‘பேதம்’ வளர்க்கும் அதன் கலாச்சாரத்தைப் புகுத்த கல்வியா? மும்மொழித் திட்டம் என்ற முகமூடிக்கு ஆலவட்டமா?
ஒருபோதும் ஏற்கவியலாது என்பது திராவிடர் இயக்கம் – உண்மை தமிழறிஞர்கள் – உணர்ச்சிமிக்க பாவலர்களின் திடமான உறுதியாகும். புரட்சிக்கவிஞர் முரசு கொட்டி முழங்கினாரே, அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பைத் – தடுக்கும் பணியை மீண்டும் நமது கடமையாக்குகிறார்கள் ‘கனபாடிகள்’ கூட்டம்!
புரட்சிக்கவிஞரின் முழக்கம்!
‘‘தமிழனே இது கேளாய்-உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி துாக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததந்தப் பாம்பு!
தமிழனே இது கேளாய்
தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு
தமிழனே இது கேளாய் –
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்!’’ என்றார் புரட்சிக்கவிஞர்.
நமது முதலமைச்சரின் காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட கடமை உணர்வுகள்!
‘திராவிட மாடல்’’ முதலமைச்சர் களப் போராளியாக, பேதமற்ற சம வாழ்வுப் பண்பாடாம், ‘‘யாவரும் கேளிர்’’ பண்பாட்டைப் பாதுகாக்க பகிரங்கக் குரல் – உரிமை முழக்கம் எழுப்பியதோ காலத்தாற் மேற்பட்ட கடமை உணர்வாகும்.
உரிமைப் போர் வரலாறு நூறாண்டு
என்பதை சில உலுத்தர்களுக்கு
உணர்த்த காலம் கரைகிறது!
மானமுள்ள தமிழர்களே,
உணர்ந்து உரிமைக் களத்தில்
உணர்வுடன் வந்து நில்லுங்கள்!
வெல்லுவோம்! வெல்லுவோம்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
9.3.2025