புதுடில்லி, மார்ச் 6 தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருந்தகங்களில் இருந்து அதிக விலைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை வாங்க நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கூறி வழக்குரைஞர் விஜய் பால் டால்மியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரம் என்பது மாநில பிரச்சினை என குறிப்பிட்ட நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க பொருத்தமான கொள்கை முடிவுகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.