பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மொழி நன்றாக தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கிக் கிளைகள் உள்ளன. சுமார் 21 ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்: 750 – பயிற்சிப் பணியிடங்கள் (Apprentice). மாநில வாரிய பணியிடங்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் 175 பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 40 பணியிடங்களும், கருநாடகாவில் 30 பணியிடங்களும், மகாராஷ்டிரா 60, ஆந்திரப் பிரதேசம் 25 என மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அப்ரெண்டீஸ் எனப்படும் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும். 01.04.2021 முதல் 01.03.2025க்குள் பட்டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். இணைய வழி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் போது உள்ளூர் மொழித்திறன் தேர்வு நடைபெறும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் தமிழ் எழுத, படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.03.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியானவராகவும் அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 33 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரையும் மாற்றுத்திறனாளி என்றால் 38 வயது வரையும் விண்ணப்பிக்க முடியும்.
ஊதியம் எவ்வளவு?: பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நகரங்கள் என்றால் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். நகரங்கள் என்றால் மாதம் ரூ.12 ஆயிரமும், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்கள் என்றால் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?: அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வுக் கட்டணம் ரூ.800 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் ரூ.600 கட்டணம் ஆகும்.
தேர்வு எப்போது?: விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 01.03.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.03.2025 ஆகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் 12.03.2025 ஆகும். தேர்வு நடைபெறும்: நாள் 16.03.2025 ஆகும்.