நம்முடைய செரிமான மண்டலத்தில் வரும் ஒரு முக்கியமான முதன்மையான சிக்கல் மலச்சிக்கலாகும். அது வராமல் தடுக்கவும் குணமாக்கவும் உதவும் முக்கிய மருந்து உணவேயாகும்.
வழக்கமாக அன்றாடம் வர வேண்டிய மலம் ஓரிரு நாட்கள் வராமல் இருந்தால் அதனை மலச்சிக்கல் என்பதில்லை. வாரம் மூனறு முறையிலிருந்து நாள்தோறும் மூன்று முறை மலம் போவது வரை சாதாரண நிலைதான் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நடைமுறைக்கு இது ஒத்து வருமா என்பது சந்தேகமே?
மலச்சிக்கலைத் தவிர்க்கும் சிறந்த வழிகள்
பாலில் உள்ள மெக்னீசியம் மலத்தை மென்மையாக்க உதவுகிறது. இயற்கையான உணவை உட்கொள்வது, அதிகமான காய்கறிகள், புதிய பழங்கள், முழுக்கோதுமையால் ஆன பிரட், மிகச் சிறப்பானவையாகும். இவை மலமிளக்கி மருந்தை எடுத்துக்கொள்வதைவிடச் சிறந்தவை. மலமிளக்கி எடுத்துக் கொள்ள வேண்டுமெனில், சிறந்த தீர்வு, கொஞ்சம் தவிடு, உமியை பொடி செய்து நாள்தோறும் உட்கொள்ளலாம்.
தவிடு. உமி, நீரை உறிஞ்சி அதிக அளவுள்ள மலமாக மாற்றுகிறது. இது செரிமானப் பகுதிகளால் – ஜீரணிக்கப்பட்டு உறிஞ்சப்படுவதில்லை. இது ஒரு இயற்கையான பொருள். எனவே எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. அதேசமயம் இதை உணவுக்கு முன்பாகப் போதிய அளவு உண்ண, முழுமையாக உணவு சாப்பிட்ட உணர்வைத் தரும். எடையையும் கூட்டாது. இதுவே அய்சோகால் எனக் கடைகளில் விற்கப்படுகிறது.
உணவில் பட்டாணி, பழம், உமி, காய்கறி, முழுக்கோதுமை பிரட், சப்பாத்தி, பருப்பு, கீரை போன்ற நார்ப்பொருள் இருக்குமாயின் மலச்சிக்கலும், வயிற்றுப் போக்கும் மிக அரிதானதாகிவிடும்.
நிறைய நீர் அருந்தவும்
காலையில் சில குவளைநீர் அருந்தவேண்டும்.இது சிறந்த மலம் வெளியேற்றும் செயலுக்கு உகந்தது. பலர் காலையில் காபி அல்லது தேனீர் அருந்துவது மலம் வெளியேற நல்லது என்று கருதுகின்றனர். இதுவும் மலம் சிக்கலின்றி வெளியேற உதவுகிறது.