ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மூன்றாவது மொழியை ஏற்கவில்லை தொல்.திருமாவளவன் கருத்து

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 3- ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி விசிகவின் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது:

வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். இதற்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் கட்சிகள் முன்வைக்கும் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை.

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஹிந்தியை படிக்க வேண்டுமென பாஜக ஆதரவு கரம் நீட்டுவது அவர்களது அரசியல் ஆதாயம். இது மக்களின் நலன்களுக்கானது அல்ல.

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை. அவர்கள் தமிழை படிக்க வேண்டும் என்ற கட்டாயமல்ல. இருமொழிக் கொள்கையே நாடு முழுவதற்கும் போதுமானது. ஹிந்தியை கட்டாயமாக்குவது ஒரே நாடு ஒரே மொழி என்னும் நிலையை உருவாக்குவதற்கான சதி. எனவே, இந்த சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க வேண்டியது ஒன்றிய அரசு தான். ஆனால், அதற்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பு என்பதுபோல ஆளுநர் நாடகமாடுகிறார், அரசியல் செய்கிறார். திமுக கூட்டணி உடையும் என்ற மேனாள் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது. தேர்தல் நேரத்தில் தொகுதி குறித்த பேச்சுவார்த்தை இருக்கும். மற்ற நேரத்தில் மக்கள் பிரச்சினையை தான் பேசுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென் மாவட்ட அரசுப் பேருந்துகள்
கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்
போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை,மார்ச் 3- தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வரை இயக்கப்படாது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:-

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் 04.03.2025 செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ” என்று கூறப்பட்டுள்ளது.

வாயால் கெடும் அண்ணாமலை

மீனவர்கள் என்ற பெயரில் கடத்தல்காரர்கள் செயல்படுகிறார்களாம்! ராமநாதபுரம்,மார்ச் 3- மீனவர்கள் என்ற போர்வையில் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் பட்டினிப் போர் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று (2.3.2025) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் 15ஆம் தேதிக்குள் ஒரு நாள் நாகை, ராமேசுவரம், காரைக்கால், புதுச்சேரி மீனவ சங்கத் தலைவர்களை அழைத்துச் சென்று பேச உள்ளோம். இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பிறகே தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. கடுமையான சட்ட திருத்தமும் செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவு அமைச்சர் இலங்கை அரசுடன் பேசியுள்ளனர். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, பன்னாட்டு எல்லைப் பிரச்னையாக பார்க்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். 200 ஆண்டுகளாக மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமூக விரோதிகள் மீனவர் என்ற போர்வையில் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

அவர்களே பிரச்சினையை தூண்டி விடுகின்றனர். கடத்தல்காரர்களை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இலங்கை அளித்துள்ள விளக்கத்தில் அது வேண்டும் என்றே நடக்கவில்லை. சுட்டவர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விரைவில் இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் என்றும், தூண்டி விடுகின்றனர் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மீனவர்களையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக, அண்ணாமலை மீது ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *