இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இந்திய நாடாளுமன்றம், மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது. இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், மக்களால் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்றம், சட்டங்களை ஆக்கும் அதிகாரம் கொண்டது.
நாடாளுமன்ற ஆட்சி முறை
சட்டமன்றம், நாடாளுமன்றம் இது இரண்டுமே மக்களின் முதன்மைத்தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களால் அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் உரிமைகளை அவையில் நிலை நிறுத்துவார்கள். இங்கு எண்ணிக்கை மிகவும் முக்கியம். இன்று வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் அனுப்பப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் அந்த மாநிலங்கள் அனைத்துமே பிரதமரையும் துறை அமைச்சர்களையும் நம்பி இருக்கிறது.
எந்த ஒரு தேவையையும் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் எப்போது அறிவிப்பார்கள் என்ற ஏக்கம் இருந்துகொண்டே உள்ளது. எடுத்துகாட்டாக மணிப்பூரைக் கூறலாம். ஒரே ஒரு காங்கிரஸ் உறுப்பினர், ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் பேச எழுந்தாலே பாஜக உறுப்பினர்கள் கூச்சல் குழப்பமிட்டு அவரது மக்களின் தேவைகளை அவர்களின் வலிகளை அவையில் எடுத்துக் கூற இயலாமல் போய்விட்டது,
ராகுல்காந்தி அவரது கைபிடித்து அவையின் மய்யத்திற்கு அழைத்துச்சென்று பேசவைத்தார். ஆனால், அவையை தவறாக வழிநடத்தினார் என்று அமித்ஷா ராகுல் மீது நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்க, மணிப்பூர் மக்களின் உரிமைகள் மறைக்கப்பட்டு ராகுல்காந்தி குறித்து அமித்ஷா வைத்த குற்றச்சாட்டு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது,
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவால் எவ்வளவு பெரிய பேரிடரை எதிர்நோக்கி உள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் மேலே கூறியது. இன்று கல்வியறிவு குறைவு, குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதி, சமூகப் பிளவுகள் அதிகம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பெரும்பான்மை மதப் பிரிவினரின் பெயரால் பறிக்கப்படும் மாநிலங்களை ‘ஹிந்தி பெல்ட்’ என்கிறோம்.
மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைப் பிரித்தால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச,ம் பீகார், ராஜஸ்தான் இந்த மாநிலங்கள் மட்டும் 324 இடங்களை (36%) பெறும். 28.05.2023 அன்று நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் “நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது” என்று குறிப்பிட்டார். இந்தியாவில் தற்போது 543 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 245 பேர் உள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதி வரையறை:
தென் மாநில உரிமைகளின் எதிர்காலம்
நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், அது தென் மாநிலங்களுக்குப் பாதகமாக முடியும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது பல புதிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் திருத்த முடிவுசெய்யப்பட்டது.
இதற்கென 1952ஆம் ஆண்டில் Delimitation Commission Act இயற்றப்பட்டது. அதன்படி ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு முறை Delimitaion Commission அமைக்கப்பட்டு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.
1952இல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவில் 494 தொகுதிகள் இருந்தன. இதற்குப் பிறகு, 1963இல் தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. 1973 இந்த எண்ணிக்கை 543ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது.
1975இல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 42ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2001இல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002இல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84ஆவது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது. இந்த 25 ஆண்டு காலம் 2026இல் முடிவுக்கு வருகிறது.
மக்களவைத் தொகுதிகள் எப்படி அதிகரிக்கப்படவில்லையோ, அதேபோல, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. அரசியமைப்புச் சட்டப் பிரிவு 170இன்படி ஒரு மாநிலத்தில் குறைந்தது 60 இடங்களும் அதிகபட்சமாக 500 இடங்களும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு 1970களில் ஒரு தேசியக் கொள்கையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டது. எல்லா கொள்கைகளையும் போலவே இந்தக் கொள்கையும் இந்தியா முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் அமலாக்கப்பட்டது.
மக்கள் தொகையின் சமநிலையின்மை: நாடாளுமன்றத்தில் தெற்கின் குரலும்
வடக்கின் ஆதிக்கமும்
இதனால் சில மாநிலங்களில் அதீதமான மக்கள் தொகை பெருக்கமும் சில மாநிலங்களில் மிகக் குறைவான அதிகரிப்பும் இருந்தது. உதாரணமாக, இந்தியாவில் 1971க்கும் 2011க்கும் மத்தியில் ராஜஸ்தானில் 166 சதவீத அதிகரிப்பும் உத்தரப்பிரதேத்தில் 138 சதவீத அதிகரிப்பும் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதமும் கேரளாவில் வெறும் 56 சதவீதமும்தான் அதிகரித்தது. அதாவது ராஜஸ்தானில் 1971இல் 2.57 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011இல் 6.86 கோடியாக உயர்ந்தது. கங்கைச் சமவெளி மாநிலங்கள் முழுக்கவே இந்த நாற்பதாண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.
ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற விகிதம் வந்துவிட்டால் மக்கள் தொகை நிலைபெற ஆரம்பித்து விட்டதாக அர்த்தம். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிலை வந்துவிட்டது. ஆனால், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கருவுறும் விகிதம் இரு மடங்காக இருக்கிறது. பீகாரில் 3.2 ஆகவும் உத்தரப்பிரதேசத்தில் 3 ஆகவும் இது இருக்கிறது.
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய அய்ந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து இந்திய மக்கள் தொகையின் பாதி பேரை, அதாவது 48.6 சதவீதம் பேரைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், இந்த அய்ந்து மாநிலங்களிலேயே இந்தியாவின் பாதி மக்களவை இடங்கள் இடம்பெறும்.
1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 54.8 கோடி என்றும் வாக்காளர்கள் எண்ணிக்கை 27.4 கோடி என்றும் கணக்கிடப்பட்டு அதற்கேற்றபடி தொகுதிகள் தற்போது பிரிக்கப்பட்டுள்ளன.
தென் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
சவால்கள் மற்றும் எதிர்வினைகள்
ஆகவே, கூடுதல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் கூடுதலான மக்களவை உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். ஆனால், 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறிய மாநிலங்களுக்கு இது பொருந்தாது.
பிரிவு 81இன் படி, 6,50,000 முதல் 8,50,000 பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும். ஆனால், பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரையெல்லாம் இருக்கிறது.
இந்த நிலையில்தான் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்தாலோ, குறைத்தாலோ தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்.
இந்த நிலையில் 26.02.2025 அன்று சிவராத்திரி கொண்டாட வந்த மதச்சார்பற்ற இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் பேசும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி குறைக்கப் படாது என்றவாறு கூறினார்.
தமிழ்நாட்டின் குரல்: மக்களவை வரையறையில் நியாயத்திற்கான போராட்டம்
மதவெறியைத் தூண்டிவிட்டு அடுத்த 8 மாதத்திற்குள் கொதிநிலையில் வைத்து தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்திவிடலாம் என்ற உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பினரின் அரைகுறைத் திட்டம் இதர தமிழ்நாட்டின் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் ரகசியத் திட்டத்தோடு வரவிருந்த அமித்ஷாவிற்கு அவர் மண்ணில் கால் வைக்கும் முன்பே அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக முதலமைச்சர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி வரையறை பிரச்சினையைக் கையிலெடுக்க வெறும் அறிக்கையோடு மட்டும் இல்லாமல், அனைத்துக் கட்சி கூட்டம் குறித்த அறிக்கை வெளியிட, தான் வந்த வேலையை மறந்து முதலமைச்சரின் நியாயமான கருத்தை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதி குறைக்கப்படாது என்று அவர் வாயாலேயே சொல்லும் நிலைக்கு அமித்ஷா தள்ளப்பட்டார்.
தமிழ்நாட்டில் குறைக்கப்படாது. ஆனால், வட நாட்டில் அதிகரிக்கும் போது தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை சமமில்லாமல் போய்விடுமே? இதற்கு அமித்ஷா விடம் பதில் இல்லை.
பாதிப்பு எவ்வளவு அபாயகரமானது
தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்து, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்திலேயே விவாதிக்கப்பட்டது. ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் செய்தால், அது தென் மாநிலங்களைப் பாதிக்கும் என பலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கைவிடப் பட்டது. இப்போது 2026இல் இதை நிறைவேற்ற உள்ளூர திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டு இருக்கிறது.
தென் இந்தியாவின் மக்களவை எவ்வளவுமுக்கியம் என்பதை 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காட்டிவிட்டது, சிறுபான்மை உறுப்பினர்களைக் கொண்ட மோடிக்கும் தென் மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சிதான் முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
இதுதான் அவர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த மாநிலங்கள், அவர்களுக்கு கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது.
ஆகையால்தான் தென் மாநிலங்களின் தயவில்லாமல் ஒன்றியத்தில் உட்கார திட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஆட்சியைப் பிடிக்க தெற்கு தேவைப்படாது என்ற நிலை உருவானால் முக்கிய விவகாரங்கள் எதிலும் தென்னிந்திய மக்களின் விருப்பங்களுக்கு பங்கிருக்காது. ஹிந்தியைத் திணிக்க முடியும். தென்னிந்தியாவின் வரி வருவாயில் கூடுதல் நிதியை எடுக்க முடியும்.
எண்ணிக்கை அதிகரிப்பதில் மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. தற்போது 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையிலேயே, உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்று தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினருக்கும் மிகக் குறைந்த அளவு நேரமே கிடைக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்கினால், வாய்ப்புகள் இன்னும் குறையும்.