ஒன்றிய அரசின் கையிருப்பில் உள்ள அரிசி ஏலத்தில் 17.6 மெட்ரிக் டன்னில் வெறும் 3.07 மெட்ரிக் டன் மட்டுமே ஏலம் போனது, மற்றவை அனைத்தும் அப்படியே கிட்டங்கிகளில் கிடக்கிறது.
அரிசி மக்கி மண்ணோடு மண்ணாகப் போனாலும் போகட்டும் – ஆனால் கருநாடகா கேட்கும் 2 மெட்ரிக் டன் அரிசிக்கான ஒப்புதலை ரத்து செய்து ஒன்றிய அரசு மனிதாபி மானமில்லாமல் நடந்து கொண்டு வருகிறது.
கருநாடகா அரசு தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு மாதம் தோறும் கட்டணமில்லாத அரிசி வழங்கப்படும் என்று கூறி இருந்தது, அதன் படி ஆட்சிக்கு வந்த பிறகு கட்டணமில்லா அரிசி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசிடம் கட்டணமில்லா அரிசி வழங்கும் திட்டம் குறித்து எடுத்துக்கூறி மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் அரிசியைக் கூடுதலாக ஒதுக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தது. இத்தனை ஆண்டுகளாக இதுதான் நடைமுறை, ஆனால் திடீரென ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசியை நிறுத்திவிட்டது. இனி தனியாருக்கு அரிசி ஏலம் விடப்படும்; மாநில அரசுகள் தனியாரிடமிருந்தே வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டது.
இந்த நிலையில், கையிருப்பில் உள்ள அரிசி ஏலத்திற்கு வந்தது. ஏலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட 17.6 மெட்ரிக் டன் அரிசியில் சில தனியார் நிறுவனங்கள் வெறும் 3.07 விழுக்காடு அரிசியை மட்டுமே ஏலத்தில் எடுத்தன மற்றவை அப்படியே கிட்டங்கிகளுக்குத் திரும்ப அனுப்பப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் புதிய அரிசி கொள்முதல் செய்யப்படும் போது திருப்பி அனுப்பப்படும் அரிசி கவனிப்பார் இன்றி அப்படியே கை விடப்படும். இதனால் அந்த அரிசி பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பற்றிக் கூறும்போது ‘மக்கள் நல அரசு’ (Welfare State) என்று கூறுவார்கள்.
ஆனால், இன்றைக்கு பிஜேபி தலைமை யிலான ஒன்றிய அரசோ ஹிட்லர் அரசாக பாசிசக் கண்ணோட்டத்தில் வெறி கொண்டு அலைகிறது.
எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது தானே ஒன்றிய அரசு? அதில் என்ன தன் கட்சி ஆளும் மாநிலங்கள் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்ற மாற்றாந்தாய் மனப்பான்மை?
அதுவும் மனிதன் உயிர் வாழ்வுக்குத் தேவை யான உணவுப் பிரச்சினையில்கூட ஒட்டாரமாக, அழிச்சாட்டியம் செய்வதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
மக்கள் விழிப்புணர்வு என்னும் எழுச்சியே இத்தகைய பாசிசக் கொடுங் கோல் அரசினை, இருந்த இடம் தெரியாமல் சாம்பலாக்கி விடும் – எச்சரிக்கை!