சென்னை,பிப்.27- சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஹிந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஹிந்தி ஒரு சில மாநிலங்களில் தான் பேசப்படுகிறது.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை பிராந்திய மொழி என சொல்கிறார்கள். ஹிந்தி ஒரு பிராந்திய மொழி என்பதை மறந்துவிட்டு பேசுகின்றனர். பிற மொழி பேசக் கூடிய மக்கள் மீது திணிப்பது அரசமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது.
ஏதேனும் ஒரு இந்திய மொழி மட்டும் அல்ல, அயல் நாட்டு மொழியை கற்க, திறமை வளர்க்க கூட உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் பிராஞ்ச் மொழியை கூட கற்று கொள்கிறார்கள். அது தனி நபரின் விருப்பம். ஆனால் தேசிய கல்வி கொள்கையில் ஒரு நிலைப்பாட்டை வைத்து கொள்கை அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்களை ஹிந்திவாலாக்களாக மாற்ற நினைப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திக்கு அல்ல ஹிந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது என்றார் அவர்.