மலேசிய தமிழர் தன்மான கழகத் தலைவர் எப். காந்தராஜ் (வயது 76) இன்று (23.2.2025) காலையில் மலேசியா – மலாக்கா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த பல நாள்களாக உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மறைவுற்றார்.
மலேசிய திராவிடர் கழகத்தின் மலாக்கா மாநிலத் தலைவராக நீண்ட நாள் பொறுப்பில் இருந்து அந்தப் பகுதியில் கழகப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக இருந்து பின்னர் தேசியத் தலைவராகவும் பொறுப்பில் இருந்தவர். தமிழ் நாட்டிற்கு வரும் பொழுது சென்னை – பெரியார் திடலுக்கு வந்து நம்மை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய தமிழர் தன்மான கழகத்தினை நிறுவி தற்சமயம் அதன் துணைத் தலைவராக இருந்து ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
மறைந்த எப். காந்தராஜ் அவர்களுக்கு தாயம்மாள் என்ற வாழ்விணையரும், மூன்று மகன், ஒரு மகள் என நான்கு மக்கள் செல்வங்களும் உள்ளனர். எப்.காந்தராஜ் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தாருக்கும், மலேசிய தமிழர் தன்மான கழகத் தோழர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அவரது உடல் நாளை (24.2.2025) அடக்கம் செய்யப்பட உள்ளது. கழகத் தோழர்கள் பலரும் சென்று அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
தமிழர் தலைவர் கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.2.2025