புதுடில்லி,பிப்.23- மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 3 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள், புதுச்சேரி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டில்லியின் ஒன்பதாவது முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்ற பின்னர், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மேலும் ஒன்றிய அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டில்லியின் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்ற கூட்டம் முடிந்த பின்னர் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே கூறுகையில், ‘அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பீகார், மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளது என்றார்.
ஆனால் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. அதேபோல், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான மேனாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகனும் ஒன்றிய அமைச்சருமான குமாரசாமி, லோக்ஜனசக்தி தலைவரும் ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராட்டிர பிஜேபி அரசு
கடும் எதிர்ப்புக்குப் பயந்தது
மும்பை,பிப்.23- கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை அடுத்து மராட்டிய அரசு தனது மதிய உணவுத் திட்டத்தில் மீண்டும் முட்டையை இணைத்துள்ளது. பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டம், தற்போது நாடு முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மதிய உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 50,000 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை முட்டை வழங்கும் திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு மராட்டிய அரசு, அறிமுகம் செய்தது.
ஆனால் குறிப்பிட்ட சில அமைப்புகளின் போராட்டத்தால், 2025 ஜனவரி 28ஆம் தேதி மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. மதிய உணவில் முட்டையை நிறுத்துவதால், புரதச்சத்து கிடைக்காமல் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் எனக்கூறி கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுப்பெற்றதை அடுத்து, புதிய கல்வி ஆண்டு முதல் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை மற்றும் வாழைப்பழத்தை மராட்டிய அரசு சேர்த்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தாதாஜி அறிவித்துள்ளார்.