சென்னை, பிப்.21 ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.இதற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அயப்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலத்தில் கோபத்தை காட்டியுள்ளனர். இதில் ‘ஹிந்தியை திணிக்காதே’, ‘தமிழர்களை வஞ்சிக்காதே’, ‘மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே’ தமிழ்நாட்டின் நிதி எங்கே என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தனது வீட்டிற்கு முன் கோலமாக போட்டுள்ளனர். இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.