சென்னை,பிப்.20- ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பாஜ முக்கிய நிர்வாகியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆசை வார்த்தை
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர், துரைக்கண்ணு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜ கட்சியில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவரது மனைவி அஸ்வினி என்பவரும் பாஜ செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் அதே பகுதியில் ‘யெங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார்.
அதில், தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டியில் உறுப்பினர் என்றும், இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் தான் ஒரு ரெப்ரி என்பது போன்றும் போலியான விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்திருந்தார். அதன் மூலம், தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம், நான் பாஜ கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், தனக்கு ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் மிக நெருக்கம். நான் நினைத்தால் உங்களுக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு, வருமான வரித்துறை, ரயில்வே, உளவுத்துறை போன்ற பல்வேறு பணிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறி வந்தார்.
இதை உண்மையென்று நம்பிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ்குமார் (32) என்பவர், வேலை வாங்கித் தருமாறு இவரை அணுகினார். அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் வரை பெற்றுக் கொண்ட ஜெயராமன், அவரது மனைவி அஸ்வினி, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோர், வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஏமாற்றமடைந்த லோகேஷ்குமார், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது, அவர்கள் வேலைக்கான ஒரு பணி ஆணையை வழங்கியதாக கூறப்படுகிறது. அதனை உண்மை என்று நம்பி எடுத்துச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கொலை மிரட்டல்
அது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்ததால், அது குறித்து ஜெயராமனிடம் கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் ஜெயராமன் அலுவலகம் சென்று கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது, ஆத்திரமடைந்த ஜெயராமன், அவரது மனைவி அஸ்வினி, உதவியாளர் பிரியா, மாமியார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர் சேர்ந்து கொண்டு, லோகேஸ்குமாரை சரமாரியாக தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம், ஜெயராமன் கும்பல் குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சங்கர் நகர் காவல் துறையினர் நேற்று (18.2.2025) ஜெயராமன் கும்பலை விசாரணைக்காக தேடிச் சென்ற போது, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. அவர்கள் 2 பிரிவில் மோசடி வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், இவர்கள் இதே போன்று அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களிடம் ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விசாரணையின் முடிவிலேயே இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது போன்ற விவரங்கள் தெரிய வரும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.