கேள்வி 1: “நெல்லை அல்வாவைவிட பா.ஜனதா அரசு தரும் அல்வாதான் பிரபலம். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பதை மனதில் இருத்தி பாஜக-வுக்கு 2026 – சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
சரஸ்வதி ரவி, பெருங்களத்தூர்.
பதில் 1: நிச்சயம் எதிர்பார்க்கலாம். ‘காலிப் பானைகளின்’ சலசலப்பு சத்தம் பற்றி பொருட்படுத்த வேண்டாம். ஈரோடு இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பே தோற்றன! ஆரியக் கூலி வழமைபோல் டெபாசிட் இழப்பு கட்சியென உறுதி செய்தனர் மற்ற சக போட்டியாளர்கள். போதுமா?
கேள்வி 2: பட்ஜெட்டில் வருமானவரி செலுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.12 இலட்சம் வரம்பினை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருப்பது உயர்ஜாதி வகுப்பினருக்கானது என்று எடுத்துக் கொள்ளலாமா?
மணிவண்ணன், சென்னை.
பதில் 2: ஒரு கோணத்தில் அதுவும் சரிதான். ‘அவாள்’ கணக்கில் ‘உயர்ஜாதி ஏழைகள்’. வருமானம் முன்பு ரூ.8 லட்சம். இப்போது யோசிக்கலாமா என்றால், டில்லி சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டே என்பது உலகறிந்த ‘ரகசியம்’.
கேள்வி 3: காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் கவுரவப் பிரச்சினையால் வாக்குகள் சிதறி டில்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று தொல்.திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேசியிருப்பதை சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை கவனத்தில் எடுத்துக்கொண்டு எதிரிகளை வீழ்த்த முனைப்பு காட்டுமா?
எஸ்.சத்தியமூர்த்தி, நாமக்கல்.
பதில் 3: “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இன்றேல் அனைவருக்கும் (அக்கூட்டணி) தாழ்வே” – சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றோரின் கவலை நியாயமானது!
கேள்வி 4: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப சமூக பன்முகத்தன்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பிரதிபலிக்க சட்டத்திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி திமுக எம்.பி. வில்சன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்தது வரவேற்க வேண்டிய விடயம் அல்லவா?
அ.அப்துல்சமத், காட்பாடி.
பதில் 4: வில்சன் அவர்களை முத்தமிழறிஞர் கலைஞர் முன்பு, வில்சன் அல்ல அவர் நமது ‘வின்-சன்’ என்றாரே – அது எவ்வளவு சரியானது என்பதை நிரூபிக்கிறார். பாராட்டுகள்!
கேள்வி 5: பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும், முதன்மை மாநிலமாகத் திகழ்வதாகவும் பாராட்டுக்கு மேல் பாராட்டு தெரிவிக்கின்ற ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியை தருவதற்கு மனம் வரவில்லையே ஏன்?
இரா.அலமேலு, செங்குன்றம்.
பதில் 5: பெருமை ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு நாளும் கூடுகிறது. மனம் பொறுக்காத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆரிய அடிமைகள் கூட்டு இப்படி பல தடங்கல்கள் தடைகளை ஏற்படுத்துகிறது. இதிலும் மீண்டும் தோல்வியே காண்பர் என்பது உறுதி!
கேள்வி 6: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியதாக இராணுவ விமானத்தில் அனுப்பி வைத்திருப்பது பற்றி ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் போது, இது புதிதல்ல 2012இல் இருந்தே இந்த நடைமுறை இருப்பதாகத் தெரிவித்துள்ளாரே?
மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 6: முந்தைய நடைமுறைகள் மனிதநேயத்திற்கு முற்றிலும் விரோதமாக இருந்தாலும் அதை மாற்றத்தானே இவர்கள் ஆட்சியில் இருப்பதாகச் சொல்வதுண்டு. ‘குறைகாண்’ படலத்தை பிரதமரே நாடாளுமன்ற உரைகளில் மீண்டும் மீண்டும் கூறுகிற வாதம் இதற்கு மட்டும் பொருந்தாதா? அய்.நா.வின் மனித உரிமைகளுக்கு இது முற்றாக விரோத நடவடிக்கை அல்லவா? கைதிகளைக் கூட தண்டிப்பதைவிட, சீர்திருத்துவதுதானே இன்றைய கிரிமினல் சட்டத்தின் அடிப்படை. அது இப்படி அப்பட்டமாக மாறலாமா?
கேள்வி 7: இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவால் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதா?
திவ்யபாரதி, அரும்பாக்கம்
பதில் 7: உண்மையான தலைமை, கட்சியை நீதிமன்றங்களா நிர்ணயிப்பது? – உத்தரவிடுவது? மக்கள் மன்றம்தானே. அதை மறந்து இப்படி பல ஆண்டு படையெடுப்பா? கோர்ட்டுக்குப் போன பிறகு – “காட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி – குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி” என்ற ‘பராசக்தி’ சிவாஜி பாட்டைத்தான் நினைவூட்டுகிறது.
கேள்வி 8: வங்க தேசத்திலிருந்து மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து (குறிப்பாக கோவை போன்ற தென்மாவட்டங்களில்) சட்டவிரோதமாகக் குடியேறுவது பற்றி தங்கள் கருத்து?
முரளி, பனையூர்
பதில் 8: கடுமையாக தடுக்கப்படுதல் அவசியம். குற்றங்களும் கூட பெருக வாய்ப்புகள் அதிகமாகி, ஆபத்தும் அதனால் ஏற்படக் கூடும்.
கேள்வி 9: அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக உள்ளதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது பற்றி தங்கள் கருத்து யாது?
இரா.லதா, சென்னை-11
பதில் 9: அரசுகளின் கொள்கை முடிவுகளில் தலையிடுதல் கோர்ட்டு அதிகாரத்தின் கீழ் வராது; மக்கள் மன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி 10: அமெரிக்காவை மய்யமாகக் கொண்டுள்ள தற்சார்பு நிறுவனமான இந்தியா ஹேட்லேப் (அய்எச்எல்) ‘இந்திய வெறுப்பு ஆய்வகம்’ மேற்கொண்ட ஆய்வில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இந்தியாவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய வெறுப்புப் பேச்சானது, ஆளும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஹிந்து தேசியவாத இயக்கங்களின் கொள்கை, சித்தாந்தங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிவதாக செய்திகள் வெளிவந்துள்ளதே?
மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 10: நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்துவிட்டு, இப்படிப் புலம்புவதால் என்ன பயன்? உலகம் புரிந்து உணர்வது வரவேற்கத்தக்கது.