மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை
புதுடில்லி, பிப்.11 இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பெண்கள் கல்வியை வலியுறுத்திய பெரியார் என்ற ஒரு மனிதரே! அதை அவர் மறக்கவே கூடாது என்றும், இந்த பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட் என்றும், வேலைவாய்ப்பு திண்டாட்டத்தைப் போக்க இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் எதுவுமில்லை என்றும் மக்களவையில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற் றுகையில் தி.மு.க. மக்களவை குழுத் துணைத் தலைவர் தயாநிதி மாறன் உரை யாற்றினார்.
மக்களவையில் தயாநிதி மாறன் பேசியதாவது:–
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3 ஆவது பதவிக்காலத்தின் முதல் முழு ஆண்டு பட்ஜெட் மீண்டும் சாமானியர்களை விட கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் 8 சதவீத வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க கூடிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருந்தீர்கள். அதற்குப் பதிலாக எங்களுக்குக் கிடைத்தது, வெற்று வாக்குறுதிகள் மற்றும் பக்கச்சார்பான வரவு – செலவுத் திட்டங்கள்தான்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.87.35 ஆக சரிந்துள்ளது. 2025 ஜனவரியில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அன்னிய முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளன. இது ஒரு மாதக் கதைதான். எதிர்க்கட்சிகள் இதைப்பற்றி எல்லாம் பேசும் போது நிதியமைச்சர் அவையில் இல்லாமல் போய்விடுகிறார். அப்படியானால், அவர் பதிலளிக்கும்போது நாங்களும் புறக்கணிப்போம்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.68ஆக இருந்த போது, இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மன்மோகன்சிங் அரசை பதவி விலகச் செய்யக் கோரி பேட்டியளித்தார். இப்போது 87.5 ஆக உள்ளது. இப்போது நீங்கள் பதவி விலகுவீர்களா? அல்லது நீங்கள் பதவி விலகவேண்டும் என்று நாங்கள் கேட்க வேண்டுமா?
வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்க இந்தப் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலைவாய்ப்பை உருவாக்குவது காலத்தின் தேவை, ஆனால் 2.5 கோடி பேர் வேலையில்லாமல் இருந்தாலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பெரிய முயற்சிகள் எதுவும் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதியில் 45% வழங்கும், 7.5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டில் இருந்து வரி விலக்கு அல்லது ஆதரவைப் பெறவில்லை. ஆண்டுதோறும் 60-70 லட்சம் இளைஞர்கள் வேலை தேடும் சந்தையில் நுழைகிறார்கள், ஆனால், அவர்களின் வேலைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் விற்கப்பட்டுவிட்டன அல்லது விற்கப்படும் நிலையில் உள்ளன.
பெட்ரோலில் பெரும் லாபம்!
பெட்ரோல் விலையில் நீங்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளீர்கள். கரோனா காலத்தில் கூட உலகம் முழுவதும், சந்தை விலை குறைவாக இருந்தபோது எரிபொருளின் மீதான வரிகள் மற்றும் கலால் வரிகளின் மூலம் அரசாங்கம் அதிக லாபம் ஈட்டியுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கிய போது, ரஷ்யாவின் சந்தை விலையான 120 டாலருக்கு பதில் 60 டாலருக்கு எரிபொருளை விற்றுக்கொண்டிருந்தபோது, நீங்கள் ரிலையன்ஸ் நிறுவனங்களை எதிர்பாராத லாபத்தைப் பெற அனுமதித்தீர்கள், உங்கள் நண்பர்கள் அனைவரையும் லாபம் ஈட்ட அனுமதித்தீர்கள். ஆனால், 50% குறைப்பு பலனை நீங்கள் சாமானியர்களுக்கு வழங்கியிருக்கலாம். இந்தப் பட்ஜெட் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.
எத்தனை நதியை இணைத்தீர்கள்?
2019 இல் ‘ஜல் சக்தி’ என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கியது. நதிகளை இணைப்பதற்காகவும், நாட்டின் எந்தப் பகுதியிலும் வறட்சி அல்லது வெள்ளம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மறுபெயரிடுகிறீர்கள் என்றும் சொன்னீர்கள். ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எத்தனை நதிகளை இணைத்தீர்கள், எத்தனை வெள்ளத்தைத் தடுத்தீர்கள்?
பீகார் தேர்தலை முன்னிட்டு அங்கு அதிக திட்டங்களை அறிவித்துள்ளனர். ஆனால், தென் மாநிலங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் போனஸ் அல்லது ‘மாயாஜால’ அறிவிப்பைப் பார்க்கலாம். கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, சென்னை, அய்தராபாத் போன்ற தகவல் தொழில்நுட்ப மய்யங்கள் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்தாலும், அவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை.
இந்தியாவிலேயே ‘திராவிட மாடல்’ அடிப்படையில் வெற்றி பெற்ற
மாநிலம் தமிழ்நாடு!
தமிழ்நாட்டிற்கு எதிரான பாகுபாடு என்னும் அளவில், கடந்த வாரத்தில், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.2,000 கோடியை ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்களுக்கு திருப்பியளித்துள்ளது. மாணவர்களைத் தண்டிக்கும் ஒன்றிய அரசு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். எங்கள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். எங்கள் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். எங்கள் சொந்த நிதியில் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இந்தியாவிலேயே ‘திராவிட மாடல்’ அடிப்படையில் வெற்றி பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
நிர்மலா சீதாராமன் வளர்ச்சிக்கு காரணம் தந்தை பெரியார்!
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பெண்கள் கல்வியை வலியுறுத்திய பெரியார் என்ற ஒரு மனிதரே! அதை அவர் மறக்கவே கூடாது. 2017 ஆம் ஆண்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் தமிழ்நாட்டில் இருந்தார். முதலமைச்சராகலாம் என்று நினைத்து, அந்த பதவிக்காக ஏங்கிக் கொண்டிருந்ததால், இந்த ஆண்டு நீட் வராது, இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு என்று கூறினார்.
அனைத்து மாணவர்களும் நம்பினர். ஆனால், நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால் அவர் சொன்னது நிறைவேறாது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை கவர, அவர் முயற்சித்தார். அதேபோன்று அவர் இப்போது ஒரு பெரிய பதவிக்காக முயற்சி செய்து இருக்கிறார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நாங்கள் அவரை வாழ்த்துகிறோம்.
இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. 2023-2024 இல் 8 கோடி பேர் (5.7%) மட்டுமே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள்தான் நேரடி வரி செலுத்துபவர்கள். அவர்களில் 4.15 கோடி பேர் மாதம் ரூ.50,000–க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். 1.5 கோடி பேர் மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பதால், வரிச் சலுகைக்கு அவர்கள் தகுதி பெறவில்லை. இதனால் பயன்பெறும் 2.5 கோடி பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இது மக்கள் தொகையில் 1.75% மட்டுமே. இந்த நடவடிக்கை டில்லியில் பா.ஜ.க. வாக்குகளைப் பெற உதவியது. இது ஒரு குறுகிய கால இனிப்பு. நிலையான தீர்வு அல்ல. ஆனால், வளர்ச்சி தேக்கமடைந்தால், விலைவாசி உயர்ந்துள்ளதால் அவர்களுக்கும் இதில் எந்தப் பலனும் இல்லை. எஞ்சிய 98.25% இந்தியர்களுக்கு 12 லட்சம் வருமான வரிச் சலுகையால் எந்த லாபமும் இல்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மறைமுக வரிகள் மூலம் அதிகளவில் செலுத்துகிறார்கள்.
இவ்வாறு தயாநிதி மாறன் மக்களவையில் உரையாற்றினார்.