மாநில அரசின் கருத்துகளைப் புறக்கணிப்பதா?
நாடாளுமன்றத்தில் வில்சன் எம்.பி. தனி நபர் மசோதா தாக்கல்
புதுடில்லி, பிப்.10 தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள், மதச் சிறுபான்மையினர் ஆகிய வகுப்பினருக்கு அவர் களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப இந்திய உச்சநீதிமன்றத் திலும், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிக்கும் வகையிலும், நீதித்துறை நியமனங்களில் மாநில அரசின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தனி நபர் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் 07.02.2025 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.
உயர்நீதித் துறையில் மட்டுமே இடஒதுக்கீடு இல்லை
நாடாளுமன்றத்தில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், மதச்சிறுபான்மையினர் உள்ளிட்ட பிரிவினருக்கு நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கூறும் இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய பி.வில்சன், “அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்து 75 ஆண்டுகள் ஆனபின்னரும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத ஒரே அமைப்பு உயர்நீதித்துறை மட்டுமே. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத் தன்மையை உறுதி செய்ய இந்த மசோதாவை அறிமுகப்படுத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது குறித்த அரசமைப்புச் சட்டத்தின் 124 ஆவது பிரிவைத் திருத்தி 2(B), 2(C), 2(D), 2(E) ஆகிய புதிய உட்பிரிவுகளைப் புதிதாகச் சேர்க்குமாறு இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது குறித்த அரசமைப்புச் சட்டத்தின் 217 ஆவது பிரிவைத் திருத்தி 2(A), 2(B), 2(C), 2(D), ஆகிய புதிய உட்பிரிவுகளைப் புதிதாகச் சேர்க்குமாறு இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் உயர்நீதிமன்றத்திற்குக் கூடுதல், பொறுப்பு நீதிபதிகளை நியமிப்பது குறித்த அரசமைப்புச் சட்டத்தின் 224 ஆவது பிரிவைத் திருத்தி 1(A) எனும் புதிய உட்பிரிவைப் புதிதாகச் சேர்க்குமாறு இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
சட்ட மசோதாவிற்கான நோக்கங்களும் காரணங்களும்
பல கலாச்சாரங்கள், மதங்கள், சமூகங்கள், பாலினங்கள் ஆகியவற்றின் கலவையாகத் திகழும் செழுமையான பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை அனைவருக்கும் சமூக நீதியை உறுதி செய்கிறது. இருப்பினும், தற்போதைய உயர்நீதித்துறை அமைப்பில் பன்முகத்தன்மை இல்லை. தற்போதைய நீதித்துறை நியமனங்களில் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்ட குழுக்கள் புறக்கணிக்கப்பட்டு, சில பிரிவுகள் அதிகப்படியான பிரதிநிதித்துவம் பெறுகின்றன. ஆகையால் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை. அது, சமத்துவமின்மைக்கு இட்டுச்செல்கிறது.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நீதித்துறையில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தருவது முக்கியமானது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நீதித்துறை மீது பொதுமக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படுகிறது. தங்கள் தரப்பு உண்மைகளையும், பிரச்சினைகளையும் நீதித்துறை புரிந்து கொள்ளும் என்று பொதுமக்கள் நம்பவேண்டுமானால் நீதித்துறையில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது இன்றியமையாதது. நீதிமன்ற அமைப்பு பாரபட்சமற்றதாகவும் அணுகக்கூடியதாகவும் இருக்கிறதென் பொதுமக்கள் உணர வேண்டும். மேலும் நீதித்துறை எடுக்கும் முடிவுகளின் தரத்தை உயர்த்துவது அவசியம். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை அனுபவங்களை நீதித்துறைக்கு கொண்டுவருவர்.
பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து நீதிபதிகள் வேறுபட்ட அனுபவங்களைப் பெற்றிருப்பர். இதன் விளைவாக நீதித்துறைத் தீர்ப்புகள் சீரானதாகவும், மிகச் சரியானதாகவும் இருக்கும். பல்வேறு வகுப்பினரை உள்ளடக்கிய நீதித்துறை இருக்குமாயின் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற வகுப்புகளின் உரிமை மீறல் தடுக்கப்படும், பாகுபாட்டைத் தடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகள் நியமனத்தில் உள்ள பற்றாக்குறை அவர்களுக்குள்ள அமைப்புத் தடைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அத்தடைகள் தீர்க்கப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கத் தவறும் நீதித்துறையினால் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற இயலாது.
பன்முகப் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முக்கியமானது
நீதித்துறையில் அதிகரிக்கும் பன்முகத்தன்மை அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும், நாட்டின் பன்மைத்துவ சமூகத்தையும் பிரதிபலிக்கும். ஆகவே நீதித்துறையில் பன்முகத் தன்மையை நிலைநாட்டும் அரசமைப்புச் சட்டம் நீதிமன்றங்களில் அனைத்துத் தரப்பு பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும். எனவே உயர்நீதித்துறையில் பன்முகப் பிரதிநிதித்துவத்தை அரசமைப்புச் சட்டம் மூலம் பாதுகாப்பது மிக முக்கியமானது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பு ‘மூடுமந்திரம்’ போன்றது. அதை மாற்றி வெளிப்படையான நீதிபதி நியமனமுறையைச் செயல்படுத்தினால் நீதித்துறை மக்களின் நம்பிக்கையைப் பெற இயலும். மேலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, கொலிஜியம் அமைப்பு நீதிபதி நியமனப் பரிந்துரைகளின் போது, அந்தந்த மாநில அரசுகளின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இயற்றியச் சட்டங்களைச் சோதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளன. எனவே அத்தகைய நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் முன் மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். கூட்டாட்சியின் உணர்வில் செயல்படும் இந்திய அரசியலமைப்பில் மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் சமமானவை. எனவே நீதிபதிகளை நியமிப்பதில் ஒன்றிய அரசின் கருத்தை மட்டும் கேட்பது சரியன்று. மாநில அரசுகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,
இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களையும் நோக்கங்களையும் முன்வைத்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார். இச்சட்ட மசோதா செயலுக்கு வருமாயின் இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய தொடக்கம் பிறக்கும்.