சென்னை, ஜூலை 15- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (14.7.2023) ஆஜரானார். கடந்த ஏப்.14ஆம் தேதி `திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.
இதையடுத்து டி.ஆர்.பாலு சார்பில் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு, அண்ணாமலைக்கு எதிராக சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பாலு தரப்பில் வழக்குரைஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தனக்கு எதிராக அண்ணாமலை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ரூ.10,841 கோடி மதிப்பிலான, 21 நிறுவனங்கள் தனக்குச் சொந்தமானவை என்று அண்ணாமலை கூறியிருப்பது அவதூறானது, உண்மைக்குப் புறம்பானது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அண்ணாமலை மீது, அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சைதாப் பேட்டை குற்றவியல் நீதிமன்றம், அண்ணாமலை ஜூலை 14இல் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்தது. அதன்படி அண்ணாமலை, சைதாப்பேட்டை 17ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி அனிதா ஆனந்த் முன்னிலையில் ஆஜரானார். அப்போது, அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன.
அதைப் பெற்றுக்கொண்ட அண்ணாமலை, தமிழ் நாட்டில் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஏதுவாக, அடுத்த மாதத்துக்கு வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார். அதையடுத்து நீதிபதி, ஆக. 24ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து, அன்றும் அண்ணாமலை நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.