பெங்களூரு, பிப்.8- தனது மகன் ஒரு திருடன் என தெரிந்ததும், இறந்துபோன அவனது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்ய மறுத்து சென்ற தாய். அதுகுறித்த விவரம் வருமாறு:
வாலிபர் பிணம்
கர்நாடக மாநில பெங்களூரு கோனனகுண்டே கனகபுரா ரோட்டில், ஆயத்த ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் புதர் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து சென்ற கோனனகுண்டே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. வாலிபரின் பிணம் கிடந்த இடத்தில் அலைபேசி ஒன்று கிடைத்தது. அதனை வைத்து காவல் துறையினர் துப்பு துலக்கினர்.
அப்போது பிணமாக கிடந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணமாக கிடந்த வாலிபரின் உருவப்படத்தை கோனனகுண்டே காவல் துறையின், கேரளா காவல் துறையினருக்கு அனுப்பிவைத்தனர். இதில் இறந்தவர் கேரளாவை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 37) என்பது தெரியவந்தது.
நல்லொழுக்கம் இல்லாதவன்
இதையடுத்து அவரது தாயை கண்டுபிடித்த காவல் துறையினர், விஷ்ணு பிரசாத்தின் உடலை அடையாளம் காண வரும்படியும், உடலை பெற்றுச் செல்லும்படியும் கூறினர். ஆனால் தனது மகன் திருடன், அவன் நல்லொழுக்கம் இல்லாதவன், அவனது உடலை பார்க்க வர மாட்டேன் என அவரது தாய் கூறி பிடிவாதம் பிடித்துள்ளார். ஒரு வழியாக அவரை காவல் துறையினர் சமாதானப்படுத்தி பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவரும் மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்த உடலை பார்த்து, இது தனது மகன் விஷ்ணு பிரசாத் தான் என அடையாளம் காட்டினார்.
ஆனால் அவரது உடலை சொந்த ஊரான கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அவர் மறுத்து விட்டார். காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் நல்லொழுக்கம் இல்லாமல் திருடி வந்த இவனது உடலை நான் சொந்த ஊர் எடுத்துச் செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக கூறி அங்கிருந்து தாய் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
திருட்டு வழக்குகள்
இதனால் காவல் துறையினரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர். மேலும் விஷ்ணு பிரசாத்தின் பின்னணி பற்றி விசாரித்தனர். இதில் அவர் பிரபல திருடன் என்பதும், இவர் மீது கேரளா, தமிழ்நாடு, கருநாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.