கேள்வி 1: “பெரியாரை மரியாதை குறைவாகப் பேசுகிறவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பதற்குத் தயாராக இல்லை. பெரியார்தான் எங்களுடைய தலைவர். அவர்தான் எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்” என்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதை உலகத் தமிழர்கள் கையொலி எழுப்பி மகிழ்வுடன் வரவேற்றிருப்பது இன எதிரிகளுக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?
– தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 1: இன எதிரிகளின் கலக்கத்தின் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்று வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அகற்ற புதிதாக மதக் கலவரத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்! இதிலும் மூக்குடைபடுவார்கள்.
– – – – –
கேள்வி 2: “திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் கடுமையாக கேலி செய்யப்பட்டவர் காந்தி” என்று கூறுகின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தியைக் கொன்றவர் ஆர்.எஸ்.எஸில் இருந்த நாதுராம் கோட்சே என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதும், அவரை தியாகியாகப் போற்றிக் கொண்டாடுவதும் சரியா?
– ஆ.கமலக்கண்ணன், கல்லக்குறிச்சி.
பதில் 2: அவர் தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை பகிரங்கப்படுத்தும் நிலையில் காந்தியார் பற்றி – அதுவும் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவது – போலிக்கண்ணீர் – நீலிக்கண்ணீர் கோட்சே கும்பல்களுக்குப் பல ‘வித்தைகள்’ அத்துப்படி!
– – – – –
கேள்வி 3: மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவின் நேர்முக செயலாளராக ஈரோட்டைச் சேர்ந்த தமிழர் சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டிருப்பது பெருமைப்படத்தக்க ஒன்றல்லவா?
– க.நவீன்குமார், ஈரோடு.
பதில் 3: மகிழத்தக்கதுதான். அவர் பணியை அவர் செம்மையாகச் செய்வார். தமிழர்களின் அறிவு எங்கும் செல்லும் என்பதற்கான சான்று இது!
– – – – –
கேள்வி 4: இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் இந்திய அளவில் தமிழ்நாட்டில் வெகுவாக அதிகரித்திருப்பதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவித்திருப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கல்வித் துறையில் ஓர் மைல்கல் என்று கருதலாமா?
– க. சண்முகம், மணிமங்கலம்.
பதில் 4: அது மகிழத்தக்கது; அதை ‘பட்ஜெட்’ படித்து நிதி அறிவித்த ஒன்றிய நிதி அமைச்சர், பிரதம அமைச்சர் எல்லாம் மறந்து விட்டனரே! அது மகா கொடுமை அல்லவா?
– – – – –
கேள்வி 5: “ஸநாதன தர்மத்தைப் பின்பற்றி சுதேசி இயக்கத்தை விஷ்ணுவின் அவதாரம் என வ.உ.சி. அழைத்தார்” என்று நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஏற்புடையதா?
– ஜெ.இராதாகிருட்டிணன், கூடுவாஞ்சேரி.
பதில் 5: ஆளுநர் ரவியின் பொறுப்பற்ற – ஆனால் திட்டமிட்ட விஷமப் பிரச்சார வினைகளில் இது லேட்டஸ்ட் அரை வேக்காட்டுத்தனம்! எப்படிச் சிரிக்குமோ நாடு!
– – – – –
கேள்வி 6: “ஒவ்வொரு அதிகார அமைப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைமைப் பொறுப்பில் அமருவதைக் காண விரும்புகிறேன்” என ராகுல் காந்தி கூறியிருப்பது, சமூகநீதியை சிதைக்க நினைக்கும் பிஜேபிக்கு மரண அடியாக அமையுமா?
– இ.தனசேகரன், அரூர்.
பதில் 6: ராகுல் காந்தி அவர்கள் ஓர் உண்மை பேசும் – நியாயவான். தனது காங்கிரஸ் கட்சி பற்றி, 1990களில் அது ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்பட்டது தவறு என்று ஒப்புதலைக் கூறி, பரிகாரம் தேட உண்மையாக முயற்சிப்பதில் காங்கிரசின் எதிர்காலம் மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலமும் பின்னிப் பிணைந்துள்ளது!
– – – – –
கேள்வி 7: “சென்னைதான் புதிய ‘டெட்ராய்ட்’ நகரம். சென்னை மாநகரம் அபரிதமான வளர்ச்சி பெற்று இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது” என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியிருப்பது தமிழ்நாட்டில் உள்ள பிஜேபி கட்சியினரின் செவிகளுக்கு எட்டுமா?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில் 7: ஏறாது! யார் காதில் ஏறினாலும், ஒன்றிய அரசின் பிரதான புருஷர்களுக்கு, அவர்களின் முகவரும் ஆன அண்ணாமலைகளுக்கு ஏறவே ஏறாது! உண்மையை பேசியமைக்கு நமது பராட்டு!
– – – – –
கேள்வி 8: மனிதநேயம் இல்லாமலும், மனம் போன போக்கிலும் இந்தியாவையும், இந்தியர்களையும் அவமானப்படுத்திய அமெரிக்காவின் செயல்பாடுகள் பற்றியும், ஒன்றிய அரசின் ‘ரியாக்சன்’ இல்லாமை பற்றியும் தங்கள் கருத்து?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 8: அய்.நா.வின் மனித உரிமைகளில் தீவிர குற்றவாளிகளைக் கூட மனித நேயத்தோடு நடத்திட உள்ள விதிகள் வெறும் ஏட்டுக்சுரைக்காய்தானா? இப்படி நம் நாட்டின் சுயமரியாதையை இழப்பது ஏற்கத்தக்கதல்ல; கண்டிக்கத்தக்கது!
– – – – –
கேள்வி 9: ஒட்டுமொத்த தென் இந்தியாவின் மக்கள் தொகையை விட அதிகமாக 48 கோடி பேர் கும்பமேளா வந்து முழுக்குப் போட்டதாக உத்தரப் பிரதேச அரசே அறிக்கை வெளியிட்டுள்ளதே – எப்படி இவ்வளவு பேர் அங்கு சென்றிருப்பார்கள்?
– கல.சங்கத்தமிழன், நுங்கம்பாக்கம்
பதில் 9: புருடா மாஸ்டர்களின் தினப் புளுகு வரிசையில் இவை லேட்டஸ்டுகள்.
– – – – –
கேள்வி 10: அமெரிக்காவில் இருந்து வந்தவர்களை வரவேற்று மோடி, மோடி, மோடி… ஜெய் சிறீராம், பாரத் மாதா கி ஜே சொல்ல எந்த அமைச்சரும் செல்லவில்லையே – ஏன்?
– மா.சாக்கியமுனி, காஞ்சி
பதில் 10: ஒருவேளை ஆமதாபாத் அனுமானிடம் சென்று அமெரிக்கா செல்ல விசா கிடைக்க வேண்டிக் கொண்டிருக்கக் கூடும்.