காஞ்சிபுரம், பிப்.6 மாநிலங்களுக்கு அதிக உரிமை என்பதுதான், அறிஞர் அண்ணாவின் கொள்கை, அண்ணாவின் நினைவு நாளில் அதனை முன்னெடுப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
3.2.2025 அன்று மாலை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மண்ணில், அவருடைய நினைவு நாளை யொட்டி நாம் ஒரு சூளுரையை எடுத்துக் கொள்ளவேண்டும்.
அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!
அண்ணா அவர்கள் தமிழ்நாட்டிற்கு முப்பெரும் சாதனைகளை ஓராண்டில் செய்து முடித்து, சுயமரியாதை உள்ள ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டும் என்பதற்குத் தந்தை பெரியாருடைய தலைமகனாக இருந்து அந்தக் கொள்கைகளை சட்டமாக்கினார்கள்.
எனவே, அண்ணா அவர்கள் உருவாக்கிய, அடித்தளமிட்ட, அடிக்கட்டுமானமிட்ட அந்த ஆட்சிதான், பிறகு கலைஞர் ஆட்சியாகவும், இன்றைக்கு ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியாகவும் நடந்து, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பல திட்டங்களைத் தரக்கூடிய அளவிற்கு, காலை உணவுத் திட்டங்கள் போன்றவற்றை மற்ற நாடுகளெல்லாம் கூட இப்பொழுது பின்பற்றக்கூடிய அளவிற்கு செயல்படுகிறது. திராவிட ஆட்சி என்பது வெறும் காட்சியல்ல; இந்த இனத்தின் மீட்சி என்பதை தற்போது தெளிவாக உணர்த்துகிறார்கள்.
எனவே, இந்த ஆட்சி என்பது வெறும் பதவிக்காக அல்ல; அண்ணா அவர்கள் ‘‘பதவி என்பது மேல் துண்டு; கொள்கை என்பது வேட்டி‘‘ என்பதைத் தெளிவாகச் சொன்னார்கள். அதையே இன்றைக்கு மக்களுக்குப் பாடமாக எடுத்துச் சொல்லக்கூடிய முக்கிய நாள்தான் அண்ணாவினுடைய நினைவு நாள்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் –என்பது அண்ணாவின் கொாள்கை
அண்ணாவினுடைய போராட்டம் என்பது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதையே மய்யப்படுத்தி இருந்தது.மாநில சுயாட்சியைத்தான் வலியுறுத்தினார் அண்ணா அவர்கள். இன்றைக்கு அதனுடைய தேவையை அதிகமாக உணருகிறோம்.
ஏனென்றால், பட்ஜெட் வருகிறது; நம் முடைய வரிப் பணம் அங்கே, செல்கிறது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை.
இன்னுங்கேட்டால், வளர்ச்சி என்று வருகிறபொழுது, இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலம் என்பதிலே தமிழ்நாடு பெயர்தான் இருக்கிறது.
கல்வி வளர்ச்சி எங்கு அதிகமாக இருக்கிறது என்றால், தமிழ்நாடு பெயர்தான் இருக்கிறது. இப்படி எல்லாவற்றிலும் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த மாநிலத்தில், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் வருகின்ற பொழுது, அதற்கு ஒரு துளியும் நிவாரண நிதியைத் தரமாட்டோம்; ஒரு பைசாகூட கொடுக்கமாட்டோம் என்று சொல்வது – அது ஒன்றிய அரசினுடைய அடாவடிப் போக்காகும். நடைமுறையில் ஒன்றிய அரசினர் பேசுவதற்கும், நடப்பதற்கும் சம்பந்தமில்லாத ஒன்றாக இருக்கிறது.
கூட்டுறவு – கூட்டாட்சி என்றால் என்ன?
கூட்டுறவு கூட்டாட்சி என்ற வார்த்தையைச் சொல்லி இருக்கிறார்கள். கூட்டுறவு என்றால், மாநிலங்களுடைய கூட்டுறவு அல்லவா!
ஒரு குறிப்பிட்ட மாநிலம், ஒன்றிய அரசுக்கு யார் பயன்படுவார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று ஓரவஞ்சணையாக நடந்து கொள்வதற்கு இது என்ன அவர்களுடைய சொந்தக் கட்சிப் பிரச்சினையா?
ஒன்றிய அரசுக்குள்ள பணம் மக்களாகிய நாம் கொடுக்கும் வரிப் பணம் அல்லவா!
அதனை ஒழுங்காக நிர்வகித்து, மாநிலங்களுக்குத் தரவேண்டாமா?
இந்தப் பிரச்சினையை அண்ணா அவர்கள் தொலைநோக்கோடு அன்றைக்கே எழுப்பியிருக்கிறார்கள்.
மாநில சுயாட்சியை நாம் பாதுகாக்க வேண்டும்; மாநில அதிகாரங்களை வலியுறுத்த வேண்டும் என்று சொன்னார்.
அண்ணாவிற்குப் பிறகு வந்த கலைஞர் அவர்கள், ராஜமன்னார் தலைமையில் குழுவைப் போட்டு, மாநிலங்களுக்கு அதிகாரங்களை உண்டாக்கினார்கள்.
இன்றைக்கு அதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். நாம் மட்டுமல்ல, பக்கத்தில் இருக்கின்ற கேரளா போன்ற மாநிலங்களும் வஞ்சிக்கப்படுகின்றன.
எனவேதான், அவ்வப்போது மக்கள் ஒன்று சேரவேண்டும்.
டங்ஸ்டன் திட்டம் மக்கள் எழுச்சியால்
ரத்து செய்யப்படவில்லையா?
மதுரையில், டங்ஸ்டன் திட்டம் வேண் டாம் என்பதற்காக மக்கள் ஒன்று திரண்டு எதிர்த்தபோது, அந்தத் திட்டத்தை எதற்காக, எப்படிப் பின்வாங்கினார்களோ, அதுபோல, மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். நம்முடைய உரிமைகளை நாம் பாதுகாக்கவேண்டும்.
நாம் வரிப் பணம் கொடுக்கிறோம்; அதை ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்கவேண்டும். அப்படி பிரித்துக் கொடுக்கும்போது, எல் லோருக்கும் நியாயமாகப் பிரிக்கவேண்டுமே தவிர, ஒரு பக்கமே தராசு சாயக்கூடாது – அது நீதியல்ல.
அண்ணா அவர்கள் ஓராண்டு கால ஆட்சியிலேயே மாநில உரிமைகளுக்காக ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடவேண்டும் என்று திட்டமாக, வழி முறையாகக் கொடுத்தார். அதற்கு முன் 1962 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.
எனவேதான், அண்ணா வழியிலே வரக்கூடிய இந்த ஆட்சி – அண்ணாவினுடைய நினைவு நாளை, நாம் வெறும் நினைவு கூர்கின்ற ஒரு நாளாக மட்டும் கருதாமல், ஒரு வழிகாட்டித் தன்மையாக இந்த நாளைக் கொள்ளவேண்டும்.
எனவே, அண்ணா அவர்கள் வெறும் படம் அல்ல, பாடம்!
அண்ணாவினுடைய சிலை என்பது வெறும் சிலையல்ல; சீலம்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் சட்ட விரோத செயல்பாடுகள் செய்தியாளர்: புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறதே, அதனை சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: புதிய கல்விக் கொள்கை என்பதை நம்முடைய திராவிட மாடல் அரசு ஏற்காது என்பதை, கல்விய மைச்சரில் இருந்து முதலமைச்சரில் இருந்து, சட்டப்பேரவையிலும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
இப்போது அதற்கு மாற்றாக என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தக்கூடிய ஆளுநர் என்கிற ஒருவர், அவருடைய கண் ஜாடையினால், ஒழுக்கமற்று பல கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடிய சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் – பல தவறான நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் அவர்மீது இருக்கக்கூடிய துணைவேந்தர் – அந்தப் பல்கலைக் கழகத்திற்கென்று தனி சட்ட திட்டங்களை வைத்துக் கொண்டிருக்கின்றார்.
புதிய கல்விக் கொள்கையை சேலம் பல்கலைக் கழகத்தில் மட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றால், அப்படி ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கக்கூடியது. அரசின் பணத்தினால் இயங்கக்கூடியது. அரசு பல்கலைக் கழகம் அது. அந்தப் பல்கலைக் கழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னால், அது ஏற்றகத்தக்கதல்ல.
அதேபோன்று ஆளுநரும், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 163 இன்படி, அமைச்சரவை என்ன முடிவு செய்கிறதோ, அதனை செயல்படுத்த வேண்டியதுதான் ஓர் ஆளுநரின் கடமையாகும்.
அதற்கு மாறுபட்டு கருத்து சொல்வதற்கு, அவருக்கு உரிமை இல்லை.
அதனை மீறுகிறார் என்று சொன்னால், அரசமைப்புச் சட்டத்தை அவர் மீறுகிறார். அப்படிப்பட்ட நிலையில் அவர் வகிக்கும் பதவிக்கு எந்தவிதமான அறவழிப்பட்ட உரிமையும் கிடையாது. அரசமைப்புச் சட்டப்படியும் அவர் செய்வது சரியானதல்ல!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.