பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – மதுரை இடையிலான அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 4 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. மதுரை – தாம்பரம் அதிவிரைவு ரயிலில் (22,624) பிப். 6ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை கூடுதலாக தலா 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. தாம்பரம் – மதுரை ரயிலில் (22,623) பிப்.7ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை தலா 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் தற்காலிகமாக சேர்க்கப்பட உள்ளன என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி இறுதியில் கல்வியியல் தேர்வுகள் 2023-2024ஆம் கல்வி ஆண்டில் பிஎட், எம்எட் (கல்வியியல்) மற்றும் சிறப்பு கல்வி பிஎட், எம்எட் படிப்புகளில் சேர்த்து மாணவர்களுக்கும், அரியர் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி இறுதி வாரத்திலும், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 2ஆவது வாரத்திலும், நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதலமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்பில்
புதிதாக 10 ஆயிரம் இடங்கள்
நாடு முழுவதும் தற்போது 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அதேபோல முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கூடுதலாக 10 ஆயிரம் இடங்களையும் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் சிறப்பு மருத்துவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு பெறுதல்:
உண்மைத் தன்மை சரிபார்ப்புக்கு கெடு
சமையல் எரிவாயு உருளை பெற வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்கும் விரல் ரேகை பதிவு பணியை, மார்ச்சுக்குள் முடிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒன்றிய அரசு கெடு விதித்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் உள்ள சமையல் எரிவாயு பயனாளிகளில், 60 சதவீதம் பேர் விரல் ரேகை பதிவு செய்துள்ளனர். ஆனால், சென்னையில், 25 சதவீதம் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, 50 சதவீதம் பேர் கூட ஒத்துழைக்கவில்லை. எனவே, சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களின் உண்மை சரிபார்ப்பு பணியை, மார்ச்சுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பெட்ரோலிய அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.