புதுடில்லி, பிப்.5 உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை எவ்வளவு? என்று சமாஜ்வாதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் மக்களவையில் கேள்வியெழுப்பினார்.
மூடி மறைப்பு
உயிரிழந்தோர் எண்ணிக்கையை மூடி மறைப்பதாக ஒன்றிய அரசு மீது குற்றஞ்சாட்டிய அவா், இச்சம்பவம் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மவுனி அமாவாசை தினத்தில் ‘புனித’ நீராட கோடிக்கணக்கானோர் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் நேற்று (4.2.2025) பேசிய அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தை எழுப்பினார். ‘மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ‘எண்ம’ வசதிகள் குறித்து பெரிதாகப் பேசும் ஒன்றிய அரசு, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைக்கிறது. மகா கும்பமேளா ஏற்பாடுகளில் தவறான மேலாண்மையை மறைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புல்டோசர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட உடல்கள்
‘புண்ணியம்’ தேடுவதற்காக வந்த மக்கள், தங்கள் அன்புக்குரியவா்களின் உடல்களோடு ஊா் திரும்பும் அவலம் நேரிட்டுள்ளது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, டிராக்டா்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. எனவே, மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கை, அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவா்களின் இருப்பு, உணவு, குடிநீா், போக்குவரத்து வசதிகள் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும். மகா கும்பமேளா ஏற்பாடுகள் தொடா்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதோடு, அங்கு பேரிடா் மேலாண்மை நடவடிக்கைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார் அகிலேஷ்.