ஒலிப்பதிவை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப்.5 மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் மாநில முதல்வா் பிரேன் சிங்குக்கு முக்கிய பங்கு இருப்பதாக கசிந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோதல்
மணிப்பூரில் பெரும்பான்மையின ராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இரு சமூகத்தினருக்கு இடையே நீடித்து வந்த வன்முறையில் 250-க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனா். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனா்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் குகி மனித உரிமைகள் அறக்கட்டளை அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியதில் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்குக்கு முக்கிய பங்குள்ளது. இதற்கு அவா் பேசிய ஒலிப்பதிவு ஆதாரங்கள் உள்ளன. இதுதொடா்பாக நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
ஒலிப்பதிவு ஆதாரம்
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று முன்தினம் நேற்று முன்தினம்விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘வன்முறையில் ஈடுபட மாநில அரசின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மைதேயி குழுக்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் பேசி கசிந்த ஒலிப்பதிவை உண்மை கண்டறியும் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அந்தப் பரிசோதனையில் ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ள குரல் 93 சதவீதம் பிரேன் சிங்கின் குரல்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. முதலமைச்சர் பிரேன் சிங் பேசியதாக கசிந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மையை ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகம் ஆராய்ந்து, 6 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் முத்திரையிடபட்ட உறையில் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 24-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.