மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (காங்.) ஓங்கி அடித்தார்!
தங்களின் மறைமுகத் திட்டத்தை செயல்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளனர், எச்சரிக்கை!
ஒரு பெண்மணி நிதியமைச்சராக இருந்து நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை யும் படிக்கும் உரிமை கிடைத்தது – இந்திய அரசமைப்புச் சட்டத்தினாலேதானே தவிர, மனுஸ்மிருதியால் அல்ல என்று மாநிலங்களவையில் மனுதர்மத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஓங்கி அடித்தார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. அவருக்கு நமது பாராட்டுகள் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அதேநேரத்தில், தங்களின் மறைமுகத் திட்டத்தை செயல்படுத்த காத்துக் கொண்டிருப்பவர்களையும் அடையாளம் காட்டி எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நேற்று (3.2.2025) நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட்பற்றி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.மல்லிகார்ஜூன கார்கே அவர்கள், ‘‘நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்குப் பட்ஜெட் வாசிக்க உதவியது – இந்திய அரசமைப்புச் சட்டமே தவிர, மனுஸ்மிருதி அல்ல; சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களும் அரசமைப்புச் சட்டம் காரணமாகவே அவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்’’ என்று பளிச்சென்று ஓங்கி அடித்துப் பேசியுள்ளதோடு, கையில் மனுஸ்மிருதி புத்தகத்தை வைத்துக்கொண்டே அவையில் இவ்வாறு பேசியுள்ளார்.
ஒரு பெண்மணி நிதியமைச்சராக இருந்து நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் உரிமை கிடைத்தது யாரால், எப்படி?
நிதியமைச்சர் அம்மையார் அவர்கள் ஒரு பெண்மணி – அவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அதுபற்றிப் பொருட்படுத்தாமல், அவரது, அரசியல் வாழ்வில் எட்டாவது முறையாக பட்ஜெட் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் அந்த வாய்ப்பைப் பெற்றார். அதற்கு மூல காரணம் மனுஸ்மிருதியும், பகவத் கீதையும் கூறிய பெண்ணிய கண்டனக் கருத்துகளை ஒதுக்கிப் புறந்தள்ளி, ஜாதி, மத, பாலின வேறுபாடுகளைத் தாண்டி, சமத்துவமும், சம வாய்ப்பும் தந்துள்ளது அரசமைப்புச் சட்டமே! நமது புரட்சியாளர் அம்பேத்கரின் அரும்பெரும் முயற்சியால் – பற்பல நேரங்களில் ‘‘வாடகைக் குதிரையாக’’ (டாக்டர் அம்பேத்கர் மொழி இது) அவர் பயன்படுத்தப்பட்டதையும் தாண்டி, பெண்ணுரிமை – சம உரிமை வாய்ப்பால்தான் இந்தப் பெருமை, இந்த அம்மையாருக்குக் கிடைத்திருக்கிறது.
பெண்களைப்பற்றி மனுதர்ம சாஸ்திரமும், கீதையும் கூறுவது என்ன?
மனுஸ்மிருதியால் பெண்களுக்கு எக்காலத்திலும், எந்த நிலையிலும் – சுதந்திரம், சமத்துவம் அறவே கிடையாது என்பதுதானே அதன் ஸநாதனத் தத்துவம்?
அதுபோலவே, பகவத் கீதையால் பெண்கள், சூத்திரர்களும் எவ்வாறெல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை இந்த அறிக்கையில் குறிப்பிடுவது அவ்வளவு நனிநாகரிகமாகாது.
பல சுலோகங்கள் அருவருப்பு நிறைந்து, பெண்களைக் கொச்சைப்படுத்தும் நிலைதான்!
உயர்ஜாதிப் பெண்களுக்கும்கூட வேதத்தைப் படிக்க, கேட்க உரிமையே கிடையாது என்பதுதானே வர்ணதர்மத்தின் கோட்பாடு!
அதைத்தான் மிக அழகாகச் சுட்டிக்காட்டி, யதார்த்தத்தை அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான திரு.மல்லிகார்ஜூன கார்கே அவர்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ‘‘ஆர்கனைசர்’’ வார ஏட்டில், 1949 நவம்பர் 26 ஆம் தேதி (அரசமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள்) ஆர்.எஸ்.எஸ். தலைவரும், கொள்கை கர்த்தாவுமான எம்.எஸ்.கோல்வால்கர், இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்தபோது, மிகவும் வன்மத்துடன் எழுதினார் அவ்வேட்டின் தலையங்கத்தில்
‘‘பழைமையான நமது பாரதத்தில் நிலவிய தனித்துவமான அரசமைப்பு மேம்பாடுகள் குறித்து நமது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவே இல்லை.
‘மனு’வின் சட்டங்கள், ஸ்பார்ட தேசத்து லிடுர்கஸ், பெர்ஷியா தேசத்து சோலோன் ஆகியோருக்கு முன்பே எழுதப்பட்டவைவே.
மனுஸ்மிருதியில் இதுநாள்வரை ஒளிரும் அந்தச் சட்டங்கள் உலகின் மரியாதையை – தன்னெழுச்சியான தழுவுதலை உறுதிப்படுகின்ற நமது அரசமைப்புச் சட்ட வல்லுநர்களைப் பொறுத்தவரை அது ஒன்றுமில்லை.’’
அதுமட்டுமா?
இந்தியாவுக்கு மனுதர்மமே அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று சொன்னவர்கள்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வழக்குரைஞர்கள் நடத்திய பல மாநாடுகளில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதியே, இந்திய அரசமைப்புச் சட்டமாக ஆக்கப்படவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அதைத்தான் வெளிப்படையாகவே நடைமுறையில் – ஒரு பக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டே, மறுபுறம் இம்மாதிரி தீர்மானம் இயற்றும் இரட்டை வேடம் பூண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய உண்மை.
முந்தைய அவர்களது மறைமுகத் திட்டம் (Hidden Agenda) இப்போது வெளிப்படையாக பேசு பொருளாகி (Open Agenda), சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்துள்ளனர் – எச்சரிக்கை!
அப்படி வந்தால், பெண்களின் சுதந்திரம், சமத்துவம் என்னவாகும்?
முகமூடியைக் கிழித்தார்
காங். தேசிய தலைவர் கார்கே!
இதை எண்ணிப் பார்க்கவே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சிறப்பாக அரசமைப்புச் சட்டத்தில் அமர சந்தர்ப்பம் பார்க்கும் மனுஸ்மிருதிவாதிகளின் முகமூடியைக் கழற்றி அடையாளம் காட்டியுள்ளார்.
அவருக்கு நமது பெரியார் மண்ணின் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
4.2.2025