சென்னை, பிப். 3- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்திலுள்ள அரசு சென்னை ஆதிதிராவிட, அரசு உதவி பெறும் 877 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 விகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டு மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு 4ஆம் தேதி, 5ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதி ஆகிய நாள்களில் நடத்தப்படுகிறது.
இதில் சென்னை மாவட்டத்தில் 67,421 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்த மதிப்பீட்டு கண்காணிப்பு பணிக்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுகலையில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி மாணவர்கள் 609 பேர், கள ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே 1.2.2025 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.