தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் ஒன்றிய அரசின் பட்ஜெட் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தோட்டா காயத்துக்கு சிறு கட்டுப் போடுவதா? – ராகுல்காந்தி
புதுடில்லி, பிப்.2 ஓர வஞ்சனையுடனும் அலங்கார வெற்று வார்த்தைகளுடனும் தயாரிக்கப்பட்டதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிலை நிலை அறிக்கை என்று இந்தியா முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் கண்டித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத் தளப் பக்கத்தில் பதிவிட் டிருப்பதாவது: ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட நிதி நிலை அறிக்கைகளில் தொடர்ந்து இடம்பெறுவதில்லையே, எத்த னையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கை யில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் – ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன், எது தடுக்கிறது?
பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளது. ஏன்?
தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும், மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா? ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை.
வெற்றுச் சொல்
வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம்போல் ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி
இதுகுறித்து மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “துப்பாக்கி தோட்டா காயங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் ஒன்றிய பட்ஜெட் உள் ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் யோசனைகள் இல்லாமல் திவாலாகி விட்டது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில், “கடந்த 10 ஆண்டு களில், நரேந்திர மோடி அரசு நடுத்தர வர்க்கத் தினரிடமிருந்து ரூ.54.18 லட்சம் கோடி வருமான வரியை வசூலித்துள்ளது. இப்போது ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.80,000 சேமிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் இது ஒரு மாதத்திற்கு ரூ.6,666 மட்டுமே.
நாடு முழுவதும் பணவீக்கம் மற்றும் வேலை யின்மை பிரச்சினையால் மக்கள் போராடி வருகின்ற நிலை உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் தவறான பாராட்டுகளைப் பெறுவதில் குறியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், “வேளாண்மை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், முதலீடு, ஏற்றுமதி என நான்கும் வளர்ச்சிக்கான இன்ஜின்கள் என்று நிதியமைச்சர் கூறுகிறார்.
ஆனால் பல இன்ஜின்கள் இருப்பதால் பட்ஜெட் முற்றிலும் தடம்புரண்டு விட்டது. 2010இல் இயற்றப்பட்ட அணுசக்தி விபத்துக்கான சிவில் பொறுப்பு சட்டத்தை அருண் ஜேட்லி தலைமையிலான பாஜக வெற்றிகரமாக நாச மாக்கியது. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை திருப்திப்படுத்த அந்த சட்டம் திருத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவிக்கிறார்” என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்
நரேந்திர மோடி பிரதமராக உயர்ந்ததில் உத்தரப்பிரதேசத்தின் பங்கு உள்ளது. ஆனால் நிதியமைச்சரின் உரையில் உ.பி. பற்றி எதுவும் இல்லை. உ.பி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதி லும் அதுபற்றிய அறிவிப்பு இல்லை. உ.பி.யில் விவசாயிகளுக்கு இன்னும் சந்தைகள் இல்லை. இளைஞர்களுக்கான பயிற்சி போன்ற குறுகிய கால நடவடிக்கைகள் வேலையின்மை நெருக்கடியைத் தீர்க்காது.
அர்விந்த் கெஜ்ரிவால்
நாட்டின் பெரும் பணக்காரர்கள் சிலரின் கடன் தள்ளுபடிக்காக நாட்டின் பெரும் பகுதி பணம் செலவு செய்யப் படுகிறது. இதை முடி வுக்கு கொண்டு வந்து, அதில் சேமிக்கப்படும் பணத்தை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவ சாயிகளுக்குச் செலவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தேன். ஆனால் அதுபற்றி ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தேன். வருமான வரி, ஜிஎஸ்டி வரி விகிதங்களை பாதியாக குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் செய்யப்படவில்லை.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்
பஞ்சாப் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பீகாருக்கான அறிவிப்புகள் மட்டுமே உள்ளன. பஞ்சாப் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. விவ சாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப் படவில்லை. பஞ்சாப் தொழில் துறைக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. அனைத்து மாநிலங் களையும் சமமாக கரு தாமல் அப்பட்டமான பார பட்சத்தோடு நிதி ஒதுக்கீடு இருக்கிறது. 140 கோடி பேரில் ரூ.12 லட்சம் வரி விலக்கு அறிவிப்பால் 2 சதவீத பேர் பயன்பெறும் நிலையில், மீதமுள்ள 138 கோடி மக்களுக்கு என்ன சலுகை வழங்கினார் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும், விலை வாசி உயர்வை கட்டுப் படுத்தவும் உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்பேரவைத் தேர் தலை எதிர்நோக்கி பீகார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து, தமிழ்நாட்டை வஞ்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
நிச்சயமற்ற வருமானப் பிரிவில் உள்ள சுமார் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தி சரிந்து வருவதைத் தடுத்து, மேம்படுத்த எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. வழக்கம் போல பன்னாட்டுக் குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிதிநிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது.
இவ்வாறு தலைவர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.