இங்கே பயிற்சி பெற்றவர்கள் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
ரெ.இராமசாமி – பரிபூரணம் ஆகியோரின் ‘பரிபூரணக் குடில்’
இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
கீழ்வேளூர், ஜன.27 மாதவன் அவர்கள், பெரியார் திடலில் பயிற்சி பெற்று, இப்பொழுது அமைச்சரின் உதவியாளராக இருக்கிறார். பெரியார் திடலில் பெற்ற அனுபவங்களை அவர் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார். எப்பொழுதுமே பெரியார் திடல் ஒரு நாற்றங்கால் பண்ணை. அதிலிருந்து விதைகள் வந்துகொண்டே இருக்கும். பல வயல்களுக்கும் அது சென்று பயன்படும். அய்யா காலத்திலிருந்து பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘பரிபூரணக் குடில்’ அறிமுக விழா!
கடந்த 24.1.2025 அன்று காலை திருவாரூர் மாவட்டம் இராயத்தமங்கலம் ஆசிரியர் கி.வீரமணி நகரில், ‘பரிபூரணக் குடில்’ இல்லத்தை அறிமுகம் செய்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
பெற்றோருக்குக் காட்டும் நன்றி உணர்ச்சி!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய இராயத்தமங்கலம் என்ற ஓர் அற்புதமான ஊரிலே, கழகக் கொள்கையாளர்கள், கழகக் கொள்கையினால், தந்தை பெரியாருடைய தொண்டர்களாக, இயக்கச் சீலர்களாக கீழப்பாடி தொடங்கி, இன்னும் திருவாரூர், நாகை வரையில் உள்ள அத்துணை கிராமங்களிலும் மிகச் சிறப்பான வகையில், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின்மூலமும், திராவிடர் கழகத்தின்மூலமும், பகுத்தறிவாளர் கழக அமைப்புகள்மூலமும் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு நாங்கள் வராத கிராமப் பகுதிகளே கிடையாது. அப்படிப்பட்ட இந்தப் பகுதியில், நம்முடைய அருமைத் தோழர் மாதவன் – ரஞ்சிதா ஆகியோர் ஒரு நல்ல இல்லத்தை உருவாக்கி, அந்த இல்லத்திற்கு “பரிபூரணக் குடில்” என்ற பெயரிலே அவருடைய பெற்றோர்களான ரெ.இராமசாமி – பரிபூரணம் ஆகியோருக்குக் காட்டும் நன்றி உணர்ச்சியின் அடையாளமாக இந்த இல்லத்தை அமைத்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.
புதுமனைப் புகுவிழா அல்ல இது – இல்ல அறிமுக விழா!
‘பரிபூரணக் குடில்’ என்று பெயர் வைத்து, அதனுடைய அறிமுக விழாவை இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது புதுமனைப் புகுவிழா அல்ல; ஏனென்றால், ஏற்கெனவே புதுமனையில் எல்லோரும் புகுந்துதான் பெயிண்ட் மற்ற மற்ற வேலைகளையெல்லாம் செய்திருப்பார்கள்; ஆகவே, நாம் புதிதாக போவது அல்ல. எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான், நாம் இந்த இல்லத்திற்கு உள்ளே நுழைகிறோம். ஆகவே, இது இல்ல அறிமுக விழாவாகும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் உதவியாளராகப் பணியாற்றக்கூடிய மாதவன் அவர்களே,
எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
நம்முடைய அமைச்சரைப்பற்றி சொல்லவேண்டு மானால், சிறந்த ஓட்டப்பந்தய வீரர், எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அமைச்சர் அவர். குறிப்பிடத்தக்க வகையில் சொல்லவேண்டுமானால், கோவிட் என்ற தொற்று மிகப்பெரிய அளவிற்கு ஆபத்தாக வந்த நேரத்தில், துணிந்து நம்முடைய முதலமைச்சர் அவர்களை கவச உடையணிந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளையெல்லாம் சந்திக்கச் செய்தவர். எந்த சவால்கள் வந்தாலும், அந்த சவால்களை யெல்லாம் எதிர்கொள்ளக்கூடிய அருமை நண்பர்; ஆற்றல்வாய்ந்த நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் இல்ல அறிமுக விழாவில் கலந்துகொண்டிருக்கவேண்டிய ஓர் அற்புதமான நிகழ்ச்சியாகும்.
பெரியார் திடல் ஒரு நாற்றங்கால் பண்ணை!
மாதவன் அவர்கள், பெரியார் திடலில் பயிற்சி பெற்று, இப்பொழுது அமைச்சரின் உதவியாளராக இருக்கிறார். பெரியார் திடலில் பெற்ற அனுபவங்களை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எப்பொழுதுமே பெரியார் திடல் ஒரு நாற்றங்கால் பண்ணை. அதிலிருந்து விதைகள் வந்துகொண்டே இருக்கும். அந்த விதைகள் பல இடங்களில் இருக்கும்.
அப்படி வந்தவர்தான் தோழர் மாதவன் அவர்கள். நான் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்குத் தலைமை நிலையத்தில்தான் தேதி கொடுப்பார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் என்னிடம், ‘‘நெருக்கடியான நேரத்தில், தேதி கேட்கிறாரே, கிராமத்திற்குச் சென்றுவர வேண்டுமே; ஒரு நாள் முழுவதும் செலவாகுமே’’ என்றார்.
அவருடைய குடும்பமே முழுக்க முழுக்க இயக்கக் குடும்பம்
எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும், நம்முடைய அலுவலகத்திலிருந்து தயாரானவர். அவருடைய குடும்பமே முழுக்க முழுக்க இயக்கக் குடும்பம். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் சொன்னதுபோல, இயக்கத்திற்கு ஒரு பாடிவீடு; பாசறை போன்ற இடம் இது. அப்படிப்பட்ட இடங்களுக்கு நாம் செல்லவேண்டும். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், நாம் சென்று, அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவேண்டும் என்று சொல்லி இங்கே வந்திருக்கிறேன்.
‘பரிபூரணக் குடில்’ அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் திடலில் பயிற்சி பெற்றவர்கள் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
நான் இந்த இல்லத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று மாதவன் குடும்பத்தினர் விரும்பினார்கள். ‘விடுதலை’ குடும்பத்திலிருந்து அய்யா காலத்திலிருந்து பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.அமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள்; சட்டமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள். பெரிய பெரிய அதிகாரிகளாக ஆகியிருக்கிறார்கள். நிலவு கணேசன் நூற்றாண்டு விழாவை அண்மையில்தான் கொண்டாடினோம். ‘விடுதலை’ அலுவலகத்தில் உதவியாளராக இருந்தவர்தான் அவர்.
‘விடுதலை’ குடும்பத்தினுடைய வரலாறே தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்!
அவ்வளவு தூரம் செல்லவேண்டாம்; ‘விடுதலை’யில் ஆசிரியர்களாக இருந்தவர்கள்தான் முதலமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள். ‘விடுதலை’ குடும்பத்தினுடைய வரலாறே தனிச்சிறப்பானதாகும்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த அரங்கண்ணல் அவர்கள், குடிசை மாற்று வாரியத்தில் மிகப்பெரிய சாதனையைச் செய்தவர் அவர்.
கலைஞரோடு மாணவப் பருவத்தில் நெருக்கமாக இருந்தவர் சீனிவாசன். ‘விடுதலை’ நாளிதழின் துணை யாசிரியராக இருந்தவர், நேருவைப்பற்றி ஒரு கார்ட்டூன் போட்டதினால், அவர்மீது கொலை முயற்சி வழக்குப் போட்டார்கள். பிற்காலத்தில், தொழிலதிபராக ஆனவர். திரைத் துறையில் வெற்றிகரமாக இருந்த எங்களுடைய சகோதரர்.
அதேபோன்று, அரசு திருநாவுக்கரசு அவர்கள். ‘பூந்தோட்டம்’ என்ற பத்திரிகையை நடத்தியவர். அவர், ‘விடுதலை’ நாளிதழின் துணை ஆசிரியராக இருந்தவர்.
சிங்கப்பூரிலிருந்து வெளிவரக்கூடிய ‘தமிழ் முரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். சிங்கப்பூர் அரசின் தகவல் தொழில் விளம்பர செயலாளராகவும் இருந்தவர்.
இன்றைக்கும் ‘தமிழ்முரசு’ பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது என்றால், திருவாரூ ரைச் சேர்ந்த கோ.சாரங்கபாணி அவர்களின் கடும் உழைப்பினால்தான்.
‘விடுதலை’ நாளிதழில் கம்பாசிடராக இருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் மாமணி, ‘முகம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி ‘முகம் மாமணி’ என்ற பெயர் பெற்றவர்.
இந்தியாவில் செஸ் சாம்பியனாக டெல்லி என்பவர் இருந்தார். அவர் ‘விடுதலை’ நாளிதழின் கம்பாசிடராக இருந்தவர்தான்.
பல பகுதிகளில் பயிர்களாக மிளிர்கின்றன
அதனால்தான் சொன்னேன், ‘விடுதலை’ ஒரு நாற்றங்கால் பண்ணை என்றேன். அந்தப் பண்ணையிலிருந்து விதைகளை பல பகுதிகளில் பயிர்களாக மிளிர்கின்றன.
நாங்கள் வித்தை தயார் செய்து கொடுப்போம். அந்த வகையில்தான் இன்றைக்கு மாதவன் அவர்கள் அமைச்சருக்குப் பயன்படுகிறார்.
ஆகவே, எங்களுடைய பிள்ளைகள், எங்கள் குடும்பத்தவர்கள் உலகளாவிய பெருமை பெறும்போது, அதனைப் பார்த்து பெற்றோர்க ளாகிய நாங்கள் மகிழ்ச்சியடையக் கூடிய தருணம் இது.
இது வெறும் இல்ல அறிமுக விழா என்று நாங்கள் நினைக்கவில்லை. இது ஒரு நல்ல தருணம். அத னால்தான், எவ்வளவு இடையூறு இருந்தாலும், இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன்.
தலையை காட்டுவது மட்டுமல்ல, தலைக்குள்ளே இருப்பதையும் காட்டவேண்டும்!
சிலர் சொல்வார்கள், ‘‘கொஞ்சம் தலையைக் காட்டிவிட்டு வாருங்கள்” என்று.
தலையை மட்டும் காட்டாமல், கொஞ்சம் பேசிவிட்டும் செல்லவேண்டும் என்று வந்திருக்கிறேன். தலையை மட்டும் காட்டுவது மட்டுமல்ல, தலைக்குள்ளே இருப்பதையும் காட்டவேண்டும் அல்லவா!
நம்மூர் கிராமங்களில் சொல்வார்கள், ‘‘கல்யாணத்தைப் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்” என்று.
இந்த இரண்டையும் என் தலைமையில் செய்து முடித்திருக்கிறார் மாதவன் அவர்கள். நானே அதற்குச் சாட்சியமாக இருக்கிறேன்.
பிள்ளைகள், பேரக் குழந்தைகளின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்!
அவருடைய திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன்; அவர் கட்டிய இல்லத்தையும் நான்தான் திறந்து வைத்திருக்கிறேன். அவருடைய பிள்ளைகள், பேரக் குழந்தைகளின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்.
சிலர் நினைக்கலாம், ‘‘இப்போதே இவருக்கு 92 வயது ஆகிவிட்டதே, இன்னமும் இவருக்குப் பேராசையாக இருக்கிறதே” என்று நினைக்கலாம்.
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் என்ன சொல்வார்கள், ‘‘எல்லாம் அவன் செயல்” என்று மேலே கையைக் காட்டுவார்கள்.
நானும் சொல்கிறேன், ‘‘அவன் செயல்தான்” ஒப்புக்கொள்கிறேன். யார் செயல்? அறிவாளி, விஞ்ஞானி செயல்.
இப்போது செயற்கை நுண்ணறிவு என்று ஒன்று வந்தாகிவிட்டது.
எனக்கு சரியான அறிமுகம்!
பெரியாரின் மாணவன் என்று அடிக்கடி நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். அதுதான் எனக்கு சரியான அறிமுகமாகும்.
அந்த பெரியாரின் மாணவன் என்பதற்கு என்ன இலக்கணம் என்றால், வாழ்நாள் முழுவதும் புதுப்புதுச் செய்திகளை, அறிவார்ந்த செய்திகளை, அறிந்து கொண்டே இருப்பவன், அறிய ஆசைப்பட்டு உழைத்துக் கொண்டே இருப்பவன்தான் பெரியாரின் மாணவன்.
‘‘சிந்திக்கச் சொன்னார் பெரியார்!’’
அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்தக் கொள்கையில் இருந்தாலும், ‘‘சிந்திக்கச் சொன்னார் பெரியார்.” இந்த வரிதான் இப்பொழுது எங்கே பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
என்னுடைய கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுகூட அய்யா அவர்கள் சொல்லவில்லை. சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் சொன்னார்.
அப்படி சிந்தித்ததினால்தான், இவ்வளவு பெரிய வசதி, வாய்ப்புகள். திருமணத்தையும் நடத்தி விட்டார். நல்ல அளவிற்கு அவருடைய பெற்றோர் பெயரில் இல்லத்தினைக் கட்டியிருக்கிறார்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
இல்லத்தினுள் பெரியார் நூலகம்!
ஒரு இல்லம் என்றால், அதில் என்ன இருக்க வேண்டும்? புதிய இல்லத்தைக் கட்டியவுடன், அந்த இடம் பாருங்கள்; இந்த இடம் பாருங்கள் என்றுதான் காட்டுவார்கள். ஆனால், நம்முடைய மாதவன் அவர்கள் கட்டிய இல்லத்தில், ‘பெரியார் நூலகத்தை’ ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்.
பிள்ளையார் எதற்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள்!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டியது பூஜை அறை என்று சொல்வார்கள் ஆன்மிகவாதிகள். வருமான வரித் துறையினர் பூஜை அறைக்குள்தான் நேரே சென்று சோதனை செய்கிறார்கள். பிள்ளையார் சிலையை நகர்த்தும்போது, ஒரு பாதாள அறை இருக்கிறது; அதற்குள் நிறைய பணக்கட்டுகள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். பிள்ளையார் எதற்காக எல்லாம் பயன்படுகிறார் என்பதை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
ஓர் இல்லத்தில் நூலகம் அமைந்தால், புத்தகங்களு டன் அமைந்தால், நம் உள்ளமெல்லாம் புத் அகங்களாகும். புதிய உணர்வு படைத்தவர்களாக இருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
புதிய இல்லத்தை இங்கே திறந்து வைத்தி ருக்கின்றோம். எந்த இடத்திலாவது, எங்கேயாவது பூசணிக்காய் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்களா என்று பாருங்கள்; இல்லவே இல்லை. ஆனால், ஒரே ஓர் இடத்தல் பூசணிக்காய் இருக்கும்; எங்கே என்றால், சமையலறையில், சமையல் செய்வதற்காக இருக்கும்.
பூசணிக்காயில், அல்வா செய்யலாம், மோர் குழம்பு வைக்கலாம். அப்படியில்லாமல், பூசணிக்காயை சாலையில் உடைப்பதற்காக அல்ல. அப்படி உடைத்து, அதன்மீது இரு சக்கர வாகனத்தில் வருபவர் ஏற்றி, மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பதற்காக அல்ல.
பூசணிக்காயை எதற்குப் பயன்படுத்தவேண்டுமோ, அதற்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். பூச ணிக்காய்மீது நமக்கொன்றும் வெறுப்பு கிடையாது. நெய்யின்மீது மட்டும் நமக்கு என்ன வெறுப்பா? அதை நெருப்பின்மீது ஊற்றுகிறார்களே என்றுதான் வருத்தம்.
மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் மாதவன்!
ஆகவேதான், நல்ல அளவிற்கு இல்லத்தைக் கட்டி முடித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் மாதவன். இந்தக் கொள்கையை அவ ருடைய குடும்பத்தினர் நல்ல அளவிற்குப் பின்பற்றியி ருக்கிறார்கள்.
பெரியார் நடத்திய போராட்டங்களில், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டத்தின் பங்கு என்பது கொஞ்சம் நஞ்சமல்ல, ஏராளமானதாகும்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, சிறப்பான நிகழ்ச்சி இது. இதில் நான் கலந்துகொள்வது என்பது பிரச்சா ரத்திற்காகதான். இல்ல அறிமுக விழாவிற்குச் சென்று வாருங்கள், சாப்பிட்டு வாருங்கள் என்பது மட்டுமல்ல; உங்களையெல்லாம் ஏன் அமர வைத்துப் பேசுகிறோம் என்றால், வீடு என்றால் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
வீடு என்றால், கையை மேலே காட்டிவிட்டார்கள் நமக்கெல்லாம்! அவர்கள் இருக்கும் இடத்திற்கு ‘அக்ரகாரம்’ என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் சொன்ன படிக்கட்டு ஜாதிமுறை!
மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால், ஜாதியை பிரித்தது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட வன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லி, நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி, பெண்கள் எல்லாவற்றிற்கும் கீழே என்றார்கள்.
அதைத்தான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னார், படிக்கட்டு ஜாதி முறை என்றார்.
நான்கைந்து படிக்கட்டு முறை வைத்திருக்கிறார்கள். சரி நம்மையெல்லாம் உயர்த்தியிருக்கிறார்கள் என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம். மேலே உள்ளவன் இறங்கி வருவதற்குப் படிக்கட்டே கிடையாது. படிக்கட்டு ஜாதி முறை இருந்தாலும், மேலே ஏறியவன் அங்கேயேதான் இருக்கவேண்டும்; கீழே இருப்பவன் கீழேயேதான் இருக்கவேண்டும். மேலே இருப்பவன் கீழே வரமாட்டான்; கீழே இருப்பவனால், மேலே செல்ல முடியாது.
பெரியாரால், நாமெல்லாம் முதுகெலும்போடு இருக்கிறோம்
இதை அழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளர் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதினால், நாமெல்லாம் முதுகெலும்போடு இருக்கிறோம்.
நம்முடைய மாதவன், அவருடைய வாழ்விணையர்; இவர்களுடைய பிள்ளை, அகில இந்திய அளவில் பரிசு பெற்றிருக்கிறார். 247 எழுத்துகள் அத்துணையும் பளிச்சென்று சொல்லி பரிசு வாங்கியிருக்கிறார்.
பெரியார்தான் யோசனை செய்தார்; இங்கிலீஷ்காரன் 26 எழுத்தோடு நிறுத்திவிட்டான். தமிழில் ஏன் 247 எழுத்துகளை வைத்துக்கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெரியார் சிந்தித்தார்.
எத்தனையோ தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்கள் அன்றைக்கு இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு சிலர் திடீரென்று தமிழ்மீது பற்று இருப்பதுபோன்று பேசுகிறார்கள். பைத்தியம் பிடித்தவனிலிருந்து நல்ல அறிவு இருக்கின்றவன் வரை பல பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பைத்தியக்காரனுக்குப் பின்னால், ஒரு பத்து பேர் இருப்பார்கள். அங்கேயும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழில் உள்ள எழுத்தைக் குறைக்கவேண்டும் என்று அய்யா பெரியார் சொன்னார். 50 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு அய்யா அவர்கள் சென்றபொழுது, நானும் அவரோடு சென்றிருந்தேன்.
‘தமிழ்முரசு’ பத்திரிகைக்குப் பெரியார் அளித்த பேட்டி!
‘தமிழ்முரசு’ ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள், செய்தியாளரை அனுப்பி, ஒரு மணிநேரம் பேட்டி எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் முழுவதும் அந்தப் பேட்டியை வெளியிட்டார்கள்.
அப்பொழுது அந்தச் செய்தியாளர் கேள்வி கேட்கும்பொழுது, ‘விடுதலை’யில் லை எழுத்தைப் போடும்பொழுது, புதிதாகப் போடுகிறீர்களே, ஏட்டிக்குப் போட்டியாக போடுகிறீர்களா? என்று கேட்டார்.
எல்லோரும் செய்வதை நாம் செய்யக்கூடாது என்பதற்காக அதனை செய்தோம்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்
முழுக்க முழுக்க சிக்கனத்தைக் கருதியது!
பெரியார் எழுத்துகள் அவை. அந்தப் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் முழுக்க முழுக்க சிக்கனத்தைக் கரு தியது; அறிவைக் கருதியது; பகுத்தறிவைக் கருதியது.
‘கை’ என்ற எழுத்தை இப்படி எழுதுகிறீர்கள்; லை போடும்பொழுது மட்டும், யானை துதிக்கைப் போன்று போடாமல், லை என்று பயன்படுத்துங்கள் என்றார்.
வெள்ளைக்காரன் எப்படி இங்கிலீஷ் எழுத்துகளை 26 என்று வைத்திருக்கின்றானோ, அதுபோன்று தமிழ் எழுத்துகள் குறைந்தால் நம் பிள்ளைகளுக்கு வசதியாக இருக்குமே என்றார்.
எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர்
எம்.ஜி.ஆர். அரசு போட்ட உத்தரவு!
பெரியார் எழுத்துகளால், தமிழ் எழுத்துகள் சுருங்கின. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, அவர் உத்தரவுப் போட்டார். எங்கெல்லாம் தமிழ் பாடப் புத்தகங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்று வந்தாயிற்று.
இன்றைக்குச் சில பேர் உளறிக் கொண்டிருக்கிறார்கள், பெரியார், தமிழ் என்றெல்லாம்.
‘‘பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!’’
ஆனால், நல்ல அளவிற்குப் புரிந்துகொண்ட ஓர் அரசாங்கம், ஒரு தனி நபர், தனி தலைவர் கண்டு பிடித்ததை வைத்துக் கொண்டு, அந்த எழுத்தை, அதிகாரப்பூர்வமாக ஆக்கி, உலக நாடுகள் அதைப் பின்பற்றி, சிங்கப்பூர், மலேசியா, தமிழர்கள் வாழக்கூடிய இடத்தில், தமிழ் எழுத்துகளைச் சுருக்கியிருக்கிறார்கள். ‘‘பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’’ என்ற புத்தகம் உள்ளது.
அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
தமிழில் உள்ள பழைய எழுத்துகள் மிகவும் கடினமாக இருக்கும். உயிர், உயிர்மெய் எழுத்து. சில எழுத்துகளைப் பெரியார் தேவையில்லை என்று தள்ளினார்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்த புத்தகம் பல லட்சக்க ணக்கான பிரதிகள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.
எம்.ஜி.ஆர். அரசு ஆணையுடன் – ‘திராவிட மாடல்’ அரசினுடைய தொடர்ச்சி.
தமிழ்நாடு அரசு ஆணை!
பெரியார் என்ன செய்தார்? பெரியார் மண் என்பதற்கு என்ன அடையாளம்? என்றால், பெரியார் நூற்றாண்டை கொண்டாடுகின்ற நேரத்தில், தமிழ்நாடு அரசு ஆணை – பொதுச் செய்திகள் தொடர்புத் துறை, செய்தி வெளியீடு – 19.10.1978.
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழ்நாடு அரசு அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.
பெரியார் நூற்றாண்டிற்காகவே இதனைச் செய்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்கவும், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரின் பரிந்துரையை ஏற்றும், சீர்திருத்திய எழுத்துகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ் எழுத்து வடிவங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், உள்ளாட்சித் துறை வரம்பிற்குட்பட்ட நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும், தமிழக அரசின் வரம்பிற்கு உட்பட்ட வாரியங்கள், கழகங்கள், நிறுவனங்களிலும் பின்பற்றவேண்டும்.
ஏடுகளுக்குப் பரிந்துரை
தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ்களும், பருவ ஏடுகளும், தமிழ்ப் புத்தகம் வெளியிடுவோரும், அச்சிடுவோரும் திருத்திய, சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்களைக் கையாளவேண்டும் என்று அரசு பரிந்துரை செய்கிறது.
அது இன்றைக்கு நடைமுறைக்கு வந்தாகிவிட்டது.
ஏன்? எதற்கு? எப்படி? என்று சொல்லக்கூடியது பெரியாருடைய சிந்தனை!
உலகில், ஒரு தனி மனிதன் – இத்தனைக்கும் அவர் பள்ளி, கல்லூரிக்குச் சென்று படிக்காதவர். ஆனால், அவருடைய சுதந்திரச் சிந்தனை, ஆக்கச் சிந்தனை – பகுத்தறிவு – ஏன்? எதற்கு? எப்படி? என்று சொல்லக்கூடியது பெரியாருடைய சிந்தனை.
உழைப்பு – யார் எதிர்த்தாலும் நான் துணிந்து செய்வேன் என்றார். 1935 ஆம் ஆண்டிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை விடுதலை நாளித ழிலேஅறிமுகப்படுத்தி விட்டார்.
பெரியாருடைய கொள்கை ஒருபோதும் தோற்காது – பெரியார் ஒருபோதும் தோற்கமாட்டார்!
1935 ஆம் ஆண்டில் அவர் செய்தது – 1978 ஆம் ஆண்டில் அரசு ஆணையாக வருகிறது என்றால், பெரியாருடைய தொலைநோக்கு – பெரியாருடைய கொள்கை ஒருபோதும் தோற்காது – பெரியார் ஒருபோதும் தோற்கமாட்டார். பெரியார் வெற்றி பெறுவார். வேண்டுமானால், அந்த வெற்றி கொஞ்சம் தாமதமாகலாம் என்று சொன்னார்.
எங்களுக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி!
நாங்கள் மட்டுமல்ல, எங்கள் பிள்ளைகள் – தமிழ்இனி – மிகப்பெரிய வாய்ப்பைப் பெறும் என்று இன்றைக்குச் சொன்னது இருக்கிறதே, அது ஒரு போனஸ் மகிழ்ச்சி.
திருமணம் – அந்தத் திருமணத்தையும் தாண்டி, வீடு கட்டியிருக்கிறார்; குழந்தையும் பெற்றிருக்கிறார்; பெற்ற குழந்தை அறிவாளியாக இருக்கவேண்டுமே என்ற கவலை எல்லா பெற்றோருக்கும் உண்டு. நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடிய அளவிற்கு, வேறு யாரும் சுலபத்தில் சாதிக்க முடியாததை, எங்கள் சுயமரியாதை இயக்க பெரியாரின் பெருங்குடும்பத்தைச் சேர்ந்த பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் மாதவன்.
பெரியாரால் என்ன பயன்? என்றால், இதுதான் பயன்.
அறிவின் தேக்கம் என்று அருமையாகச் சொன்னார்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும் –
மண்டைச் சுரப்பை உலகு தொழும் –
அவர்தாம் பெரியார்!
மண்டைச் சுரப்பு – அது சுரந்துகொண்டே இருக்கும். அந்தச் சுரப்பினுடைய சிறப்புதான் இந்த வெற்றி!
ஆகவே நண்பர்களே, வீடு கட்டியிருக்கிறார் – இதிலிருந்து என்ன தெரிகிறது?
சிக்கனமாக வாழ்ந்திருக்கிறார்கள் – கொள்கையோடு வாழ்ந்திருக்கிறார்கள்!
சிக்கனமாக வாழ்ந்திருக்கிறார்கள்; ஒழுக்கத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்; கொள்கையோடு வாழ்ந்திருக்கி றார்கள். ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்’’ என்று எல்லா துறைகளிலும் வளர்ந்தி ருக்கிறார்கள்.
ஆகவே, அத்துணை பேரையும் மனமார வாழ்த்துகின்றோம்.
மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இந்த இல்லத்தைக் கட்டியிருக்கிறார். இந்த இல்லத்திற்குள் நுழையும்போது நான் இடதுகாலை தூக்கி வைத்துத்தான் வந்தேன். இரண்டு காலும் நம்முடைய கால்கள்தான்.
வலது காலை எடுத்து வைத்து வா, வா, வா என்று இங்கே பாட்டுப் பாடவில்லை. இடது காலில் அடிபட்டால், பரவாயில்லை என்று நாம் விட்டுவிடு வோமோ?
கால்களையே பிரித்தவர்கள்,
ஆட்களைப் பிரிக்காமல் இருப்பார்களா?
இதிலிருந்து ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; கால்களையே பிரித்தவர்கள் இருக்கிறார்கள் என்றால், ஆட்களைப் பிரிக்காமல் இருப்பார்களா?
ஆட்களைப் பிரித்ததோடு அவர்கள் நிற்க வில்லை. அய்ந்தறிவு உள்ளவற்றையும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக, மாட்டுப் பொங்கல் கொண்டாடு வார்கள் அல்லவா; இந்த ஆண்டு நாங்கள் எப்படி கொண்டாடினோம் என்றால், எங்கெங்கேயெல்லாம் எருமை மாடு இருக்கிறதோ, அவற்றையெல்லாம் கொண்டு வந்து, மாலை போட்டுக் கொண்டாடுங்கள் என்றோம்.
எருமை மாடுதான் கெட்டிப் பால் கொடுக்கிறது; அதிகமாகக் கொடுக்கிறது. எருமைப் பால் தயிர்தான் நன்றாக இருக்கிறது என்று நம்முடைய தாய்மார்கள் எல்லாம் சொல்வார்கள்.
இப்பொழுது ‘‘கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு’’ என்று பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒவ்வொரு துறையிலும் இப்போது பார்த்தீர்களே யானால், மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
‘‘தொடதே, எட்டி நில், படிக்காதே, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இரு’’ என்றெல்லாம் மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
மனிதருக்குள் மட்டுமல்ல; மாட்டிலும் பேதத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்!
மனிதருக்குள்தான் பேதத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், மாட்டிலும் பேதத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.
உயர்ந்த ஜாதிக்காரர்கள்தான் நகருக்குள் இருக்க வேண்டும்; தாழ்ந்த ஜாதிக்காரன், குப்பை மேட்டில், அசிங்கமான பகுதியில் இருக்கவேண்டும் என்று மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்!
அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, மனுதர்மத்தை ஆட்சி பீடத்தில் அமர வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
அதனை எதிர்த்துத்தான் மிகப்பெரிய போராட்டம் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கொள்கை வெற்றி – தன்னம்பிக்கை வெற்றி பெறுகிறது
ஆகவேதான் நண்பர்களே, முதலாவதாக இங்கே மூடநம்பிக்கைக்கு இடமில்லை; தன்னம்பிக்கை வெற்றி பெறுகிறது.
இரண்டாவதாக, கொள்கை வெற்றி பெறுகிறது.
மூன்றாவதாக, குழந்தைகள் வரையில் இந்தக் கொள்கை ஆழமாக வேரூன்றிய நேரத்தில், அந்தக் குழந்தைகள் அறிவுப்பூர்வமான மலர்களாக, பகுத்தறிவுப் பூத்துக் குலுங்குகின்ற காய்களாக, கனிகளாக வரக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.
ஆகவே, இவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்லி, இதுபோன்று மேலும் மேலும் பல வெற்றிகளை நீங்கள் குவிக்கவேண்டும் என்று சொல்லி, அத்துணை பேருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
ஓங்குக புரட்சி!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.