கேள்வி 1: “தமிழ்ப் புத்தாண்டு மற்றும் திராவிடர் திருநாள் அன்று எருமை மாட்டைக் குளிப்பாட்டி மாலையிட்டு ஊர்வலமிடுவீர்!” என்ற தங்களது கோரிக்கை மக்களிடையே போதிய விழிப்புணர்வையும், வரவேற்பையும் பெற்றுள்ளதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
– ச.சாந்தி, நாமக்கல்.
பதில் 1: கடைசி நேரத்தில்தான் – பல பணிச் சுமைகளிடையே இது பற்றிய அறிக்கை – வேண்டுகோள் தந்த நிலையிலும் பல ஊர்களிலும், குறிப்பாக சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள், பொங்கல் பெருவிழாவில் நடத்தப்பெற்றதும் மிகவும் மகிழத்தக்கது.
அடுத்த ஆண்டு முதல் இதனை ஊர் தவறாமல் பல கிராமங்களிலும் ஊர்வலமாக நடத்தி, பண்பாட்டுப் பாதுகாப்பு விழா, “கறுப்பைக் கண்டு மிரளாதீர்! உழைப்பின் சின்னமே கறுப்பு!!” என்ற நமது நாட்டின் பேத ஒழிப்பின் வெளிப்பாடாக அது அமைய வேண்டும்.
– – – – –
கேள்வி 2: “திருவள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது” என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதை தமிழர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?
– எஸ்.பத்ரா, வந்தவாசி.
பதில் 2: இதே தலைப்பில் அடுத்த மாதம் முதல் வாரம் முழுவதும் – வாய்ப்புள்ள ஊர்களில், அரங்க கூட்டங்களோ, பொதுக் கூட்டங்களோ நடைபெற ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து குறைந்தது 100 கூட்டங்களையாவது, நல்ல விளக்கப் பொழிவுகள் மூலம் செய்ய முதலமைச்சர் தந்த தலைப்பு அருமை.
‘திருடர்கள் ஜாக்கிரதை’, ‘திருவள்ளுவரையும், வள்ளலாரையும் களவாணி’களிடமிருந்து காப்போம் வாரீர்! என்ற தலைப்பில் நடத்தலாம்!
– – – – –
கேள்வி 3: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா எனும் பெயரில் சாமியார்களின் நிர்வாண ஊர்வலமும், களியாட்டமும் நடைபெறுவதைப் பார்த்து உலக நாடுகள் கைகொட்டி நகைக்கமாட்டார்களா?
– ரேவதிசுதாகர், புதுச்சேரி.
பதில் 3: ஏற்கெனவே ஒரு பெரும் அமெரிக்க தொழிலதிபர் மனைவியை ஏமாற்ற முனைந்த கதை ஏடுகளில் வந்தபோதே சிரிப்பாய் சிரித்ததே உலகு! என்னே விளம்பரம்! அப்பட்டமான அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கை! மதச்சார்பற்ற ஓர் அரசா இப்படி? மகா மகா தவறு!
– – – – –
கேள்வி 4: வறுமை ஒழிப்பில் இந்தியா தள்ளாடுவதாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வறிக்கைகள் குறித்து தங்கள் கருத்து?
– வ.வெற்றிமணி, மதுரை
பதில் 4: வறுமையை கும்பமேளா ஒழித்துவிடும், கவலைப்படாதீர்கள்! ‘கும்ப்-கர்வ்’ போதுமே!
– – – – –
கேள்வி 5: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட எந்த ஓர் எதிர்க்கட்சியும் முன்வராதது குறித்து?
– கி.காளிதாசன், வியாசர்பாடி
பதில் 5: தி.மு.க. கூட்டணியின் பலமும், தி.மு.க.வின் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வலிவும், கொள்கைப் பார்வையும் மற்றவர்களை மிரளச் செய்து பிடரியில் கால்பட ஓடச் செய்திருக்கிறது! முகவரி இல்லாத. முகவிலாசம் இல்லாத ஒருவர் இதில் பெரிய வீரர் வேடம் போட்டு விண்ணரம் கொட்ட முனைந்து வேடந்தரித்ததுடன் நல்ல வருமானம் – பெருமானம் தேடுகிறார்!
– – – – –
கேள்வி 6: உலகிலேயே முதன்முதலில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் பேசம் மண்ணில்தான் என்று ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் ஆணித்தரமாக கூறுகிறாரே?
– ம.ஏகலைவன், வேலூர்
பதில் 6: அதற்குரிய சான்றாவணங்கள் துணை நிற்கின்றன! ஆய்வறிஞர்களின் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார் நமது ஒப்பற்ற முதலமைச்சர்!
– – – – –
கேள்வி 7: கனிமவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளாரே? இது சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாதா?
– தா.மெய்யறிவு, காஞ்சி
பதில் 7: நிச்சயம்; இப்படிப்பட்டவர்கள் குறி வைக்கப்படுவதை அறிந்து எச்சரிக்கையுடன் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கி அவர்களது உயிரைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமே தராத ஓர் அரசு என்று ‘திராவிட மாடல்’ அரசு என்பதை செயல் மூலம் மக்களுக்குப் புரிதல் ஏற்படுத்த வேண்டும்.
– – – – –
கேள்வி 8: ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த அவதூறுகளே போதும் என்று நம்பும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களைக் குறித்து தங்கள் கருத்து?
– தே.வீரவேங்கை, நாகர்கோயில்
பதில் 8: நல்லாட்சியை அவதூறுகள் மூலம் ஒழித்துவிட முடியாது. அந்த அவதூறுகளைஅதன் விளைச்சல்களுக்கு நல்ல தீனியாக்கிடத் தெரிந்த அரசு ‘திராவிட மாடல்’ அரசு.
– – – – –
கேள்வி 9: தந்தை பெரியார் குறித்து விஷமக் கருத்துகளைப் பரப்பிவரும் அரசியல் கட்சித் தலைவரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றதே, இது நல்ல முன்னுதாரணமா?
– ச.சங்கமித்திரை, நுங்கம்பாக்கம்
பதில் 9: பைத்தியங்களை, அரசியல் கூலிப் படையைப் பெரிதாக்கி, அவர்கள் விரும்பும் விளம்பரங்களைத் தர – மற்றவர் முயலுவது விரும்பத்தக்கது அல்ல.
– – – – –
கேள்வி 10: அமெரிக்காவின் புதிய அதிபர் அறிவித்துள்ள “பிறப்பால் குடியுரிமை இல்லை” என்ற அறிவிப்பு இந்திய வம்சாவழியினருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
– அ.சாக்கியமுனி, செங்கை
பதில் 10: நிச்சயமாக – அந்த உழைப்பாளர்கள் இல்லாமல் அந்த நிருவாகம் முடங்கிப் போகும் என்ற உண்மை விரைவில் அவர்களது கண்களைத் திறக்க உதவும்!
