20.1.2025 அன்றைய தொடர்ச்சி…
தலைவர் தமது உபந்யாசத்தில் சொல்லி இருப்பதில் காணப்படு பவைகளாவது,
“இந்திய மக்களின் அடிமை நிலைக்கு அவர்களது குருட்டுப் பழக்க வழக்கங்களே காரணம். இந்து முஸ்லிம் சச்சரவுகளுக்கு நமது மகாத்மாதான் காரணம். ஏனெனில், மதப்பூசல்களை ஒழிப்பதற்கு (இந்துக்களும், முஸ்லீம்களும்) அவரவர்கள் மதக் கட்டளைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் இந்து மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் மேலும் மேலும் விருத்தி செய்து வளர்க்க வேண்டுமென்று மகாத்மா காந்தி சொல்லுகிறார்.
ஆனால், அவர் சொல்லுகின்றபடி இந்து மதமும், இஸ்லாம் மதமும் இனியும் மேலும் மேலும் வளர்க்கப்பட்டால் கான்பூரில் நடந்த கலகமே தூத்துக்குடியிலும் நடைபெறும் என்பதில் சந்தேகப்பட வேண்டியதில்iல்.
பாம்பையும் மகாத்மாவையும் வணங்கி பேயையும், பிசாசையும், கள்ளும், சாராயமும் வைத்து பூசித்து, ஆண், பெண் குறிகளை சிலையாக பூசனை செய்து அடையாளமாக வெற்றியில் தரித்துக் கொள்வதாய் இருக்கின்ற மதம் எந்த மதம் என்று கேட்கின்றேன்.
இந்து மதத்தில் தேவ அசுரர் சண்டையும், கிறிஸ்தவர் நடத்திய குரூசேட் சண்டையும், இஸ்லாம் மதத்தினர் நடத்திய ஜீஹாத் சண்டையும் (மனித சமுகத்தில் அன்பை விளைவித்தவைகள் ஆகுமா?) குரோதத்தையே விளைவித்தன.
கடவுள் என்பது ஒரு விளையாட்டு சாமான். சுவர்க்கம், மோட்சம் என்பவை தின்பண்டங்கள். நரகம் என்பது ஒரு பூச்சாண்டி. இம்மாதிரி கற்பனைகள் எல்லா மதத்தையுமே பற்றிக் கொண்டிருக்கின்றன.
சமுகம் முன்னேறும்
சுயமரியாதை இயக்கம் எந்த இயக்கத்தையும் தனிப்பட்டு தாக்க… மதம் எல்லாம் ஒருங்கே ஒத்து போனால் மாத்திரம் இந்தச் சமுகம் முன்னேறும் என்று சொல்லுகிறது. ஆனால், இந்து மதம் மிகவும் மோசமானது. அது மனிதனை மிருகப் பிராயத்தில் வைத்திருக்கிறது.
திலகருக்கும், தாசருக்கும் இறுதிச் சடங்குகள் வெகு ஆர்ப்பாட்டமாய் செய்யப்பட்டன. மோதிலால் நேரு அவர்கள் காயத்ரி மந்திரம், ராம பஜனை முதலியவை நடத்தி மோட்சத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது குமாரர், தகப்பனார் அஸ்தியை பிரயாகை ஆற்றில் விட்டார்.
இவைகள் நடத்தப்பட முடியாத கோடிக்கணக்கான மக்கள் நரகத்திற்குப் போகின்றவர்களா என்று கேட்கின்றேன்.
மகாத்மாக்களும் தலைவர்களுமே இக்கதியானால் பாமர மக்கள் கதி என்ன?
கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
மூட எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் அகற்றவே சுயமரியாதை இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
தத்துவார்த்தம் ஓவியம் என்கின்ற சாக்கால் கோயில் கொடுமைகளும், புராண ஆபாசங்களும் நிலைத்திருக்கின்றன.
கொல்லாவிரதம் பூண்டவர் (மகாத்மா) கீதைக்குத் தத்துவார்த்தம் சொல்லி புகழலாம். உயிர் கொலை செய்த யாகத்தை மறியல் செய்த பெண்மணியை கொன்றவனும், பார்ப்பான் செய்யும் தபசை ஒரு “சூத்திரன்” செய்ததற்குமாக “சூத்திரனைக்” கொன்ற வனும் ஆன ஒரு அரசனை இராமாயணம் புகழ்கின்றது.
இத்தகைய நூல்களும், பாத்திரங்களும் காவியத்திற்கும், ஓவியத்திற்கும் ஆதாரமாய் இருந்தால் அத்தகைய காவியமும், ஓவியமும் அழிவதே மேல்.
நீக்ரோவர்
அமெரிக்காவில் நீக்ரோவர் துயரத்திற்கு எந்த நிற இறுமாப்பு காரணமோ அதே நிற இறுமாப்புதான் நமது நாட்டுத் தீண்டாமைக்குக் காரணமாயிருக்கிறது.
இது ஆரியர் ஆதிகாலத்தில் நமது நாட்டில் குடியேறியபோது பழங்குடி மக்களை அசுரர், ராட்சதர், மிலேச்சர், பஞ்சமர், சூத்திரர் என்று இழிவுபடுத்தக் காரணமாய் இருந்தது.
தீண்டாமை என்பது ஏணி மரப்படிபோல் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பிடித்திருக்கின்றது.
தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று பேசும் இந்திய தலைவர்கள் வருணாசிரமத் தருமத்தை ஒழிக்க ஒருப்படுவதில்லை.
தீண்டப்படாதாரைவிட பெண்கள் கேவலமாய் நடத்தப்படுகின்றார்கள். அவர்களுக் குச் சொத்துரிமை இல்லை. அவர்கள் மற்றவர்களின் சொத்தாயிருக் கின்றார்கள். ஆண்களின் உபயோகத்திற்கு உண்டாக்கப் பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மணம் என்று பெயர். பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் இச்சடங்கு ஒழிய வேண்டும். ஆணும் பெண்ணும் தங்கள் முழு சம் மதத்தினால் கூடி வாழவேண்டும். கூடிய பிறகு இஷ்ட மில்லாவிட்டால் பிரிந்து கொள்ள வசதி வேண்டும்.
மக்கள் தனித்தனியாய் வேலை செய்வது அற்றுப்போய் கும்பல் கும்பலாய்க் கூடி வேலை செய்ய வேண்டியதாக ஏற்பட்டன. மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி செய்த வேலைகள் மறைந்து இயந்திரங்களால் அதிக கஷ்டமில்லாமல் வேலை செய்யப்படும் சவுகரியங்கள் ஏற்பட்ட காலத்தில் இந்திய காங்கிரஸ் ஒவ்வொருவனும் தனக்கு வேண்டிய துணியைவும், உப்பையும் தன்னையே செய்து கொள்ளும்படி சொல்லுவது தேச முன்னேற்றத்திற்கு ஒவ்வாத காரியமாகும் என்பதாகவும், மற்றும் பல விஷயங்களைப் பல தத்துவ ஆராய்ச்சியுடன் பேசியிருக் கின்றார். இப்படிப் பேசி இருக்கும் திரு. இராமநாதன் அவர்கள் வைதிக ஒத்துழையாதார் கோஷ்டியில் இருந்தவர் என்பதோடு திரு. காந்தி அவர்களின் நன்நம்பிக்கையைப் பெற்ற பிரதம சீடர்களில் ஒருவராய் இருந்தாரென்பதையும் வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அவரது உபந்யாசத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.
நம்பிக்கை இல்லை
இவரது உபந்யாசம் முழுவதையும் கவனத்துடன் கூர்ந்து வாசித்தால் திரு. காந்தியவர்களின் ஒவ்வொரு திட்டமும் ஆட்சேபிக்கப்படுவதுடன் அதனால் மக்களுக்கு ஏற்படும் கெடுதியும் நன்றாய் விளங்கும். இதில் எந்த அபிப்பிராயமாவது சரியான முகாந்திரம் காண்பித்து எதிர்க்கவோ, கண்டிக்கவோ கூடியதாய் இருக்கின்றதா என்பதை அறிஞூர்கள் ஆலோசித்துப் பார்க்க விரும்புகிறோம். சுயமரியாதை இயக்கம் காந்தியத்தையும், காங்கிரசையும், கதரையும் ஆட்சேபிப்பதின் தத்துவமும் இதுவேயாகும். ஆதலால்தான், தூத்துக்குடி மகாநாட்டில் சில தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாயிற்று. என்னவெனில், திரு. காந்தியவர்களிடம் (அதாவது காந்தியத்தை) நம்பிக்கை இல்லை என்பதாகவும், எதற்காக நம்பிக்கை இல்லை என்பதை விளக்கமாக அத்தீர்மானத்தில் விளக்கப்பட்டும் இருக்கின்றது. ஏனெனில், யாருக்காவது அத்தீர்மானத்திற்கு ஆட் சேபணை சொல்ல ஆசை இருந்தால் அவர்களுக்கு விபரம் தெரிய சவுகரியம் இருக்க வேண்டும் என் கின்ற எண்ணத்தின் மீதே காரணங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அதென்னவெனில்,
1. “மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூட நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கையாளுவதாலும்,
2. தனது செய்கைகளுக்கும் பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் பொறுப்பும், தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் அற்றுப் போவதாலும்,
3. வருணாசிரமம், ராமாராஜ்யம், மனுஸ்மிருதி முதலிய பழைய கொடுங்கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திரும்பிக் கொண்டுவர முயற்சிப்ப தாலும்,
4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடை செய்து வருவதாலும், சமதர்மக் கொள்கைக்கு விரோதியாய் இருப்பதாலும் திரு. காந்தியவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை”
என்று தீர்மானித்திருக்கின்றது.
இந்தத் தீர்மானத்தை ஆட்சேபிக்கின்றவர்கள் பகுத்தறிவற்றவர்களுக்கும், சுய அறிவற்றவர்களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், பாமர மக்களுக்கும் நல்ல பிள்ளையாவதற்கு ஆசைப்பட்டு தந்திர புத்தியுடன் சூழ்ச்சித்திரங்களுடன் இத்தீர்மானத்தைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னால் நாம் அதை சிறிதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். மேலும் அதை பயங்காளித்தனம் என்று தான் சொல்லுவோம். ஏனெனில், தீர்மானத்தில் குறிப்பிட்ட குணங்கள் திரு. காந்தியிடம் இருக்கின்றனவா இல்லையா? என்றும் அக்குணங்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு முரண்பட்டதா இல்லையா என்றும், சுயமரியாதைக்காரர்கள் இக்கொள்கையுடைய வர்களிடம் நம்பிக்கை வைக்க முடியுமாயென்றும் விபரமாக காரணங்காட்டி ஆட்சேபிக்க வேண்டியது சுயமரியாதையுடையவர்கள் கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இம்மகாநாட்டில் இத்தீர்மானம் கொண்டு வந்தவர்களின் உத்தேசமும் காரணமும் என்னவென்றால் “கராச்சி காங்கிரஸ் கொள்கைகளில் மக்கள் ஜீவாதாரவுரிமைக் கொள்கைகள் என்பவையெல்லாம் சுயமரியாதைக் கொள்கைகளே” என்றும், “இனி காங்கிரசுக்கும், காந்தியத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் வித்தியாசமே யில்லை”யென்றும், “சுயமரியாதை இயக்கக்காரர்கள் எல்லாம் காங்கிரசில் சேர்ந்து விடலாம்” என்றும் சிலர் “சுயமரியாதை இயக்கமே தேவையில்லை”யென்றுங்கூட சொல்ல வந்ததாலும் பாமர மக்கள் இதை நம்பி ஏமாந்து போகாமல் இருக்கவும் சரியான கொள்கைகள் காங்கிரசு ஒப்புக்கொள்ளும் வரை காங்கிரசுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் இடையில் வேலியிருக்க வேண்டுமென்றும், எந்தக் காரணம் கொண்டும் சுயமரியாதை இயக்கக்காரர்கள் காங்கிரசில் கலந்து கொள்வதில் மூலம் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையென்று பாமர மக்கள் நினைத்து ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே காந்தியத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்துக் காட்டவே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகும்.
இனி மற்றொரு தீர்மானமென்னவென்றால்,
(தொடரும்)
திருநெல்வேலி ஜில்லா
4ஆவது சுயமரியாதை மகாநாடு
சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு.எஸ். இராமநாதன் அவர் களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதாரகுமாரர். அவர் எம்.ஏ., பி.எல்., படித்துப் பட்டமும், சன்னதும் பெற்று, சென்னை யில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர். ஒத்துழையாமை யின்போது வக்கீல் வேலையையும் தனது சம்பாதனையையும் விட்டு வெளியேறி சிறைச் சென்றவர். இவர் சிறைச் சென்ற காலம் எது என்றால், இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மருமகனை போல் அளவுக்கும், தகுதிக்கும் மீறின மரியாதைகளும், சுக போகங்களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது. திரு. இராமநாதன் அவர்கள் தலையில் கூடையும், கையில் மண்வெட்டியும் கொடுக்கப்பட்டு தெருவில் ரோடு போடும் வேலை செய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்ப்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல், தனி அறையில் அதாவது “கூனுகொட்டடியில்’’ போட்டு மக்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர். இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்டசபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும்.
தவிர, சென்னை மாகாஜன சங்க காரியதரிசி யாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசியாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர தமிழ், கேரளம், கர்நாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாகக் காரியதரிசியாகவும் இருந்தார்.
திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு. காந்தியவர்களால் மிகவும் போற்றப் பட்டவராகவும் இருந்தவர் இவ்வளவும் அல்லாமல், யாதொரு சுயநலப் பிரதிப்பிரயோஜனமும் எதிர்பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ்வியக்கத்தில் உழைப்பவர். அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும், குளறுபடியும், சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கியானமும் இல்லாமல் மிகத் தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர். ஆகவே, இப்படிப்பட்ட ஒருவர் இந்து மகாநாட்டுக்குக் கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுய மரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு உண்மையான வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை’’.
குடிஅரசு – சொற்பொழிவு – 12.04.1931