பார்ப்பனர் சூழ்ச்சியும் – மன்னர்கள் வீழ்ச்சியும்!

Viduthalai
3 Min Read

தூத்துக்குடியில் தமிழர் திருநாள், பொங்கல் விழாச் சிறப்புக் கருத்தரங்கம்

தூத்துக்குடி, ஜன.21- தூத்துக்குடி ‘உண்மை’ வாசகர் வட்டம்’ நடத்திய 35 ஆவது நிகழ்ச்சி, தமிழர் திருநாள், பொங்கல் விழாச் சிறப்புக் கருத்தரங்கமாக நடைபெற்றது.
கழக மாவட்டத் தலைவர் ம.முனியசாமி தலைமையேற்று உரையாற்றினார். பெரியார் மய்யம் காப்பாளர் பொ.போஸ் அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் கழகக் காப்பாளர் சு.காசி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், மாநகரத் தலைவர் த.பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 11.1.2025 அன்று மாலை 5.30 மணியளவில் நடந்த இந்நிகழ்வில் முதலாவதாக உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன், ‘தென்குமரித் திருவள்ளுவர் விழாவின் சிறப்பு’ பற்றி உரையாற்றினார்.

அவர்தம் உரையில், புதுப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஏற்கெனவே முதலில் நிறுவப்பட்ட வரலாறு, முத்தமிழறிஞர் கலைஞரின் திருக்குறள் பணிகள், இன்றைய முதலமைச்சரால் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தின் சிறப்பு, ஆங்கே நடைபெற்ற சொற்போரரங்கங்கள் பற்றியும் ஆழ்ந்ததொரு உரையாற்றினார். தந்தை பெரியார் 1949இல் நடத்திய குறள் மாநாடு, மக்களிடம் சேர்த்த மலிவு விலைக் குறள் புத்தகத்தினையும் நினைவு கூர்ந்தார்.
அடுத்து, ‘அகில் இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டுச் சிறப்பு’ என்ற தலைப்பில் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் உரையாற்றினார்.
‘‘மாநாட்டிற்குச் சென்றோரை அன்புடன் வரவேற்றது, அனைவருக்கும் போதுமான, சுவையுடன் கூடிய சிறப்பான உணவு ஏற்பாடு, தகுந்த வேளையில் தரப்பட்ட தேநீர், சிற்றுண்டி, கேட்டுச் சிந்திக்கத் தகுந்தவாறான பல மாநில உரையாளர்களின் உரைகள், சிறுகனூர் பெரியார் உலகிற்குச் சென்று திரும்பச் செய்த ஏற்பாடுகள், பொது மேடைப் பரப்புரையில் தமிழர் தலைவர், நடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, இனமுரசு சத்யராஜ் ஆகியோரின் கருத்துரைக்கான ஏற்பாடுகள், 92 அகவையிலும் தொண்டர்களோடு ‘நானும் நடக்கிறேன்’ எனப் பேரணியில் கலந்துகொண்ட ஆசிரியர் அவர்களின் பாசம் கலந்த கொள்கை உணர்வு என அனைத்துமே கலந்து கொண்டோரை வியப்படையச் செய்தன.

கிடைத்தற்கரிய பெட்டகம்
மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் உள்பட அனைவரும் ஒருங்கிணைத்து சிறப்பாகச் செய்திருந்தார்கள். கலந்து கொண்டோர்க்கு மாநாடு கிடைத்தற்கரிய பெட்டகமென்பேன். வராதோர் வாழ்நாளில் ஒரு சிறப்பினைக் காணாது தவறவிட்ட வறியோரென்பேன்’’ என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம் ‘பார்ப்பனர் சூழ்ச்சியும் – மன்னர்கள் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.

மன்னர்களை மயக்கமுறச் செய்த பார்ப்பனர்கள்!
முதலாவதாக இத்தலைப்பிலான நூலின் ஆசிரியர் புலவர் கோ.இமயவரம்பன் பற்றிக் கூறினார்.
பார்ப்பனர், திராவிட மன்னர்களை மயக்கமுறச் செய்து தமக்கான நன்மைகளைப் பெற்றுக் கொண்ட வரலாற்றைக் கூறினார். மங்கலங்களாகப் பெற்ற மானியங்களைப் பட்டியலிட்டார்.
வர்ணாஸ்ரம தர்மம் மீறிப் பார்ப்பனர் நாடாண்டது, போர் செய்ததைக் கூறினார். சூழ்ச்சியால் திராவிட மன்னர்கள் பலரை வீழ்த்தியதில் குறிப்பாக வடபகுதியில் வீழ்ந்த நவநந்தரின் வரலாற்றையும், தமிழ்நாட்டில் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் வீழ்ந்த வரலாற்றையும் விரிவாக விளக்கினார். நந்தர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவே தொடர்ந்து பார்ப்பனர் சூழ்ச்சியால் அழிந்தனர் என்பதனையும், திருமலை நாய்ககர் பார்ப்பனர் நலன் பேணுபவராகவே தொடர்ந்து, இறுதியில் ராபர்ட் நௌபிலியின் கருத்திற்கிசைந்தோராய் மாறி, அனைவரையும் ஒருமையுடன் கொண்டு செல்ல முற்பட்ட சூழலில் பார்ப்பனரால் கொல்லப்பட்டார் என்ற வரலாற்றினை நூலிலிருந்து சான்று காட்டி விளக்கிக் கூறினார்.
பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கு தோழர் க.குமரேசன் நன்றியுரையுடன் இரவு 7.40 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அ.பார்த்தசாரதி கண்ணன் உள்பட தோழர்கள் பலர் வருகை தந்து சிறப்புச் செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *