சென்னை, ஜன. 21 – தமிழ்நாட்டில் ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழ்நாட்டில் ஜனவரி 21 முதல் 23 வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது.
ஆசிரியர் – மாணவர் விவரங்களை பதிவேற்ற பிப்.17 கடைசி நாள்!
சென்னை, ஜன. 21- ஒன்றிய அரசின் இணையதளத்தில் பள்ளி மாணவர் – ஆசிரியர் விவரங்களை பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகள் சார்ந்த தரவும், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை U.D.I.S.E. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், அதற்கேற்ப ஒரு பள்ளியில் இருந்து விலகி, மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முடித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு
விண்ணப்பப் பதிவு தேதி அறிவிப்பு!
சென்னை, ஜன. 21- தமிழ்நாட்டில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ மற்றும் ‘சீட்டா’ நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜன. 24 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘டான்செட்’ தோ்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 22 அன்று தோ்வுகள் நடைபெற உள்ளன. முதுநிலை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் நடத்தப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (சீட்டா) மார்ச் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 24 முதல் தொடங்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 21 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை www.tancet.annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேம்பட்ட மகளிர் சிறுநீரகவியல் துறை
சவீதா மருத்துவமனையில் தொடக்கம்
சென்னை,ஜன.21- மகளிர் சிறுநீரகப் பிரச்சினை மற்றும் இடுப்பு சார்ந்த மருத்துவம் – மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை என்ற அதிநவீனத் துறையை சவீதா அறிவியல் கழகத்தின் ஒரு பகுதியான சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்துள்ளது. இடுப்பு சார்ந்த கோளாறுகள் உள்ள பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை அல்லாத பராமரிப்பு இங்கே வழங்கப்படும்.
சென்னை மருத்துவக் கல்லூரி மகளிர் சிறுநீரகவியல் துறையின் மேனாள் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் என்.ராஜமகேஸ்வரி, தொழில் முனைவோர் பூர்ணிமா ஆகியோர் இந்த பிரத்யேகப் பிரிவைத் திறந்து வைத்தனர். சவீதா மருத்துவ – தொழில்நுட்ப அறிவியல் கழகத்தின் நிறுவனர் – வேந்தர் டாக்டர் என்.எம். வீரய்யன், இணை வேந்தர் டாக்டர். தீபக் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் டீன் டாக்டர் ஜெ.குமுதா, மகளிர் சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர். கே. சீதாலட்சுமி, சவீதா மருத்துவக் கல்லூரி – மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பொன்னம்பலம் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இம்மருத்துவமனையின் மகளிர் சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.சீதாலட்சுமி கூறுகையில், “சென்னையில் வாழும் 25.95 லட்சம் பெண்களில், 54.7 சதவீதம் பேர் இடுப்பு சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கூடுதலாக, 62 சதவீதம் பேர் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 சதவீதம் பேர் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர். இந்த நிலைமைகளின் அதிகப்படியான பாதிப்பு, மகளிர் சிறுநீரகப் பிரச்சினைகளின் அடிப்படை சார்ந்து மகப்பேறு மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.