கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான்கானின் வீட்டை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தேசிய காங்கிரஸ் கட்சி (NCP)யின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சல்மான்கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர்.
தன் மகனின் பாந்த்ரா அலுவலகம்முன் அவர் சுடப்பட்டார். கடந்த வியாழனன்று (16.1.2025) அதிகாலையில் பாந்த்ராவில் உள்ள நடிகர் சயிப் அலிகானின் நான்கு அடுக்குமாடி வீட்டிற்குள் புகுந்த ஒருவன், அவரை கத்தியால் பலமுறை குத்தித் தாக்கியுள்ளான்.
இந்நிகழ்வால், மும்பைவாழ் பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களுடைய அதிர்ச்சிக்கான காரணம் புரிந்துகொள்ளக் கூடியதுதான் என்றாலும், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‘ (ஜனவரி 18, 2025) ஆங்கில இதழில், காந்தி என்ற செய்தியாளர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் நிகழ்ந்துவரும் பல்வேறு குற்றங்களின் சதவிகிதத்தை ஆய்வு செய்துள்ள இவர், மும்பை, சென்னை நகரங்கள் நாட்டிலேயே அதிக பாதுகாப்புமிக்க நகரங்களாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.