நாகர்கோவில், ஜன. 16- ஆளுநரின் செயல்பாடு இந்திய அரசியல் அமைப்பிற்கே எதிரானது என்று தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, குளச்சல் அருகே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தகுதிக்குச் சரியா?
உயர்ந்த இடத்தில் இருக்க கூடியவர்களுக்கு நாம் யார்? நமது கடமை என்ன? இந்திய அரசமைப்பு சட்டம் நமக்கு என்ன சொல்லி தந்திருக்கிறது? அதை தாண்டி நாம் எதுவும் செய்யக்கூடாது என்பது கூட தெரியாமல், தம்முடைய பணியை கூட செய்ய முடியாமல் சட்டமன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.
முதலமைச்சர் குறித்து மிஸ்டர் என எக்ஸ் தளத்தில் ஆளுநர் பதிவிட்டு இருப்பது அவருடைய தகுதிக்கு சரியா? அவர் வகித்து வரும் பதவிக்கு அழகா? அழகல்ல. ஆளுநரின் குணம் இதிலிருந்தே தெரிந்து விட்டது.
அவமதிப்பு
ஆளுநரின் செயல்பாடு இந்திய அரசியல் அமைப்பிற்கே எதிரானது. ஆளுநர் சட்டமன்றத்தில் உரையை வாசிக்க வேண்டும், வாசிக்காமல் சென்றால் நாங்கள் என்ன செய்ய? 2023ஆம் ஆண்டு நாட்டுப்பண் பாடும்போதே ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்தே நடந்து செல்கிறார்.
நாட்டுப்பண்ணை ஆளுநர் அவமதிக்கிறார். இதிலிருந்து விடுபட எக்ஸ் வலைதளத்தில் அழித்து அழித்து பதிவுகள் போடுகிறார். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தான் முடிவு செய்ய முடியும். சட்டமன்றத்தில் போதிய நேரம் எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பதை அந்தந்த கட்சி தான் முடிவு செய்து அனுப்புகிறார்கள். அதன்படி அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர்
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள் என ஆளுநர் தெரிவித்துள்ளார். அவர் அடிக்கடி இப்படிப்பட்ட கருத்துக்களை பேசி வருகிறார்.
ஆளுநருக்குரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு முச்சந்தியில் சண்டை இடுவது போல், ஆட்சியிடம் சண்டையிட்டு வருகிறார் ஆளுநர். அதனால், எங்களுக்கு நட்டம் அல்ல. அவருக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். ஆகையால், ஆளுநர் ஒரு அரசியல்வாதியாக செயல்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனக்கூறிய பாஜ அண்ணாமலையின் நல்ல எண்ணத்திற்கு நன்றி.
பொதுவாக அவர் என்னைப் பற்றி எப்போதும் பேச மாட்டார். இப்போது என்னவோ அவர் பேசியிருக்கிறார். ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.