பத்மசிறீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
முதியோர் நல மருத்துவர் சென்னை
முதியோர்கள் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும் இறப்பதற்கும் தொற்று நோய்களே ஒரு முக்கியமான காரணமாகும். இதைத் தடுப்பதற்குத் தடுப்பூசி ஒன்றினால் மட்டுமே முடியும்.
தொற்று நோய்கள் வரக் காரணங்கள்
*நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி குறைகிறது
*சத்துணவுக் குறைவினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம்
*உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் தொற்று நோய்கள் வர வாய்ப்பு அதிகமுண்டு.
*தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாகத் தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்படலாம்.
*ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப்பையில் நீர் தேங்கிப் பூச்சித்தொல்லைகளுக்கு வழிவகுக்கலாம்.
*பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் பிறப்புறப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சித் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டாகலாம்.
*உடலில் இருக்கும் பல நோய்களினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம். உதாரணம் : நீரிழிவு நோய், தைராய்டு தொல்லை, சீறுநீரகச் செயலிழப்பு.
முதுமையில் காணும் தொற்று நோய்கள்
*நெஞ்சக நோய்கள் : ப்ளூ, நிமோனியா, காச நோய்
*சிறுநீர் தாரை நோய்கள் : ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும், பெண்களுக்கு இறுதி மாதவிடாய் சமயத்தில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களினாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சிறுநீர்ப்பை சரிவரச் சுருங்கி விரிவடையாத காரணத்தினால்.
*வயிறு குடல் சார்ந்த பூச்சித் தொல்லைகள். உதாரணம்:
*டைபாய்டு, சீதபேதி, பித்தப்பையில் பூச்சித்தொல்லை மற்றும் கெட்டுப்போன உணவு உண்பதால்
* தோல் சார்ந்த தொற்று நோய்கள்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் படை மற்றும் சிறுசிறு கொப்பளங்கள். அக்கி சார்ந்த அம்மை நோய்களும் வரலாம்
*இதர தொற்று நோய்கள் : மூளை, எலும்பு மற்றும் இதய வால்வுகளிலும் தொற்று நோய்கள் வரலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் !
நோய் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்ற காலம் போய், முதியோர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. சில தொற்றுநோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் அந்நோய்கள் வராமலே தடுத்து நலமாக வாழமுடியும். முதுமைக் காலத்தில் நலமாய் வாழச் சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதுபோலத் தடுப்பூசியும் அவசியம்.
இன்புளுயன்ஸா
இது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இருமலிலிருந்து அல்லது தும்மலிலிருந்து இக்கிருமி மற்றவர்களுக்கு எளிதாகப் பரவி வருகிறது. இந்நோய் முக்கியமாகக் குளிர் காலத்தில்தான் தாக்கும். இந்நோய் வராமல் தடுப்பதற்குத் தடுப்பூசி உண்டு. ஆண்டிற்கு ஒருமுறை ஒவ்வொரு ஆண்டும் போட்டுக்கொள்வது நல்லது. இந்த ஊசியினால் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. இந்த ஊசியை ஆஸ்துமா. நீரிழிவு நோய், இதய நோய் புற்றுநோய் மற்றும் சிறுநீரகத் தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
இன்புளூயன்ஸா தடுப்பூசி யாருக்கெல்லாம் தேவைப்படும்
*குளிர் மற்றும் மழைக் காலங்களில் இருமல் சளி தொல்லையுள்ளவர்கள்.
*ஆஸ்துமா நோயாளிகள்
*தொடர்ந்து புகைப் பிடிப்பவர்கள்
*நுரையீரல் சார்ந்த புற்றுநோய் உள்ளவர்கள்
* நீரிழிவு நோய், இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள்
நிமோனியா
முதியோர்களுக்கு வரும் இருமல் சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுநோய் இந்நோய் உள்ளவர்கள் இருமும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல். உடல்வலி மற்றும் வாந்தி இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சுத் திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும்போது சிலருக்குச் சளியில் ரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (ஸ்சைனஸ்) மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கே ஆபத்தைக்கூட விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாதநிலைகூட ஏற்படலாம்.
முதுமையில் நோயின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக்கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி உண்டு. சுமார் 60 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒருமுறை பிரிவினார் -13 தடுப்பூசியை எடுததுக் கொண்டால் போதுமானது. இணை நோயுள்ள சிலருக்கு ஒரு ஆண்டு கழித்து நிமோவாக் – 23 என்ற இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. இந்தத் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. தேவைப்பட்டவர்கள் இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஒரே சமயத்தில் போட்டுக் கொள்ளலாம்.
நிமோனியா தடுப்பூசியின் பயன்கள்
*நிமோனியா சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது.
*அடிக்கடி மருததுவமனையில் இந்நோய்க்காக சிகிச்சை பெற்ற பணம் செலவழிப்பதைத் தடுக்கிறது.
*குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு இவர்கள் மூலம் இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
*நிமோனியாவினால் ஏற்படும் மரணத்தைக்கூட இந்த ஊசி மூலம் தடுக்க உதவும்.
டெட்டனஸ்
வயதான காலத்தில் அடிக்கடி கீழே விழ, உடம்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகையால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது.
ஹெபடைடிஸ் பி
வயதானவர்கள் எல்லோருக்கும் ஹெபடைடிஸ் பி பரிந்துரைக்கப்படுவதில்லை. அடிக்கடி ரத்தம செலுத்திக் கொள்பவர்கள், குளுக்கோஸ் சார்ந்த திரவ ஊசி போட்டுக்கொள்பவர்கள் மற்றும் நரம்பு ஊசி போட்டுக்கொள்பவர்கள் மற்றும் நரம்பு ஊசி போட்டுக் கொள்பவர்களுக்கு இந்த ஊசி தேவைப்படும். மூன்று ஊசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசி போட்டு கொண்ட பிறகு அடுத்ததாக ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசி, மூன்றாவது ஊசியை ஆறு மாதம் கழித்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.
அக்கி
அக்கி என்பது ஒருவித அம்மை நோயாகும். இந்நோய் சிறுவயதில் சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்குப் பின்னாளில் அக்கியாக வரும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அக்கி வர வாய்ப்பு அதிகம் உண்டு. உதாரணம் : முதுமைப் பருவம், புற்றுநோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் நோய், ஸ்டீராய்டு, புற்றுநோய்களுக்குக் கொடுக்கும் மருந்துகள். 60 வயதைத் தாண்டிய முதியோர்கள் அக்கி நோய்க்கான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் நோய் வராமல் தடுக்க முடியும். ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரு சிறிய சேமிப்பே!