சென்னை, ஜன.12 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லாததால் இதை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகனின் மறைவுக்குப்பின் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவால் அவர் கடந்த டிசம்பர்
14-ஆம் தேதி காலமானதை அடுத்து. இத்தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு, 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (11.1.2025) நடந்தது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பிறகு, பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்:
இந்த இடைத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக்காது. அதனால், இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதே போல் தே.மு.தி.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு
அலைபேசி செயலியை தலைமை செயலாளர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 12- தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. முதலமைச்சர் ஆணைக்கிணங்க, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
16.05.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மூன்று வல்லுநர்கள் கொண்ட போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டிற்கான இயக்க மேலாண்மை அலகு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தினை தேர்வு செய்து பரிசுகள் வழங்கிட மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்களை தேர்வு செய்யும். கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த புகார்கள் அளிக்க ஏதுவாக புதிதாக “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற அலைபேசி செயலி நேற்று (11.01.2025) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும். மேலும் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்திற்கான இலட்சினை (Logo)-யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.