ஈரோடு, ஜன. 11- ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்பு மனு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று (10.1.2025) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ஆம் தேதி கடைசி நாளாகும்.
அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்
இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்!
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மேடை மீது ஏறி
வழிபட பக்தர்களை அனுமதிக்கக் கூடாதாம்!
காவல்துறைக்கு தீட்சதர்கள் கடிதம்
சிதம்பரம், ஜன.11- மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தா்களின் அமைதியான வழிபாட்டுக்கும், பொது தீட்சிதா்களின் பாரம்பரியமான வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளருக்கு பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
கடித விவரம்: மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தா்களின் வழிபாட்டிற்கும் பொது தீட்சிதா்களின் பாரம்பரியமான பூஜை, வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் வருகிற 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தேதிகளில் நடராஜ மூா்த்தி சித் சபை, கனக சபையில் இருந்து வெளியே வந்து விடுவதாலும், விஷேச பூஜைகள் பாரம்பரியமாக நடைபெறுவதாலும் பக்தா்களை கனகசபை மீது ஏறி வழிபட அனுமதிப்பது வழிபாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட
ஆதரவற்ற பெண்கள்
சுயதொழில் தொடங்க மானியம்!
தமிழ்நாடு அரசின் முன்மாதிரி திட்டம்!
சென்னை, ஜன.11- தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது இந்த மானியத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. அதன் பொருட்டு, கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் துவங்க கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மானியம்
வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-45 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர் ஆவார். சுயதொழில் புரிய மானியம் பெற அளிக்கப்டும் விண்ணப்பதுடன் கீழ்க்கண்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய சான்று (Self Declaration Certificate). வருமானச் சான்று (Income Certifiacte). குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox). ஆதார் அட்டை நகல் (Aadhaar Card Xerox). தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று (Any Proof for Current Resident Address). ஆதரவற்ற – நலிவுற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களின் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.