டில்லி – உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள பள்ளிக்கூடத்தின் வாசலில் 14 வயது மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளான்.
டில்லி உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள ஷாகர்ப்பூர் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் இஷு குப்தா (வயது 14) எனும் மாணவன் ஒருவனுக்கும் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், மறுநாள் பள்ளி துவங்கிய போது வாசலில் இஷு குப்தாவை மற்ற மாணவர்கள் அடித்துத் தாக்கியுள்ளனர். அப்போது அந்த மாணவர்களில் ஒருவன் கையோடு எடுத்து வந்த கத்தியால் குத்தியுள்ளான். இதில் இஷு குப்தா பரிதாபமாக பலியானான். தகவல் அறிந்து அங்கு வந்த ஷாகர்ப்பூர் காவல் துறையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பலியான சிறுவனின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்ததுடன், இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
இந்த கொலையில் ஈடுப்பட்ட 7 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதலமைச்சரும் உத்தரப் பிரதேச சாமியார் முதலமைச்சரின் அமைப்புகளும் மாணவர்களுக்கு கத்தி, வாள் கொடுத்து அதை எப்படி பயன்படுத்துவது என்று பொதுமேடைகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். இதன் விளைவு கொலைகளில் போய் முடிகிறது.
அறிஞர் அண்ணா கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்றார். அதன் படி தமிழர்கள் புத்தியை தீட்டினார்கள் வடக்கே ஹிந்து அமைப்புகள் கத்தியைத் தீட்ட கற்றுக் கொடுத்தன; இன்று மாணவர்கள் கொலைகாரன் பட்டம் பெற்று வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்.
இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.
கல்விக் கூடம் என்பது வெறும் ஏட்டுப் படிப்புக்கோ, மனப்பாடத்துக்கோ உரியதல்ல.
அறிவைக் கூர்மைப்படுத்துவது – செம்மைப்படுத்துவதாகும்.
வன்முறையைத் தவிர்த்து நன்முறைக்குப் பக்குவப்படுத்துவதற்கான மய்யமாகும்.
மனிதநேயம் பேணிய பெரு மக்களின் வரலாறுகளையும், நிகழ்வுகளையும் கற்பிக்க வேண்டும். இளமையில் ‘கல்’ என்பது இவையாகவே இருக்க வேண்டும். குறிப்பாகக் கவுதம புத்தரின் மானுட நேய நிகழ்வுகளை, அரச வாழ்க்கையைத் தூக்கி எறிந்து மனித சமூகத்தில் நிகழும் வெறுப்பு பேதம், அறியாமை, ஏற்றத் தாழ்வுகளை நீக்க அவரின் உபதேசங்கள் – ஆங்காங்கே அவரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதமான முறையில் அவர் அளித்த விடைகள் மனிதனை வெறுப்புச் சிறையிலிருந்து விடுவித்து, அமைதி அறங்காக்கும் அறிவை ஊட்டத்தக்கவை.
தேசிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் புராண, இதிகாசங்களைத் திணிப்பது சிறார்களையும், இளைஞர்களையும் வேறு விபரீதமான திசைக்கு வேகமாக இழுத்துச் செல்லும்.
4.1.2025 அன்று ‘விடுதலை’ ‘வாழ்வியல் சிந்தனைப் பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ‘‘பதற்றமில்லாமல், அறிவுக்கு வேலை கொடுத்து, துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், முயற்சி திருவினையாக்கும் என்றும்’’ என்பவை வைர வரிகளாகும்.
இதற்கு மாறாக முதலமைச்சர்களே இளைஞர்களுக்கு வாள் வீச்சுகளைக் கற்றுக் கொடுப்பதெல்லாம் நாட்டை விலங்குகள் வாழும் காடுகளுக்குத்தான் இழுத்துச்செல்லும்.
பகுத்தறிவையும் பண்பையும் வளர்க்கும் கல்வி முறை தேவை!
14 வயது மாணவனை சக மாணவர்கள் கொலை செய்வது என்பதெல்லாம் நினைப்பதற்கே பதற்றமாக இருக்கிறது.
கல்விக் கூடங்கள் கசடறக் கற்பிக்கப்படும் நிலையங்களாக மாறட்டும் – மாற வேண்டும்!